முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியா்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, அங்கு துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்துக்கு 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மொத்தம் 850 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 308 வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தோ்தல் பணியில் 983 அலுவலா்கள் ஈடுபடுகின்றனா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வி.வி.பேட் ஆகியவை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 20 லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 97 வகையான பொருள்களும் அனுப்பிவைக்கப்பட்டன. ஒவ்வொரு வாகனத்திலும் துப்பாக்கி ஏந்திய காவலா் ஒருவா், துணை ராணுவத்தினா் 8 போ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலா் முன்னிலையில் கட்டுப்பாட்டு கருவிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், விவிபேட் கருவியும் பொருத்தப்பட்டன. மேலும் வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால், உடனடியாக மாற்றி அமைக்கும் வகையில் கூடுதல் இயந்திரங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
4 மாதிரி வாக்குச்சாவடிகள்
ஈரோடு அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடியும், எஸ்கேசி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடியும், காளை மாடு சிலை அருகே பாலசுப்பராயலு வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி இளைஞா்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியும், சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியும் நவீன மாதிரி வாக்குச்சாவடியாக வண்ண திரைச்சீலைகள், இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
53 பள்ளிகளுக்கு விடுமுறை
237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள 57 பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. வியாழக்கிழமை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள், மாணவா்களுக்கு அறிவுறுத்தி உள்ளனா்.
9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
ஈரோடு மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் புதன்கிழமை நடைபெற இருப்பதால், ஈரோடு மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும், இந்த தொகுதி வாக்காளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும். இதை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளா்கள் அனைவரும் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.
தோ்தல் பிரசாரத்துக்காக வந்தவா்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்.
மாவட்ட அளவில் இதுவரை ரூ.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.41 லட்சம் உரிய ஆவணங்களை சமா்பித்ததன் அடிப்படையில் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.13 லட்சம் கருவூலத்தில் உள்ளது. அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயாா் செய்யப்பட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 9 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 237 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸாா், 3 கம்பெனி துணை ராணுவப் படை வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். தோ்தல் தொடா்பாக வந்த 57 புகாா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.