நீங்க மறக்கல, உங்க மூளை உங்களை ஏமாத்துது! How Human Memory Works? | The Logic Sh...
Man Eater: அதே புலி, அதே இடம்; மேலும் ஒருவரைக் கொன்று தின்ற ஆட்கொல்லியால் அச்சத்தில் உறைந்த மக்கள்!
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால், அதனைச் சீரமைப்பதற்காக கடந்த 9- ம் தேதி தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்குச் சென்றபோது புலி தாக்கிக் கொல்லப்பட்டார். அவரின் உடல் பாகங்களையும் அந்தப் புலி தின்றுச் சென்றது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத அவரின் உடலில் கை, கால் உள்ளிட்ட சில பாகங்கள் மட்டுமே காட்டில் கிடந்தன. வனத்துறையின் அலட்சியம் காரணமாகவே குடியிருப்புக்கு அருகில் புலி தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மனிதனைக் கொன்று தின்ற அந்தப் புலியை தீவிரமாக கண்காணித்து மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக வனத்துறையினர் உத்தரவாதம் அளித்திருந்தனர். இந்த நிலையில், அதே லாரஸ்டன் பகுதியில் விவசாயி ரவிச்சந்திரன் என்பவரை இன்று மதியம் அதே புலி தாக்கிக் கொன்று அவரின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. அதே போன்று ரவிச்சந்திரனின் கை, கால்களும் தனித்தனியாக காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மனிதர்களை வேட்டையாடி உண்ணும் ஆட்கொல்லி புலியால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், ``அடுத்து இந்த புலி யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என வனத்துறையிடம் கூறி வந்தோம். புலியை டிரோன் கேமராக்கள் மூலம் பார்த்து கண்காணித்து என்று கூறி, தற்போது வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறார்கள். குழைந்தைகளை வைத்துக்கொண்டு இங்கு எப்படி நாங்கள் வாழ முடியும், நீங்களே சொல்லுங்கள்" எனக் கண்ணீர் வடிக்கின்றனர் .

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், ``சம்பந்தப்பட்ட புலியை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. வயது முதிர்வு, உடலில் காயம் போன்ற காரணங்களால் காட்டில் வேட்டையாடும் திறனை இழந்த அந்தப் புலி இரண்டு பேரைக் கொன்று தின்றிருக்கிறது. உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.



















