தேர்தலில் தோல்வியே காணாத கலைஞர்; 1984 தேர்தலில் மட்டும் போட்டியிடாதது ஏன்? | Vot...
”எடப்பாடி பழனிசாமி பாஜக-வின் கிளைச் செயலாளராக மாறிவிட்டார்”- ஸ்டாலின் காட்டம்!
தி.மு.க தலைமையிலான மதச்சார்ப்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். முதல் பிரசாரத்தை அவரது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தொடங்கினார். திருவாரூர் தெற்குவீதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருவாரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா, நன்னிலம் தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மாரிமுத்துவுக்கு கதிர்அரிவாள் சின்னத்திலும் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ``நம்ம தமிழ்நாட்டை பார்த்து பல மாநிலங்களும் உரிமைத்தொகை வழங்க தொடங்கியிருக்காங்க. ஆனால் தேர்தலை காரணம் காட்டி இந்த உரிமைத்தொகையை நிறுத்த ஒன்றியத்தில் இருக்கக்கூடிய, பா.ஜ.க பிளான் பண்ணுச்சு. நாங்க சும்மா இருப்போமா? விழித்துக் கொண்டோம். எங்களுடைய ஏழைகளோடு இருக்கக்கூடிய சுருக்குப்பையில் இருந்து கூட காசை உருவ திட்டம் போடுகிற பா.ஜ.க-வுக்கு, நம்ம திராவிட மாடல் நலத்திட்டங்கள் மூலமாக மக்களுக்கு நேரடி பணப்பயன் கிடைக்கிறது எரியத்தான் செய்யும்.
யார் வயிறு எரிஞ்சா என்ன? மக்களுடைய மனசு நிறையணும். அது மட்டும்தான் எங்களுடைய லட்சியம், எங்களுடைய நோக்கம். அதனால் தான் பிப்ரவரி மாசமே ரூ.5 ஆயிரம் வழங்கியிருக்கோம். அதுமட்டுமல்ல, ஏறக்குறைய 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருந்த கோரிக்கையான தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறோம். இப்படி எல்லா வகையிலும் தமிழ்நாடு இன்றைக்கு டாப்-ல வந்திருக்கு.
இது தான் பா.ஜ.க தலைமையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய அ.தி.மு.க உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கெல்லாம் எரிச்சலை உண்டாக்கிருக்கு. அதனால் தமிழ்நாட்டை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என்று திட்டமிட்டு ஏராளமான பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பிப் பார்த்தாங்க. கலவர வெறியோடு திரிஞ்ச அவங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கு. அவங்க பரப்புறது எல்லாமே அவதூறுன்னு தான் உண்மை வெளிப்பட்டு இன்றைக்கு மக்களுக்கு முன்னாடி அசிங்கப்பட்டு நிக்கிறாங்க.
தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து இருக்குது. அந்த பெருமிதத்தோடு தான் தமிழ்நாட்டோட எதிர்காலம் நமக்கு எதிராக இருக்கக்கூடிய என்.டி.ஏ.கூட்டணிக்கும் தெரியும். 2011-ல் இருந்து 2021 வரைக்கும் தமிழ்நாட்டை பாழாக்கி தலைகுனிய வச்ச அ.தி.மு.க 2014-ல் இருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைச்சிட்டுப் போயிருக்கக்கூடிய பா.ஜ.க-விடம் சரணாகதி அடைஞ்சு ஒரு கூட்டணி அமைச்சிருக்கு. அ.தி.மு.க-வை அழிவுப்பாதையில் அழைச்சிட்டுப் போற பழனிசாமி, பா.ஜ.க வினுடைய கிளைச் செயலாளராக இன்றைக்கு மாறியிருக்கிறார்.

இப்போது அவரு நம்ம தேர்தல் அறிக்கையை பார்த்து புலம்பத் தொடங்கிருக்காரு. அதுவும் எந்த மாதிரி புலம்பல் தெரியுமா? நம்ம திராவிட மாடல் திட்டங்களை காப்பியடிச்சு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அவரு, நம்முடைய தேர்தல் அறிக்கையை பார்த்து காப்பியடிக்கிறேன்னு புலம்புறாரு. பழனிசாமி அவர்களுடைய அறிவுத்திறனுக்கு சேக்கிழார் எழுதின கம்பராமாயணம் தொடங்கி பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், இப்போ புதுசா ஒரு எடுத்துக்காட்டு வந்திருக்கு. அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது. தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பதை தன்னுடைய உளறல்களால் நிரூபிச்சுட்டு வர்றாரு.
அவருடைய உளறல்களில் ஹைலைட் எது தெரியுமா? எப்படி உங்க திட்டங்களை நிறைவேத்துவீங்கன்னு கேட்டா, வரியை உயர்த்திட நிறைவேத்துவேன்னு சொல்றாரு. பழனிசாமி அவர்களால் மட்டும்தான் இப்படிலாம் சிந்திக்க முடியும். அதனால் தான் அந்த அளவுக்கு பழனிசாமியை ஈஸியாக மிரட்டி தன்னோட அடிமை கூட்டணியில் வச்சிருக்கு பா.ஜ.க அந்த என்.டி.ஏ. கூட்டணிக்கு ஒரே ஒரு நோக்கம்தான். என்னது? தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுக்கணும். திராவிட மாடல் ஏற்படுத்தியிருக்கக்கூடிய இந்த வளர்ச்சியை அழிக்கணும். இதுதான் என்.டி.ஏ கூட்டணி நோக்கம். என்.டி.ஏ.வோட தலைமையாக இருக்கிற பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் நம்ம எதிர்க்கறதுக்கு வலிமை இல்லைன்னு அ.தி.மு.க-வை விலைக்கு வாங்கிருக்கு. பொதுவா பா.ஜ.கவை பொறுத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யாது. ஆனா தேர்தல் வந்துருச்சுன்னா கண் துடைப்புகளுக்காக பட்ஜெட்டில் சில அறிவிப்புகளை கொடுப்பாங்க. ஆனால் தமிழ்நாட்டுக்கு அதைக்கூட செய்ய மனமில்லாத வஞ்சக எண்ணத்தோட இருக்கக்கூடிய உருவம்தான் என்.டி.ஏ.

பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செஞ்சது இல்லை. எந்தச் சிறப்புத் திட்டத்தையும் செய்யல. நாம வச்ச எந்தக் கோரிக்கையையும் நிறைவேத்தல. மதுரையில் ஒரு எய்ம்ஸ் அறிவிச்சாங்க. அதோட நிலைமையை நான் சொல்லித்தான் தெரியணும்னு உங்களுக்கு அவசியமில்லை. சென்னை மெட்ரோ திட்டத்துக்கு நிதி தரவில்லை. ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டுருக்கோம் தரல. புனல் மின் திட்டத்துக்கான நிதியும் தரல. இத்தனை தடைகளையும் சமாளிச்சு பல்வேறு சாதனைகளை நாம செஞ்சிருக்கிறோம்.
திறமையான நிர்வாகத்தால் நம்பர் ஒன் மாநிலமாக உயர்ந்திருக்கிறோம். இருக்குறதுலயே என்ன கொடுமைன்னா, இந்தி திணிப்பை ஏத்துக்கலன்னு நம்ம வீட்டுக் குழந்தைகள் படிக்கிறதுக்கான கல்வி நிதியைக் கூட இதுவரைக்கும் கொடுக்கல. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்துக்கிட்ட தமிழ்நாட்டோட எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? சொல்லுங்க, ஒப்படைக்க முடியுமா? சொல்லுங்க, ஒப்படைக்க முடியுமா? என்.டி.ஏ.வை தமிழ்நாடு புறக்கணிக்கணும். அப்போது தான் தமிழ்நாட்டோட எதிர்காலம் காப்பாத்தப்படும். என்.டி.ஏ கூட்டணி என்பது எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி அப்படின்னு நீங்களே பாத்துக்கிட்டு இருக்கீங்க. கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்னு ஆட்சி நடத்துன பழனிச்சாமியை மிரட்டி, கூட்டணியை அமைச்சு, தமிழ்நாட்டோட உரிமைகளைப் பறிச்சு, வரிசையா பல துரோகங்களைச் செஞ்சு, விசித்திரமான நாடகங்களை நடத்தி, கடைசியாக இப்ப டெல்லியில் தீர்மானிச்சு, தோக்குறதுக்காக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு என்.டி.ஏ.

அதனாலதான் சொன்னேன், இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி. தமிழ்நாடு வெர்சஸ் என்.டி.ஏ. தமிழ்நாட்டைக் காக்கணும்னா தி.மு.க. தான் மீண்டும் ஆட்சிக்கு வரணும். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில தொடர்ந்து நடைபோடணும்னா, திமுக ஆட்சியில தொடரணும். தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்கணும்னா, பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியை வேரோடு வீழ்த்தணும். நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணும். நாம் போராடுறது தி.மு.க-வோட வெற்றிக்காக மட்டும் அல்ல, தி.மு.க தலைமையில அமைந்திருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக மட்டும் அல்ல, இது தமிழ்நாட்டோட வெற்றி, மறந்துடாதீங்க. தமிழ்நாட்டிற்கான வெற்றி இது.
எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நம்முடைய தாய் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் உறுதியாகச் சொல்கிறேன், அமையவிருக்கக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சியில எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிக்கக்கூடிய அளவுக்குச் சிறப்பான ஆட்சியை, தமிழ்நாட்டைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஆட்சியை நாங்கள் வழங்குவோம். ஏப்ரல் 23 அன்று வாக்களிக்கப் போகும்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். என்.டி.ஏ-வோட தமிழர் விரோத சந்தர்ப்பவாத கூட்டணியா? திமுக சாதனைகளின் தொடர்ச்சியா? என்பதைச் சிந்தித்து வாக்களியுங்கள்" என்றார்.















