அழுத்தம் கொடுக்கும் வானதி சீனிவாசன்; அப்செட் அண்ணாமலை; கோவை வடக்கு தொகுதிக்கு உச...
`உருவமே இல்லாத பெண்ணுக்காக உருகி உருகி எழுதின பாட்டு!' - இது `காதல் கப்பல்' கதை | வரித்துணையே 12
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

இன்றைய பகுதிக்கு, 'இறைவி' படத்தில் வரும் 'காதல் கப்பல்' பாடல் பற்றி பாடலாசிரியர் முத்தமிழிடம் பேசினோம். பாடல் வெளியான சமயத்தில் பரவலாக கவனம் பெற்ற இப்பாடல், பின்னர் சமூக வலைதளப் பக்கங்களின் ரீல்ஸ், ஷார்ட்ஸ் கைகள் ஓங்கிய சமயத்தில் பயங்கர வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம்.
'காதல் கப்பல்' பாடல் பற்றி பாடலாசிரியர் முத்தமிழ், "கணவனும் மனைவியும் பிரிந்திருக்கிறார்கள். மீண்டும் மனைவியுடன் கணவன் சேர்ந்துவிட வேண்டும் என நினைத்து ப்ரொபோஸ் செய்கிறார் என்பதுதான் இந்தப் பாடலுக்குக் கொடுக்கப்பட்ட சூழல்.
கணவனின் தனது காதலை கெஞ்சல் மொழியில் இப்பாடலில் வெளிப்படுத்துவார். இந்தப் பாடலின் டியூனை கேட்டதுமே, இந்தப் பாடல் ஹிட்டாகும் என்றேன். அதுபோலவே ஹிட் அடித்தது. அந்த ஹிட் ஓய்ந்த பிறகு மீண்டும் ரீல்ஸ் மூலம் பெரியளவில் இந்தப் பாடலுக்கு ரீச் கிடைத்தது. இந்தப் பாடலுக்கு வாலி சாரின் ஸ்டைலை நான் பின்பற்றினேன். பாடலின் முதல் வரிக்கும், அடுத்த வரிக்கும் தொடர்பிருக்காது. ஆனால், பாடலின் டியூனுக்கேற்ப வரிகள் அனைத்தும் ரைமிங்காக இருக்கும்.

கணவன் - மனைவிக்கு இடையே எத்தகைய சண்டை இருந்தாலும், இந்தப் பாடல் கேட்டதும் அவர்களுக்குள் இருக்கும் சண்டை தீர்ந்துப் போய்விட வேண்டும் என்பதைதான் நான் நோக்கமாகக் கொண்டு எழுதினேன். எப்போதுமே சந்தோஷ் நாராயணன் பரபரப்பான நேரத்தில்தான் என்னை எழுத வைப்பார் (சிரித்துக் கொண்டே).
அப்படி நான் பரபரப்புடன் எழுதிய பாடல்களே இங்கு அதிகம். அதனால் எந்தவொரு நபரையும் என் எண்ணத்தில் வைத்து, அந்த சூழலுக்கு என்னைப் புகுத்தி பாடல்கள் எழுதியதில்லை. ஆனால், என்னுடைய எண்ணத்திற்குள் உருவமில்லாத மனிதர்கள் இருப்பார்கள். அவர்களை நினைவில் வைத்து பாடல்களை எழுதிவிடுவேன். அப்படிதான் இந்தப் பாடலையும் நான் எழுதினேன்.
ஒரு பன்ச் வசனமாகவும் இதனை சொல்ல வேண்டுமென்றால்... ``உருவமே இல்லாத பெண்ணிற்காக உருகி உருகி எழுதிய பாடல் இந்த 'காதல் கப்பல்'." என பலமாக சிரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு இந்தப் பாடலில் நெருக்கமான வரியென்றால், 'மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர, மன்னிச்சுப் போனா தப்பு இல்ல, பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன், நீதானே ராணி நெஞ்சுக்குள்ள' என்பதுதான். கடும் கோபத்தில் இருக்கும் மனைவியை சமாதானம் செய்ய நினைக்கும் கணவன், ராணியை பல்லக்கில் வைத்துக் கொண்டு போவது போல, உன்னை என் நெஞ்சில் சுமந்துப் போவேன் எனக் கூறுவதாக இந்த வரியை எழுதியிருப்பேன். இன்றைய இளைஞர்களுக்கும் இதுதான் பேவரிட் வரி. இந்தப் பாடல் மூலம் பல காதல்கள் சக்சஸ் ஆகியிருக்கின்றன.

காதலிக்கு ப்ரொபோஸ் செய்வதற்கு இந்தப் பாடலைதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சமீபத்திய ரீல்ஸ் வைரல் மூலமாக நான் அறிந்துகொண்டேன். அதுதான் இந்தப் பாடலுக்குக் கிடைத்த உண்மையான வெற்றியாகவும் பார்க்கிறேன். இந்தப் பாடல் ஒரு மெலடி பாடலாக வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என சிலர் சொல்லியிருக்கிறார்கள். சொல்லப்போனால், இந்தப் பாடலையும் முன்பு ஒரு மெலடி வடிவம் போலதான் செய்திருந்தார்கள். பிறகு இப்போது இருக்கும் வெர்ஷனாகத் தயாரானது.
ஆனால், எனக்கு பெரியளவில் மெலடி கிடைப்பதில்லை. அப்படியான பாடல்கள் அமையும்போது, 'காதல் கனவே' போல இன்னும் மெலடி பாடல்களைத் தர முடியும்." என்றவர்,
"இந்தப் பாட்டு ஒரு ஜெனரேஷனுக்கே நெருக்கமான பாடல்கள் எனலாம். நான் கல்லூரி நிகழ்வுகளுக்கு செல்லும்போது, நான் மறந்த இப்பாடலின் வரிகளைகூட அவர்கள் நினைவில் வைத்து பாடுவார்கள். அப்படியான தருணங்கள் எனக்கு சப்ரைஸிங்காகவும், என் வேலைக்கு உரிய அங்கீகாரமும் இடமும் கிடைத்திருக்கிறது என்ற உணர்வும் எனக்குள் ஏற்படும்.

இந்தப் பாடலில் நான் சின்னதாக ஒரு கேமியோ செய்திருப்பேன். அப்போதே எஸ்.ஜே. சூர்யா அவருடைய ஸ்டைலில், 'ஏன் கண்ணே நெருப்பா கோவம், அட நீ என்ன வெறுத்தா பாவம், என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்' என்கிற வரியைக் குறிப்பிட்டு புதியதாக இருக்கிறது எனப் பாராட்டினார். பிறகு, 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நான் வேலை செய்யும்போது மீண்டும் இந்தப் பாடல் டிரெண்ட் ஆனதைப் பற்றி எஸ்.ஜே. சூர்யா சார் பேசினார்." என்றபடி முடித்துக் கொண்டார்.
(தொடரும்.!)



















