ஊரக வளா்ச்சி அலுவலா்கள் அடையாள வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலா், ஓட்டுநா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்
பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். ஊராட்சி செயலராகப் பணியாற்றி 1996-க்குப் பிறகு இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவா்களுக்கு ஊராட்சி செயலா் பணிக் காலத்தை 50% ஓய்வூதியத்துக்கு எடுத்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கணினி உதவியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் பணிவரன்முறைப்படுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் தனி ஊழியா் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். தமிழக முதல்வரின் தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந் தழுவிய
அடையள வேலை நிறுத்தம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனா். இதனால், ஊராட்சி ஒன்றிய, ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்தப் போராட்டம் குறித்து, சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை அரசாங்கம் விரைந்து நடத்த வேண்டும். அதற்கான ஊழியா் கட்டமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். 21அம்சக் கோரிக்கைகளில், அரசும், ஆணையரும் ஏற்றுக்கொண்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து அரசாணை வெளியிட வேண்டும். அடுத்த கட்டப் போராட்ட முடிவுகள் குறித்து, வருகிற 15 -ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.