தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க இனி கூடுதல் செலவு: 5% - 10% வரை சுங்கக் கட்டண உயர்...
தேனி, மேகமலை வழிவிடும் முருகன், காவல் காக்கும் கௌமாரி அம்மன்! - சுற்றுலாவுடன் ஒரு தரிசனம்!
கோடைகாலத்துக்குச் சுற்றுலாவும் செல்ல வேண்டும்... அதேவேளையில் இறை தரிசனமும் செய்ய வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். அதில் இருந்து விலகி கொஞ்சம் இயற்கையோடு சுத்தமான காற்றை சுவாசிப்பதோடு மலை கிராம மக்களின் தெய்வங்களை தரிசிப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அப்படி ஒரு தலம் தான் மேகமலை.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது, மேகமலை. சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதி எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் மலை என்பதால் ‘மேகமலை’ என்றானது.

தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தூரத்துக்கு தேயிலைத் தோட்டங்கள். மேகமலை செல்ல சின்னமனூரிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை பேருந்து வசதி இருக்கிறது. கட்டணம் சுமார் 20 ரூபாய். காரில் செல்பவர்களுக்குக் கொஞ்சம் கடினம்தான். வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் கார் ஓட்டிப் பழக்கம் இல்லாதவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஜீப் போன்ற வாகனங்கள் பயணிக்க உதவும்.
இப்படிப்பட்ட கடினமான மலைப்பயணத்தில் நாம் முதலில் தரிசிப்பதே, ‘வழிவிடும் முருகன்’ திருக்கோயிலைத்தான். இவரை தரிசித்துச் சென்றால் மலைப்பாதையில் வரும் ஆபத்துகளைப் போக்கிப் பயணத்தைப் பாதுகாப்பாக ஆக்குவார் என்பது நம்பிக்கை.
முற்காலத்தில் மலைமேலே உள்ள டீ எஸ்டேட்களுக்கு அடிவார கிராமங்களிலிருந்து மக்கள் சென்று வருவார்கள். ஆங்கிலேயர்களின் காலத்தில், மலையில் பாதை அமைக்கும் போது ஒரு பெரிய பாறையை உடைக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் பணியைச் செய்யமுடியாமல் தொடர்ந்து தடைப்படவே அந்தப் பாறை தெய்வ சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து அதை வணங்கத் தொடங்கினர் மக்கள். 1983-ம் வருடம், சித்திரா பௌர்ணமியன்று இந்த இடத்தில் முருகன் சிலையுடன் சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து, முருகனுக்கு, ‘வழிவிடும் முருகன்’ என்ற பெயரும் வைத்து வழிபடத் தொடங்கினார்கள் ஊர் மக்கள்.
கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன் என்கிறார்கள் பக்தர்கள்.
இங்கே ஒரு வித்தியாசமான வேண்டுதல் உண்டு. ஏதேனும் வேண்டுதலை நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளுக்கு அருகே இரண்டு கைகளையும் வைத்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில், சிவலிங்கத்தின் அருகிலிருக்கும் கையும் நாகர் சிலைக்கு அருகிலிருக்கும் கையும் (வணக்கம் வைப்பது போல்) ஒன்றுசேர்ந்து விட்டால் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பது ஐதிகம்.
வழிவிடும் முருகன் கோயிலின் அருகே, மலைக்கு மேல் போகிற வாகனங்களுக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று வேண்டிக்கொண்டு, பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள்.

ஒரு த்ரில்லிங்கான பயணம்
மேகமலை முருகன் கோயிலை அடையப் பல கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை வழியாகப் பயணிக்க வேண்டும். போகப் போக 20 அடிகளாகக் குறுகிவிடுகிறது பாதை. பேருந்து மெள்ள மெள்ள ஊர்ந்துதான் செல்லவேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டும்தான் செல்ல முடியும். சாலையை ஒட்டி காணப்படும் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளும் வனத்தின் அழகும் நம்மை ஆச்சரியப்படவைப்பதுடன், சற்றே அச்சம் கொள்ளவும் வைக்கின்றன. ஆனால், வழிவிடும் முருகப்பெருமானின் கருணையால், இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார்கள் ஊர் மக்கள்.
சுமார் ஒரு மணி நேர மலைப் பாதைப் பயணத்துக்குப் பிறகு மேகமலையின் தொடக்கத்திலேயே நம்மை வரவேற்கிறது அருள்மிகு கௌமாரியம்மன் கோயில். இங்குள்ள கௌமாரி என்பவள் அம்பிகையின் அம்சமாகத் தோன்றிய சப்தகன்னியரில் ஒருத்தி. முருகனின் சக்தி என்று போற்றப்படுபவள்.
ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலையைச் சரி செய்து தேயிலைத் தோட்டம் அமைக்க, தேனியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்களை இந்த மலைக்கு அழைத்து வந்தார்கள். தங்கள் சொந்தபந்தங்களை, ஊரை, சாதிசனத்தை விட்டு விட்டு இந்தக் குளிரிலும், காட்டு விலங்குகளுக்கு மத்தியிலும் வாழ்ந்த அந்த மக்கள், தாங்கள் சாமி கும்பிட ஒரு கோயில் வேண்டும் எனக் கேட்டார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஆங்கிலேய அதிகாரியான டைமண்ட் என்பவர், மக்களின் தெய்வமான கௌமாரி அம்மனுக்கு இந்தக் கோயிலைக் கட்டிக்கொடுத்தார். அன்றுமுதல் இன்றுவரை மக்களுக்கு அருள்பாலிக்கிறாள் அன்னை கௌமாரி. இங்குள்ள மக்கள் சாதி பார்ப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தால் போதும், நேராக இந்தக் கோயிலுக்கு வந்து தாலி கட்டி எளிமையாகக் கல்யாணத்தை முடித்துக்கொள்வார்கள்.
சித்திரையில் திருவிழா களைகட்டும். அப்போது, மேகமலையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கே கூடிவிடுவார்கள். இந்த மக்களுக்கு நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் துணையாக இருப்பவள் இந்தக் கௌமாரிதான்.

கௌமாரியம்மனை வழிபட்டுவிட்டு, தொடர்ந்து மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு போன்ற பகுதிகளுக்கும் சென்று இயற்கையெழிலைக் கண்குளிரக் காணலாம்.
சின்னமனூரிலிருந்து சில சிற்றூர்களைக் கடந்து சென்றால், தென்பழநி வனப்பகுதி செக்போஸ்ட் வரும். இந்த செக்போஸ்டில் உள்ள அதிகாரிகளிடம், சுற்றுலா செல்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தால்தான், வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி கொடுப்பார்கள். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.
வாய்ப்பிருப்பவர்கள் மேகமலை சென்று வழிவிடும் முருகனையும் காத்தருளும் கௌமாரியையும் தரிசனம் செய்வதோடு இயற்கை எழிலையும் கண்டு ரசித்து வாருங்கள். இந்தக் கோடையில் மனமும் உடலும் குளுமையாகும்.





















