"பாசிசத்திற்கு அப்படி ஒரு ராஜவிசுவாசம்" - 'இந்தியா' கூட்டணி பேரணியில் பங்கேறாத த...
எகிறும் விலைவாசி... 10,000 ரூபாயில் தீபாவளி பட்ஜெட்! கடனில் சிக்காமல் கொண்டாடலாமே..!
அரிசி முதல் பருப்பு வரை அத்தனை அத்தியாவசிய பொருள்களின் விலையும் எகிறிவிட்டது. புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுதான் தீபாவளியின் ஸ்பெஷலே. ஆனால், அவற்றின் விலையும் நடுத்தர, ஏழை மக்கள் அச்சப்படும் அளவுக்கு உயர்ந்துவிட்டன.
பலருக்கு போனஸ் பணம் ஓரளவுக்கு தீபாவளிச் செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலானோருக்கு போனஸ் இல்லை என்பதே எதார்த்தமான நிலை. சிலர் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை ஒதுக்கி சேர்த்து வைத்து தீபாவளிச் செலவுகளைக் கொண்டாடத் தயாராகிறார்கள். ஆனால், சிலர் ‘இப்போதைக்குக் கொண்டாடலாம், அப்புறம் பார்த்துக்கொள்வோம்’ என்ற மனநிலையில் கிரெடிட் கார்டில் செலவு செய்கிறார்கள். பலர் கடன் வாங்கி பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள்.

கடன் வாங்கி பண்டிகையைக் கொண்டாட நினைப்பவர்களுக்கு தியாகராஜனின் நிலை ஒரு பாடம் எனலாம். தியாகராஜன் சென்னையில் கார் விற்பனை நிறுவனம் ஒன்றில் மேனேஜராகப் பணிபுரிந்தார். மாதச் சம்பளம் 48,000 ரூபாய். கடந்த ஆண்டு தீபாவளிக்கு அவருக்கு போனஸாக ரூ.15,000 கிடைத்தது. அவர் நினைத்திருந்தால், அந்த 15,000 ரூபாய்க்குள்ளாகவே தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் பட்ஜெட் போட்டு தீபாவளிச் செலவுகளைத் திட்டமிடவில்லை.
தீபாவளியைச் சொந்த ஊரில் கொண்டாட நினைத்தார். ஊருக்குச் செல்ல கார் புக் செய்தார். ரயிலில் அல்லது பஸ்ஸில் போகலாம் என மனைவி சொல்லியும் கேட்கவில்லை. காரில் போய் இறங்கினால்தான் கெத்தாக இருக்கும் என நினைத்தார். ஊரில் உள்ள தன் தங்கையின் குடும்பத்துக்கும் சேர்த்து புத்தாடைகள் வாங்கினார்.
“அவங்க வசதி வாய்ப்பாத்தான இருக்காங்க... புதுத் துணியெல்லாம் அவங்களே வாங்கிக்க மாட்டாங்களா...” என்று தன் மனைவி சொன்னதும் கடுகடுவென்று பார்த்தார் தியாகராஜன். புதுத் துணிகள் மட்டுமல்ல... விலை உயர்ந்த இனிப்புகள், கார வகைகளையும் ஏராளமாக வாங்கிச் சென்று ஊரில் உறவினர்களுக்கெல்லாம் கொடுத்தார். விலை உயர்ந்த பட்டாசுகளை வாங்கி தன் தோட்டத்து வீட்டில் வைத்து வெடிக்க, ஊரே கூடிநின்று வேடிக்கை பார்த்தது. தியாகராஜனுக்கு பெருமையில் தலைகால் புரியவில்லை. ஆனால், மொத்த தீபாவளிச் செலவுகள் 60,000 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. அந்தக் கடனை கட்டி முடிப்பதற்குள் இதோ... அடுத்த தீபாவளியே வந்துவிட்டது.
எதிர்பாராத சூழலில் கடந்த மாதம் அவருக்கு வேலை போய்விட, இப்போது சம்பளமும் இல்லை, போனஸும் இல்லை. தீபாவளிக்குப் பிள்ளைகளுக்கு மட்டுமாவது புதுத் துணி வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்து, தெரிந்த நண்பர்களிடம் கடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மக்களே... தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம். நிச்சயமாக மகிழ்ச்சியாகக் கொண்டாடத்தான் வேண்டும். ஆனால், அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கிவிட்டு, பிறகு மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாமே. நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 10,000 ரூபாய்க்குள் பட்ஜெட் போட்டு, அதை மீறாமல் செலவுகளைக் கட்டுப்படுத்தி, பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாமே.
ரூ.10,000-ல் தீபாவளி பட்ஜெட்!
நான்கு பேருக்கான புத்தாடைகள்: ரூ.4,000
இனிப்பு, கார வகைகள்: ரூ.1,500
பட்டாசுகள்: ரூ.1,000
மளிகை, சமையல் பொருள்கள்: ரூ.1,500
உறவினர்களுக்குப் பரிசுகள்: ரூ.1,000
எதிர்பாராத செலவுகள்: ரூ.1,000
மொத்தம்: ரூ.10,000
புத்தாடைகளில் சிக்கனம்!
புத்தாடை இல்லாமல் தீபாவளி முழுமை பெறாது. ஆனால், நான்கு பேருக்கும் ஆளுக்கு இரண்டு, மூன்று செட் துணிகள் வாங்கவேண்டிய அவசியமில்லை. பிராண்டட் கடைகளில்தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நம் பட்ஜெட்டுக்குள் செலவுகளை அடக்கும் வகையில் நல்ல ஆடைகளை, சாதாரணக் கடைகளில் நிச்சயமாக வாங்க முடியும். ஆஃபர் இருக்கிறது என்பதற்காகத் தேவையில்லாத ஆடைகளை வாங்காமல் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்வது முக்கியம்.
இனிப்பும் காரமும் வீட்டிலேயே செய்யலாமே!
கடைகளில் தயாராகக் கிடைக்கும் இனிப்பு, கார வகைகளை வாங்காமல் வீட்டிலேயே முறுக்கு, அதிரசம், லட்டு போன்றவற்றைத் தயாரிக்கும் பட்சத்தில் செலவுகளை வெகுவாகக் குறைக்கலாம். ஆரோக்கியத்துக்கும் கேரன்டி. குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒன்றிரண்டு நவீன இனிப்பு வகைகளை மட்டும் குறைந்த அளவில் கடையில் வாங்கிக்கொள்வது தவறில்லை. ‘எங்கள் வீட்டில் நானே செய்தது’ என்று சொல்லி நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்துகொள்வதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம்.
பட்டாசுக்கு ஓர் எல்லை உண்டு!
இன்றைக்கு நவீன ரக பட்டாசுகள் ஏராளமாக வந்துவிட்டன. பணம் இருப்பவர்கள் அவற்றை வாங்குவதில் தவறில்லை. ஆனால், கடன் வாங்கி விலை உயர்ந்த பட்டாசு வகைகளை வாங்க வேண்டுமா என்பதில் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆசைக்கு இடம் கொடுத்தாலும், அதற்கென முன்கூட்டியே ஓர் உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். ரூ.1,000 அல்லது ரூ.2,000-க்குள் பாதுகாப்பான, தரமான பட்டாசுகளை வாங்கினாலே போதுமே!
கிரெடிட் கார்டு வேண்டாமே!
கையில் பணம் இல்லாதபோது கிரெடிட் கார்டு ஒரு வசதியாகத் தெரியும். ஆனால், முழுத் தொகையையும் உரிய காலத்தில் செலுத்த முடியாவிட்டால் வட்டி, தாமதக் கட்டணம் எனப் பெரிய சுமையாகி விடும். தீபாவளிச் செலவுக்காக தனிநபர் கடன், ஆப் மூலம் கடன் என்றெல்லாம் வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது.
கடனில் சிக்காமல் தீபாவளி!
* தீபாவளிக்கு முன்பே மொத்த பட்ஜெட்டை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
* போனஸ் கிடைத்தால் அதை முழுவதுமாகச் செலவு செய்யாமல் ஒரு பகுதியைச் சேமியுங்கள்.
* கடைக்குச் செல்லும்போது தேவையான பொருள்களின் பட்டியலைப் போட்டு எடுத்துச் செல்லுங்கள்.
* தள்ளுபடி என்ற பெயரில் தேவையற்ற பொருள்களை வாங்காதீர்கள்.
* வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், இ.எம்.ஐ போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கான பணத்தை பண்டிகைக்குச் செலவு செய்யாதீர்கள்.
* ஒருவருக்கு ஒரு செட் ஆடை என்பதில் உறுதியாக இருங்கள்.
* ஆஃபர் வலையில் மயங்கி கிரெடிட் கார்டில் செலவு செய்யாதீர்கள்.
* பெருமைக்காகவோ, பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ ஆடம்பரமாகப் பண்டிகையைக் கொண்டாடாதீர்கள்.
பொதுவாக, தீபாவளியின் மகிழ்ச்சி நாம் வாங்கும் ஆடைகளின் எண்ணிக்கையிலோ பிரமாண்டத்திலோ, வெடிக்கும் பட்டாசுகளின் அளவிலோ இல்லை. குடும்பத்தினருடன் கடன் சுமையின்றி, நிம்மதியாகக் கொண்டாடுவதில்தான் இருக்கிறது.
நிதி ஆலோசகர்கள் பலரும் வலியுறுத்துவது போல உங்கள் பட்ஜெட்டுக்குள் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ச்சியாக வாழலாமே மக்களே!


















