செய்திகள் :

`எதுக்கு தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; ஆனா...' - மனநலம் குன்றியவர்களை அரவணைக்கும் தட்சிணாமூர்த்தி

post image

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருச்சேறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் 'சுடர் இல்லம்' என்ற பெயரில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. சுடர் இல்லத்தை இத்தனை ஆண்டுக்காலம் எந்தவித எதிர்பார்ப்பும் சோர்வும் இல்லாமல் தெட்சணாமூர்த்தி என்பவர் தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த இல்லத்திற்குச் சென்று அவருடன் உரையாடத் தொடங்கினோம்..

"எனக்கு சின்ன வயசுலேந்தே மனநலம் குன்றியவர்களுக்கு உதவிசெய்றது ரொம்ப பிடிக்கும். எங்க அப்பாவுக்கு என்ன கலெக்டர் ஆக்கிப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை. நானும் அவரு ஆசைப்படி காலேஜ் முடிச்சிட்டு அஞ்சு வருசம் சென்னையில தங்கி யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிச்சேன். ஊருக்கு வந்து படிக்கலாம்ன்னு ஊருக்கே வந்துட்டேன். அதுக்கப்புறம் வேலைக்குப் போயிட்டு மனநல பாதிக்கப்பட்டவங்களுக்கு இல்லம் அமைக்கலாம்ன்னு நினைச்சிட்டுருந்தேன். ஆனா, வேலை தள்ளி போயிக்கிட்டே இருந்துச்சு. வேலைக்குப் போயிட்டு நாளு காச கையில பாத்துட்டா மாற்றுத்திறனாளிகளுக்கு உதவனுங்கிற எண்ணம் போயிடும்னு தோணுனதுனால தேர்வுக்குப் படிக்கிறத முழுசா விட்டுட்டேன். நாமளும் ஏதோ பொறந்தோம், வாழ்ந்தோம் இறந்தோம்ன்னு இருக்கக் கூடாது. அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் எல்லாம் பெரும்பாலான இடங்கள்ல இருக்கு. ஆனா, மனவளர்ச்சி குன்றியவர்களை எல்லாரும் ஒதுக்குறாங்க. அவங்கள நம்ம பாத்துக்கணும். அவங்க வாழ்க்கையில ஒரு ஒளி ஏத்தணும்னு 2007ல ஓர் இடத்த வாடகைக்கு எடுத்து 'சுடர் இல்லத்தை' ஆரம்பிச்சேன்.

காலையில விட்டுட்டு சாயங்காலம் வந்து கூட்டிட்டு போற மாதிரி நாளு பிள்ளைகளோடதான் தொடங்குனேன். அப்போவே என்னை சுத்தி இருந்தவங்க எல்லாம் `இதெல்லாம் ஒரு வேலைன்னு பண்றான் பாரு'ன்னு ரொம்பவே கேவலமா பேசுனாங்க. எங்க வீட்டுலையும் நம்ம இருக்குற நிலைமையில இது எல்லாம் தேவையா? வேலைக்குப் போன்னு சொன்னாங்க. நான் யாரு சொன்னதையும் காதுல வாங்கல. நான் எனக்கு சரின்னு தோணுன வேலையை மட்டும் செஞ்சேன். நாலு பேரோட ஆரம்பிச்ச இல்லத்துல, இன்னைக்கு 90 பேர் வரை இருக்காங்க. தமிழ்நாட்டுல உள்ள பல மாவட்டங்கள்ல இருந்து 15 வயசுல இருந்து 45 வயசு மாற்றுத்திறனாளிகள் இந்தச் சுடர் இல்லத்துல இருக்காங்க.

அப்போ என்ன கேவலமா பேசுவங்கலாம் இப்போ எங்களோட இல்லத்துக்கே வந்து ஸ்பான்சர் பண்றாங்க. சமூகத்துல எனக்குன்னு ஓர் அடையாளத்தை உருவாக்கி என்ன தாழ்த்திப் பேசுனவங்கள விட... ஒரு படி மேல‌ உயர்ந்து இருக்கன்னு நினைக்கும்போது சந்தோசமா இருக்கு. இங்க இருக்குற 70 மாற்றுத்திறனாளிகள் சுய உணர்வு இல்லாதவர்கள். குழந்தை மாதிரி நம்ம எந்த இடத்துல உட்கார வச்சுட்டுப் போறோமோ... அந்த இடத்துலதான் உட்கார்ந்து இருப்பாங்க. அந்த 70 பேருக்கும் எல்லாமே நம்ம தான் செய்யணும். தினமும் காலையில நாளு மணிக்கு எழுந்து, அந்த 70 பேரும் படுத்து இருந்த இடத்தை சுத்தம் பண்ணி, அவங்கள குளிக்கவச்சு, விபூதி பூசி பிரேயருக்கு கூட்டிட்டு வர மணி எட்டு ஆகிடும். அதுக்கு அப்பறம் டீச்சர்லாம் வருவாங்க. இங்க இருக்குற பசங்களால படிக்க முடியாது.

கல்யாணம் பண்ணா வரவங்க எப்டி இருப்பாங்கன்னு தெரியாது. யாருக்காகவும் எதுக்காகவும் இந்த‌ பசங்கள இழக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதனால தான் கல்யாணம் செய்யல. இவங்க தான் என்னோட வாழ்கையே... இவங்களை தாண்டி வேறு எதையும் யோசிக்க முடியல. இப்போ வரைக்கும் இங்க ஆண் மாற்றுத்திறனாளிகள் மட்டும் தான் இருக்காங்க. பொண்ணுங்களுக்கும் பண்ணச் சொல்லி நிறைய பேர் கேட்டுட்டாங்க. ஆண், பெண் ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல பண்ணா சரியா வருமான்னு தெரியல. வருங்காலத்துல பெண்களுக்கு தனியா இல்லம் அமைக்கணும்னு ஆசை இருக்கு.

தன்னோட வேலைய தானே செஞ்சிக்க தெரியாதவங்க தான் இங்க அதிகங்கிறதுனால, அவங்களுக்கான வேலையை முடிஞ்ச அளவு அவங்களே செஞ்சுக்குற மாதிரி பயிற்சி கொடுப்போம். இங்க வரும்போது எல்லாருமே ரொம்ப ஆக்ரோசமா தான் வருவாங்க. சிலநேரம் அடிப்பாங்க, என்ன பண்ணுவாங்கன்னே நம்மாள சொல்ல முடியாது. ஆனா, பழக பழக பயிற்சி கொடுத்ததும் கொஞ்ச கொஞ்சமா நம்ம வழிக்கு வருவாங்க.

மனநல பாதிக்கப்பட்ட குழந்தைகள் பொறந்தா ஊர்ல என்ன சொல்லுவாங்கன்னு நெனச்சு, அந்தக் குழந்தைகளை வீட்டுக்குள்ளயே அடச்சு வைக்காதீங்க. அவங்களுக்கும் உலகம் இருக்கு. அவங்களுக்கு அதைக் காட்டுங்க. உங்களால பாத்துக்க முடியலன்னா எங்கள மாதிரி எத்தனையோ இல்லங்கள் இருக்கு. அதுல சேர்த்துவிட்டுருங்க. அந்தக் குழந்தைங்க அவங்க உலகத்துல ஜாலியா இருக்கட்டும்.

இப்ப ஒரு பிரைமரி ஸ்கூல ஒப்பந்தத்துக்கு எடுத்து இருக்கேன். அதுல இருந்து வர்ற வருமானத்தை வச்சு இந்த இல்லத்தைப் பார்த்துக்கிறேன். சாப்பாட்டுல எந்தக் குறையும் வெக்குறதில்ல. இதை நான் ஒரு வியாபாரமா பண்ணல. யாருக்கு உதவி செய்யணுன்னு விருப்பட்டு செய்றாங்களோ அதை அப்படியே ஏத்துக்குறோம்" என மனம் நிறைவாய் பேசி முடித்தார்.

நீலகிரி: குப்பையில் தவறிய தங்க மோதிரம்; தேடி உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணிப் பெண்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது மைல் பகுதியைச் சேர்ந்தவர் கதீஜா. வழக்கம்போல் வீட்டின் குப்பைகளை சேகரித்து நகராட்சி தூய்மை வாகனத்தில் நேற்று முன்தினம் காலை கொடுத்திருக்கிறார். வ... மேலும் பார்க்க