செய்திகள் :

120 ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் வரை… மாமியார்–மருமகளின் பிசினஸ் வெற்றிக் கதை!

post image

“ஒரே வீட்டுல மாமியாரும் மருமகளும் இருந்தா பிரச்சனை வரும்னு சொல்லுவாங்க.ஆனா, எங்களோட காம்போ வித்தியாசமானது. நாங்க சண்டை போட்டது இல்ல. பொறணி பேசுனது இல்ல. குறையும் சொன்னது இல்ல. என்ன கலர் ஹிட் ஆகும், எந்த கலர் புடவை ரீச் ஆகும் இது தான் எங்களோட மெயின் டாப்பிக்கே. எந்த வேலை செஞ்சாலும் ஜாலியா, ரசிச்சுக்கிட்டே பண்ணுவோம்…எங்களுக்குள்ள வயசு வித்தியாசமெல்லாம் கிடையாது!” - என்று சிரித்தபடி சொல்லும் ராணி,தன் மருமகள் செளமியாவின் கைகளை பிடித்துக் கொள்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், எல்ராம்பட்டு கிராமம். பவர்லூம் பொருத்தப்பட்டிருந்த அந்த வீட்டில் இடைவிடாமல் தறியின் சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மற்றொரு புறம் சேலைகளை மடிப்பதிலும் பேக்கிங் செய்வதிலும் பெண்கள் பிஸியாக இருந்தார்கள்.

கைத்தறி நெசவில் கிடைத்த வருமானம் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில்,பவர்லூம் நெசவிற்கு மாறியது ராணியின் குடும்பம். பின் அதையே சேலை விற்பனை பிசினஸாக மாற்றியிருக்கிறார்கள். 'தறிச்சத்தத்துல எதுவும் கேக்காது...வெளிய உட்கார்ந்து பேசுவோம்', என நம்மை வீட்டுக்கு வெளியில் இருக்கும் திண்ணையில் அமரச்செய்து, பேசத் தொடங்கினார் ராணி.

"கைத்தறி நெசவு என் வீட்டுக்காரரோட குடும்பத் தொழில். எனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவர்கூட சேர்ந்து நானும் நெசவுத் தொழில் பண்ண ஆரம்பிச்சேன். எங்களுக்கு ஒரு மகன். அவனும் தறி நெசவுலதான் இருந்தான். மகனுக்கு கல்யாணம் ஆகி பேரன் பேத்தியெல்லாம் பொறந்த பிறகு குடும்பத்துல செலவுகள் அதிகமாச்சு. ஆனா, எங்க வருமானம் உயர்ந்தபாடில்ல.கைத்தறி நெசவு பண்ணும்போது கூட்டுறவு சங்கத்திலிருந்து நூல் கொடுப்பாங்க. நாங்க நெசவு பண்ணி புடவையா கொடுப்போம். அதுக்குக் கிடைக்கிற கூலி ரொம்ப குறைவு…

தறி

ஒரு புடவைக்கு 30 ரூபா, 40 ரூபாதான். ரெண்டு தறி வெச்சிருந்தாலும், ஒரு நாளைக்கு எங்க குடும்ப வருமானம் 120 ரூபாதான் இருந்துச்சு.பத்தியும் பத்தாமலும் வாழ்க்கை ஓடுச்சு. குடும்பச் செலவுகள் அதிகரிச்சப்போ, கூடுதல் வருமானம் தேவைன்னு புரிஞ்சது. புதுசா வேற தொழில் பண்ணலாம்னு யோசிச்சேன். ஆனா, ‘நெசவுலேயே புதுசா ஏதாவது பண்ணலாம்’ன்னு என் மருமக தான் சொல்லுச்சு. அதுதான் பவர்லூம் போடலாம்னு முடிவுக்கு வந்தோம்.

காலம் காலமா கைத்தறி நெசவு பண்ண வீடு இது. அந்தச் சத்தம்தான் என் புள்ளைகளுக்கு தாலாட்டே...அந்தச் சத்தத்தை, அந்த நேர்த்தியை விட்டு வர மனசே இல்ல. ஆனா, பிள்ளைகளுக்காக ஓ.கே சொல்லிட்டேன். கையில, காதுல போட்டிருந்த நகையை அடைமானம் வெச்சோம். மகளிர் குழுவுல இருந்து கடன் வாங்கி 12 பவர் லூம் போட்டோம். 1600 சதுரடி இடத்துல செட் போட்டு எங்க பிசினஸை ஆரம்பிச்சோம்." - என்று ராணி முடிக்க, பிசினஸின் அடுத்தடுத்த வளர்ச்சிப் பற்றி செளமியா தொடர்கிறார்.

ராணி - செளமியா

"அத்தைக்கு நம்பிக்கை கொடுத்து பிசினஸை ஆரம்பிச்சாலும், மனசுக்குள்ள சின்ன பயம் இருந்துட்டே இருந்துச்சு. பவர்லூம் வந்ததும், எல்லாமே மாறிடுச்சு. நூல் வாங்குறதிலிருந்து, ஆர்டர் எடுக்குறது, விற்பனை செய்யுறது வரை எல்லாத்தையும் நாமே கவனிக்க வேண்டிய நிலை வந்தது. பொறுப்புகள் அதிகம். ஆரம்பத்துல அது ரொம்ப பயமா இருந்துச்சு. ஆனா, அந்த பயத்தைத் தாண்டி, சின்னச் சின்ன நுணக்கங்களை அனுபவத்துல கத்துக்கிட்டோம். 

சேலம், கோயம்புத்தூர், ஈரோடுனு நிறைய ஊர்களுக்கு பயணம் பண்ணி நூல்களை வாங்குனோம். எல்லாரும், 'மாமியாரும், மருமளும் எங்கேயோ கிளம்பிட்டாங்க'னு எங்களை ஆச்சரியமா பார்ப்பாங்க. வீட்டோட நிர்வாகம் மாமியார்கிட்ட இருக்கா, மருமககிட்ட இருக்காங்கிறதுலதான் நிறைய வீட்ல பிரச்னை வரும். ஆனா, நிர்வாகம் சரியா இருக்கணும். அவ்வளவுதான். அந்தப் புரிதல் எங்க ரெண்டு பேர்கிட்டயும் இருந்ததால எங்களுக்குள்ள பிரச்னை வந்ததில்ல. 

செளமியா

 நாங்களே நூல் வாங்கி, புடவையா நெஞ்சு, விற்பனை பண்ணலாங்கிற ஐடியால பிசினஸை ஆரம்பிச்சோம். நாங்க கேக்குற நிறத்துல நூல் ரோல் வந்துரும். ஒரு ரோல் 18000 ரூபா...ஒரு ரோல் வாங்குனா 150 சேலைகள் நெய்யலாம். வெவ்வேறு ஒரு கலர், ஒரு டிசைன் நெய்ய ஆரம்பிச்சா ஒரு ரோல் முழுக்க ஒரே டிசைன்தான் நெய்ய முடியும். எங்ககிட்ட 100க்கும் மேற்பட்ட டிசைன்கள் இருக்கும். டிரெண்டுக்கு ஏத்த வியாபாரிகள் கேக்குற டிசைனை அவங்க  கேக்குற நிறத்தில் நெஞ்சு கொடுக்க ஆரம்பிச்சோம்.

12 தறில ஆறு தறில நாங்களே சொந்தமா ஆர்டர் எடுத்து பண்றோம். மீதி இருக்க ஆறு தறியை வேற பிராண்டுகளுக்கு லீஸுக்கு கொடுத்திருக்கோம். அதாவது அந்த ஆறு தறில அந்த பிராண்டு சேலைகளை மட்டும் நெஞ்சு கொடுப்போம். 60 கவுண்ட் ,80 கவுன்ட், 100 கவுன்ட்டுனு வெவ்வேறு ரகங்கள்ல சேலைகள் இருக்கு. 400 ரூபாயில இருந்து 1500 ரூபா வரை நூலோட தரத்துக்கு ஏற்ற மாதிரி விற்பனை பண்றோம்" என்றவர் தங்களின் வேலைகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

புடவைகள்

"காலையில் அஞ்சு மணிக்கு மெஷின் போட்டா, ராத்திரி ஏழு மணி வரை நூல் நெஞ்சுகிட்டே இருப்போம். அப்புறம் சேலையை அறுக்குறது, மடிக்கிறது, பேக் பணறதுனு நிறைய வேலைகள் இருக்கும். ஆரம்பத்தில நூலை தறில ஏத்துறதுல ஆரம்பிச்சு பேக்கிங் வரை எல்லா வேலைகளையும் நாங்களே தான் பார்த்திட்டு இருந்தோம். இப்போ எட்டு பேர் வேலைக்கு இருக்காங்க. சேலை உற்பத்தி பண்ற டீமை உறுதியா கட்டமைச்சுட்டு விற்பனை பக்கம் கவனம் செலுத்த ஆரம்பிச்சோம். உற்பத்தி டீமை அத்தையும் விற்பனை விஷயங்களை நான் பார்த்திக்கிறதாகவும் வேலைகளை பிரிச்சிக்கிட்டோம்" என்ற செளமியா விற்பனை தொடர்பான விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

"பிசினஸ் ஆரம்பிச்ச புதுசுல ஒரு மாசத்துக்கு 1500 சேலைகளை நம்மகிட்ட யாரு வாங்குவா, எப்படி விற்பனை பண்ண போறோம்னு எதுவும் தெரியல. எந்த பிளானும் இல்ல. ரொம்பவே மலைப்பா இருந்துச்சு. மகளிர் சுய உதவிக்குழுக்கள், மொத்த வியாபாரிகள்னு எங்களோட வாடிக்கையாளர்களை தேட ஆரம்பிச்சோம்.ரெண்டு மாசத்துல வாடிக்கையாளர்களை ஃபிக்ஸ் பண்ணியாச்சு.

மாமியார் மருமகள்

சென்னை,காஞ்சிபுரம்னு நிறைய இடங்களில் ஸ்டால் போட்டும் விற்பனை பண்றோம். வீட்ல வந்து சில்லறை வியாபாரம் பண்றவங்களும் இருக்காங்க. இப்போ மாசம் 1500 புடவைகள் நெய்யுறோம். 120 ரூபா வருமானத்துல இருந்த எங்க வாழ்க்கை, இப்போ ஒன்றரை லட்சம் வரை உயர்ந்திருக்கு.

இது ஒரு பிசினஸ் மட்டும் இல்ல… ஒரு உறவின் வெற்றி" எனர்ஜியுடன் விடை பெறுகிறார்கள் அன்பு ததும்பும் மாமியாரும் - மருமகளும்...

பெருங்குடி: பிரமாண்டமாக உருவாகும் காசாகிராண்டு ஸ்கைடெக்! 4.28 ஏக்கரில் பிரீமியம் வணிக அலுவலக வளாகம்

காசாகிராண்டு நிறுவனத்தின் வணிக ரியல் எஸ்டேட் பிரிவான ‘காசாகிராண்டு கமர்ஷியல்’,பெருங்குடியில்'காசாகிராண்டு ஸ்கைடெக்'என்ற ஏ-கிரேடு அலுவலக வளாகத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சிறப்பாக நடத்தியத... மேலும் பார்க்க

தாலியை அடமானம் வச்சு.! இன்று மாதம் ₹14 லட்சம் டேர்ன் ஓவர்! - கடலை மிட்டாய் பிசினஸில் கலக்கும் தம்பதி

"வாழ்க்கையில் எல்லா பெரிய மாற்றங்களும் பெரிய முடிவுகளால் வரணும்னு அவசியம் இல்ல. சில நேரங்கள்ல, திக்கு தெரியாமல் நிக்கிற ஒரு தருணத்தில் எடுக்குற சின்ன முடிவு வாழ்க்கையவே மாத்தும். அந்த முடிவுக்கு பிள்ள... மேலும் பார்க்க

`வீட்ல இதுலாம் தேவையில்லாத வேலைன்னு தான் சொன்னாங்க; ஆனா.!' - லட்சத்தில் வருமானம் ஈட்டும் உஷா ராணி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி(45). ஏ.என்.எம் முடித்த இவரோ தற்போது மூலிகை சோப்பு, மூட்டுவலி தைலம், ஹெர்பல் டை போன்ற 18- க்கும் மேற்பட்ட பொருட்களை தயா... மேலும் பார்க்க

கோவில்பட்டி: போர் சூழலால் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம்; தொழிலாளர்கள் பாதிப்பு

’கடலை மிட்டாய்’ என்றாலே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிதான் நினைவுக்கு வரும். கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் எனக் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பன... மேலும் பார்க்க

கோவில்பட்டி: ஈரான் – இஸ்ரேல் போரால் மூலப்பொருட்கள் விலை உயர்வு; தீப்பெட்டித்தொழில் முடங்கும் அபாயம்

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர், தென்காசி மாவட்டம் திருவேங்கடம், குருவிகுளம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்... மேலும் பார்க்க

'300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி

அமெரிக்கா டெக்சாஸில் வர உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தனது இந்திய கூட்டாளிகளுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 'நன்றி' தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க