"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
`உளவுப் பணி ராணி நூர் இனாயத் கான்' - மறக்க முடியாத சரித்திரம்; நினைவு தபால்தலை வெளியிட்ட பிரான்ஸ்!
மைசூர் புலி என அழைக்கப்படும் மாவீரர் திப்பு சுல்தானின் வழித் தோன்றலான நூர் இனாயத் கானுக்கு பிரெஞ்சு அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்புபடுத்தியிருக்கிறது.
சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெர்மனிக்கும், அதை ஆதரித்த நாடுகளுக்கு எதிராகவும், நேச நாடுகளான சோவியத் யூனியன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 1939 முதல் 1945 வரை போர் நடத்தியது. இந்தப் போர் 'இரண்டாம் உலகப் போர்' என அழைக்கப்படுகிறது.
இந்த உலகப் போரின் போது 18-ம் நூற்றாண்டின் மைசூர் பகுதியை ஆட்சி செய்த திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கான், பிரான்ஸ் அரசுக்காக மறைமுக ஏஜென்டாக பணியாற்றினார்.
அதை நினைவுப்படுத்தி கௌரவிக்கும் விதமாக பிரெஞ்சு தபால் சேவையான லா போஸ்ட், நூர் இனாயத் கானின் நினைவு தபால்தலையை வெளியிட்டிருக்கிறது. பிரான்சால் நினைவு தபால்தலையை வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒரே இந்திய வம்சாவளி பெண் நூர் இனாயத் கான் ஆனார்.
நூர் இனாயத் கானின் வரலாற்றை எழுதிய லண்டன் எழுத்தாளர் ஷ்ரபானி பாசு, ``பிரான்ஸ் நூர் இனாயத் கானுக்கு அஞ்சல்தலை வழங்கி கவுரவித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக போர் முடிவடைந்த, 80-வது ஆண்டு நினைவு நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது.
பாரிஸில் வளர்ந்த அவர், இங்கிலாந்தில் போர் பயிற்சியில் சேர்ந்து பணியாற்றினார். 'உளவு இளவரசி நூர் இனாயத் கான்' பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்தார்.
நூர் இனாயத் கான் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், பிரிட்டன் 2014-ல் அவரைக் கௌரவித்தது. தற்போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அவரது நினைவாக தபால் தலையை வெளியிட்டுள்ளன. இந்தத் தபால் தலையில் அவர் WAAF சீருடையில் இருக்கிறார்.
நூர் இனாயத் கான்:
இந்திய சூஃபி துறவிக்கும் அமெரிக்க தாய்க்கும் ரஷ்யாவில் 1914-ம் ஆண்டு பிறந்தவர் நூர் இனாயத் கான். பள்ளிப்படிப்புக்குப் பிறகு லண்டனில் குடிபெயர்ந்தது நூர் இனாயத் கானின் குடும்பம்.
இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் வீழ்ந்தது. அதனால் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று, WAAF- படையில் சேர்ந்தார். போரின் போது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உளவு வேலை செய்வதற்கான உளவுத்துறையை நடத்த, சிறப்பு பிரிட்டிஷ் ரகசிய சேவை செயல்பாட்டு (SOE) குழு உருவாக்கப்பட்டது.
இந்தக் குழுவில் நூர் இனாயத் கான் பிப்ரவரி 8, 1943-ல் சேர்க்கப்பட்டார். ஜூன் 1943-ல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சுக்குள் ஊடுருவிய முதல் பெண் ரேடியோ ஆபரேட்டராக நூர் இனாயத் கான் அறியப்படுகிறார்.
நாஜிப் படைகளால் கைது செய்யப்பட்ட நூர் இனாயத் கான் 'டச்சாவ் வதை முகாம்'-க்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டு செப்டம்பர் 13, 1944 அன்று 30 வயதில் தூக்கிலிடப்பட்டார்.
அவரது மகத்தான துணிச்சலைப் பாராட்டி, நூர் இனாயத் கானுக்கு பிரெஞ்சு பதக்கம், பிரான்சின் உயரிய சிவிலியன் விருதான க்ரோயிக்ஸ் டி குரே, 1949-ல் ஜார்ஜ் கிராஸ் (GC) வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.














