கோபம், வெதும்பல், ஆற்றாமை, உற்சாகம்.. களேபரங்களுடன் இறுதியான கூட்டணி! யாருக்கு ல...
ஹார்மோன்களும் மகிழ்ச்சியும்: உள்ளத்தின் வேதியியல்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இயற்கையில் படைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் கொடுக்க இயலாத ஒன்று மகிழ்ச்சி ஆகும். இந்த மகிழ்ச்சியை தனது “உள்ளம்” வழியாகக் கொடுக்கக்கூடிய உயர்திணையாகிய ஒரே இனம் “மனித இனம்”. இந்த உள்ளம் தான் “மனது” “எண்ணம்” “ஆத்மா” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இவையனைத்தும் ஆறாம் அறிவின் மறுபக்கம் ஆகும்.
இதன் காரணமாகத்தான் “மகிழ்ச்சி” உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து வரவேண்டும்” என்பது நம் முன்னோர்களின் குரல்.

உள்ளத்தின் சிறப்பு
மனிதனைத் தவிர பிற உயிரினங்களின் வாழ்க்கையானது உணவு, உறக்கம் மற்றும் பாதுகாப்பு (Survival Instincts) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே சுற்றி வருகின்றன. இதற்கு விதி விலக்காக மனிதன் பிறரோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அவனது “உள்ளம்” உதவி புரிகிறது.
இதற்காகவே கலை, இசை, இலக்கியம் மற்றும் நகைச்சுவை போன்றவற்றை கோயில் திருவிழா, பண்டிகைக் காலங்களில் கலாசார நிகழ்ச்சிகளை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியினை கொடுத்து இருக்கிறார்கள். இதனை "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்ற உயர்ந்த நோக்கத்தில் பிறருக்கு உதவுவதில் ஒருவித ஆத்மார்த்தமான மகிழ்ச்சியை பிறருக்கு அளிப்பதில் நமது முன்னோர்கள் வழியே பின்பற்றி வருகிறோம்.
உள்ளம் vs உணர்வு
மகிழ்ச்சி என்பது அடி மனம் அல்லது உள்ளத்தின் மூலம் வரக் கூடியது. சந்தோஷம் என்பது ஐம்புலன்கள் சார்ந்து வரக் கூடியது எனலாம். இதன் மூலம் மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் நீண்ட இடைவெளி இருப்பதனை உணர முடிகிறது.
உள்ளத்தின் ஆரோக்கியம்
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பது உள்ளத்தில் ஏற்படுத்தப்படும் மகிழ்ச்சி, உடலில் உள்ள செல்களைப் புதுப்பித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதுதான் ஆயுள் நீடிப்பு குறித்த உளவியல் உண்மை.
உள்ளம் மூலம் நாம் மற்றவர்களை மகிழ்விக்கும்போது நம் மூளையில் 'ஆக்ஸிடோசின்' (Oxytocin) போன்ற நல்ல ஹார்மோன்கள் சுரக்கின்றன இது நம் இதயத் துடிப்பைச் சீராக்கி, பதற்றத்தைக் குறைக்கிறது. உங்கள் முன்னோர்கள் சொன்னது போல, "மகிழ்ச்சியே சிறந்த மருந்து."
மனிதன் எந்திரமாக மாறிவரும் இந்த அவசர உலகில், உள்ளத்திலிருந்து வரும் ஒரு புன்னகையும், அடுத்தவரை மகிழ்விக்கும் ஒரு சிறு செயலும் தான் நம்மை 'உயர்திணை' என்று பறைசாற்றுகின்றன.

உளவியல் பார்வை
மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் உள்ள இடைவெளியை நவீன உளவியல் (Modern Psychology) ரீதியாக பார்க்கலாம்.
· மகிழ்ச்சி (Eudaimonic Wellbeing)
மனநிறைவுடன் மற்றவர்களுக்கு உதவி புரியும் போது, குறிப்பிட்ட வரையறையுடன் மனச்சிதறல் இல்லாமல் வா்ழ்க்கை பயணத்தினை மேற்கொள்ளும் போது மனநிறைவு ஏற்படும், அத்தகைய மனநிறைவு 'செரோடோனின்' (Serotonin) மற்றும் 'ஆக்ஸிடோசின்' (Oxytocin) சுரக்க வழிவகை செய்கிறது. இதுதான் ஆயுளை நீட்டிக்க வழிவகைச் செய்கிறது.
· சந்தோஷம் (Hedonic Wellbeing)
தனக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்குவதாலோ அல்லது ஒரு உணவை சுவையுடன் ருசி்த்து உண்பதாலோ உடனே கிடைப்பது. இன்னும் ஒருபடி மேல் சென்று கூறினால் காதல் புரிவது. இது உடலில் 'டோபமைன்' (Dopamine) என்ற வேதிப்பொருளைச் சுரக்கச் செய்கிறது. இது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
சந்தோஷமே அமிர்தம்
ஐந்தறிவு வரையிலான மிருகங்கள் கொள்ளும் கோபம், காமம், சீற்றம் மற்றும் எரிச்சல் போன்ற "மிருக குணங்கள்" உடலில் கார்டிசோல் (Cortisol) எனும் அழுத்த ஹார்மோனைத் தூண்டுகின்றன. இது இதயத் துடிப்பை அதிகரித்து ஆயுளைக் குறைக்கிறது.
எனவே, மகிழ்ச்சியைத் தேடாதவன் நடுத்தர வயதிலேயே தன் ஆரோக்கியத்தை இழந்து வாதம், இதயம், கல்லீரல் மற்றும் சிறு நீரகக் கோளாறு போன்ற நோய்களில் சிக்கி தனது பிள்ளைகளுக்கு தீராத துன்பத்தினைக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அங்கு மகிழ்ச்சி கேள்வி குறியாகிறது.
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”
இங்கு அமிர்தம் என்பது மனிதனின் உணர்வுகள். உணர்வுகள் தூண்டப்படும் போது கிடைக்கப்பெறும் சந்தோஷம் சுரக்கப்படும் அமிர்தம் போன்றது. இவை சிறுது சிறிதாக அதிகரித்து அளவு மீறும் போது உடல் உள்ளுறுப்புகளுக்கு நஞ்சாக மாறி உச்சி முதல் பாதம் வரை நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு இரையாகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
"மகிழ்ச்சி என்பது நாம் அடையும் இலக்கல்ல,
அது நாம் பயணம் செய்யும் வழி"


















