'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' - தேனி...
‘குப்பை மேடாகும் தொன்மையான பேரூர் திருநீற்று மேடு’ - ஆற்றங்கரை நாகரிகச் சின்னம் பாதுகாக்கப்படுமா?
கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுமார் 2,500 முதல் 4,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் திருநீற்று மேடு எனப்படும் சாம்பல் மேடு, தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் பகுதியாகவும் மாறி வருகிறது.
இந்த சாம்பல் மேடு, பழங்கால மக்களின் வாழ்வியல் மற்றும் ஆற்றங்கரை நாகரிகத்திற்கான முக்கியமான சான்றாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் கால்நடைகளுடன் இடம்பெயரும்போது, கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள சாண எருவை எரித்து, அதன் தணலைக் கடந்து சென்று தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சாம்பல் மேடுகள் புனிதமான மற்றும் சக்தி வாய்ந்த இடங்களாகக் கருதப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவையில் இதுபோன்ற சாம்பல் மேடுகள் நான்கு முதல் ஐந்து இடங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோன்ற பாரம்பரிய நடைமுறைகள் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலின் பின்புறம், திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு அருகே இந்த திருநீற்று மேடு அமைந்துள்ளது. இப்பகுதியில் பிரம்மன் யாகம் வளர்த்ததாக நம்பப்படுவதால், இது ‘பிரம்மகுண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் பார்க்கப்படுகிறது.

இத்தகைய தொல்லியல் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடம் தற்போது குப்பை மேடாக மாறி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அப்பகுதிக்கு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கோவில் கழிவுகள் முறையாகப் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படாமல், வரலாற்றுச் சின்னத்தை பாதிக்கும் வகையில் குவிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், “திருநீற்று மேட்டில் குப்பை கொட்டுவதையும், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்பகுதியை முழுமையாகத் தூய்மைப்படுத்தி, பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்க வேண்டும். கோவில் கழிவுகளை முறையாகப் பிரித்து மறுசுழற்சி செய்ய நவீன கழிவு மேலாண்மை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என அரசுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நமது முன்னோர்களின் வாழ்வியல் வரலாற்றையும், ஆற்றங்கரை நாகரிகத்தின் முக்கிய அடையாளங்களையும் எதிர்கால தலைமுறைக்குப் பாதுகாக்க, திருநீற்று மேட்டை உரிய முறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




















