ஓணம்: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் குவிந்த பல டன் பூக்கள்; களைகட்டிய பூக்க...
ஊசித்தோப்பு: `மனு மேல் மனு... தீர்வு மட்டும் இல்லை!'- போராடும் மக்களும் அதிகாரிகளின் விளக்கமும்!
“30 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை... இந்த முறையாவது தீர்வு கிடைக்குமா?” – அதிகாரிகளின் ஆய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வாணியம்பாடி ஊசித்தோப்பு கிராம மக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஊசித்தோப்பு பகுதியில் இயங்கி வரும் ஜல்லி தொழிற்சாலையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தூசி மற்றும் புகையால் காற்று மாசடைவதாகவும், அதன் தாக்கத்தால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும், கிணற்று நீரும் மாசடைந்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
60 ஆண்டுகளாக விவசாயம்... இப்போது வாழ்வாதாரத்துக்கே சிக்கல்!
ஊசித்தோப்பு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், விவசாய நிலங்களுக்கு அருகில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தூசி மற்றும் புகை, பயிர்கள் மீது படிவதால் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக மா, தென்னை உள்ளிட்ட மரங்கள் கருகிப் போவதாகவும், விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“விவசாயத்தை நம்பித்தான் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இப்போது தொழிற்சாலைகளால் பயிர்கள் பாதிக்கப்படும் நிலையில், எங்கள் வாழ்வாதாரம் என்னவாகும்?” என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது.
பயிர் இழப்பு மட்டுமல்லாமல், இதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளுக்கான மருத்துவச் செலவுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“கிணற்று நீரையே குடிக்கிறோம்... அதுவும் மாசாகிவிட்டது!”
ஊசித்தோப்பு மக்களின் மற்றொரு முக்கியக் கவலை குடிநீர்.
அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளின் நீரையே குடிநீராகப் பயன்படுத்தி வருவதாகக் கூறும் மக்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தூசி மற்றும் புகை கிணற்று நீரிலும் படிவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதனால், குடிநீரின் தரம் குறைந்து வருவதாகவும், அந்த நீரைப் பயன்படுத்துவதால் தங்களது உடல்நிலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் பாறைகளுக்கு வெடி வைப்பதால் இக்கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் கிணறு ஒன்று இடிந்துள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மனு மேல் மனு...
இந்தப் பிரச்னை தொடர்பாக பல ஆண்டுகளாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் உருவாவதற்கு முன்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் அளித்ததாகவும், திருப்பத்தூர் மாவட்டம் உருவான பிறகும் மனுக்கள் அளித்து வருவதாகவும் கூறுகின்றனர். தற்போது தவெக ஆட்சியிலும் ஊசித்தோப்பு கிராமத்தைச் சார்ந்த பழனி என்பவர் மூன்று முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு அளித்தும் அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக தன்னுடைய எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்ததாகத் தெரிவிக்கிறார்.

“2 வாரத்தில் ஆய்வு” – அரசு அதிகாரிகளின் விளக்கம்
இந்தப் புகார் தொடர்பாக 17.08.2026 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் நிகழ்வில், சம்பந்தப்பட்ட சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை (AD/Mines) அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தொழிற்சாலை உரிய அனுமதியின்றி செயல்படுகிறதா அல்லது விதிமுறைகளை மீறி செயல்படுகிறதா என்பது ஆய்வில் தெரியவந்தால், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
விதிமுறைகளைப் பின்பற்றினாலும்... பயிர் பாதிப்பு உறுதியானால்?
இதில் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலை விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டாலும், அதன் செயல்பாட்டால் விவசாயப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டால், அரசு விதிகளின்படி உரிய இழப்பீடு அல்லது நிவாரணம் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிகாரிகளின் அடுத்தகட்ட ஆய்வு ஊசித்தோப்பு மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1994 முதல் தொடரும் புகார்... இந்த முறையாவது தீர்வு கிடைக்குமா?
1994-ம் ஆண்டு முதல் புகார்கள், மனுக்கள் என இந்த விவகாரம் தொடர்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தலைமுறைகளாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் குடும்பங்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இந்த முறை நடைபெறவுள்ள அதிகாரிகளின் ஆய்வு என்ன சொல்லப்போகிறது? ஊசித்தோப்பு மக்களின் மாசு குறித்த புகார்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? என்பதே தற்போது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



















