Eggless Cakes: `சாக்லேட் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?
'எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... அறிவாலயம் போகும் வைத்திலிங்கம்?' - உச்சக்கட்ட பரபரப்பில் டெல்டா!
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்கவராக டெல்டா அதிமுக-வில் வலம் வந்தவர்.
சோழமண்டல தளபதி என்றே இவரை அதிமுகவினர் அழைத்தனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடர்ந்தார். பின்னர் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை உருவானது. தினகரன் தரப்பு, எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது. அப்போது வைத்திலிங்கம் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெல்லமண்டி நடராஜன் உட்பட பத்துக்கு மேற்பட்டவர்களை தினகரன் பக்கம் செல்லவிடாமல் தடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் வராமல் அரணாக இருந்தார்.

இதைதொடர்ந்து தி.மு.க ஆட்சி அமைந்தது. அதிமுகவிற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதைக் கடுமையாக எதிர்த்த நிலையில் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி.
ஓபன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து வெளியேறி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி, கட்சியை நிர்வகிக்க இரட்டை தலைமை வேண்டும் என்றும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.
எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து வந்த வைத்திலிங்கம் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார். '2025 டிசம்பருக்குள் ஒருங்கிணைப்பு நிகழ்ந்து விடும். அது நடந்தால் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்' என்றார்.
இந்நிலையில் உடல்நிலை சிகிச்சை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வைத்திலிங்கம் வெளியில் தலைகாட்டுவதைக் குறைத்து கொண்டார். அவர் திமுக-வில் இணையப்போவதாக வந்த செய்திகளை அவரது தரப்பு மறுத்தது. சமீபத்தில், நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் உரிமை மீட்புக் குழு, உரிமை மீட்புக் கழகம் என மாற்றப்பட்டது.
அதில் கூட ஒருங்கிணைப்பு கருத்தை முன் வைத்த வைத்தவைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார்.
இந்தச் சூழலில் சென்னையில் இருந்த வைத்திலிங்கம் பொங்கல் பண்டிக்கைக்கு தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த அவரை அவரது ஆதரவாளர்கள் சந்தித்தனர். பொங்கல் அன்று சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் இருந்தவரை திமுக நிர்வாகிகள் சிலர் சந்தித்து பொங்கல் வாழ்த்து சொன்னார்கள். இது அரசியல் வட்டத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
வைத்திலிங்கம் திமுகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இந்த முறை வைத்திலிங்கம் தரப்பு மற்றும் அவரது உதவியாளரான ராஜா உள்ளிட்ட யாரும் இதை ஆணித்தரமாக மறுக்கவில்லை.
இந்நிலையில், மறைந்த எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவில் தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்..ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாட்டை வைத்தி செய்தார். அவருடைய ஆதரவாளர்களை இதற்கு வரச்சொல்லி தகவல் கொடுக்கப்பட்டது.
ஆனால் ஊரில் இருந்தும் வைத்திலிங்கம் மாலையிடச் செல்லாமல் தவிர்த்தார். அவரது ஆதரவாளர்கள் மட்டும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இது அரசியல் மட்டத்தில் உற்று கவனிக்கப்பட வைத்தி திமுகவிற்குள் அடைக்கலமாவது உறுதியாகி விட்டது என்றனர்.

இந்தச் சூழலில் வைத்தி உடனடியாக சென்னை கிளம்பினார். வைத்தியைச் சுற்றி இருப்பவர்கள் யாருடைய போனையும் எடுக்கவில்லை. அவரது மூத்த மகன் பிரபு நாங்கள் திமுகவிற்குச் செல்ல மாட்டோம், லோக்கலில் எங்களுக்கு எதிர்ப்பு அரசியல் செய்யக்கூடியவரால் இது போன்ற வதந்தி கிளப்பி விடப்படுகிறது என்றார்.
திமுகவில் சேரும் தகவல் வெளியில் கசிந்து விட்டால் வெளிப்படையாகச் சேரும் போது போதிய கவனமும், பரபரப்பும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் மறுத்து வந்தனர். இந்நிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைவது உறுதி என்கிறார்கள்.
இன்று காலை 11.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து அறிவாலயம் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகச் சொல்லப்படுதால் டெல்டா அரசியல் பரபரனு தகிக்கிறது.
இது குறித்து சிலரிடம் பேசினோம், ''திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செயலாளராக இருந்து கட்சியைக் கட்டு கோப்பாக வைத்திருந்தார். மறைந்த முதல்வர் கருணாநிதியால் சோழமண்டல தளபதி என அழைக்கப்பட்டவர் கோ.சி.மணி. வயது மூப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவர் மாவட்ட செயலாளர் பதவில் இருந்து எடுக்கப்பட்டார்.
அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஒருங்கிணைந்த தஞ்சாவூரில் மாவட்ட செயலாளர் ஆனார். சில காரணங்களால் ஸ்டாலினின் குட்புக்கில் பழநிமாணிக்கத்தால் இடம் பெற முடியவில்லை.
கோ.சி.மணிக்குப் பிறகு டெல்டாவில் பெயர் சொல்ல கூடிய வகையில் யாரும் வளரவில்லை. தஞ்சாவூரில் ஆளுமையான நிர்வாகி திமுகவில் இல்லாததால் உட்கட்சி பூசல் அதிகரிப்பதாக தலைமை கருதியது. சீனியரான துரை.சந்திரசேகரன் கமிஷன் வாங்குவதை தவிர நமக்கு எதுக்கு வம்புனு எதிலும் பட்டும்படாமலும் ஒதுங்கி நிற்பார்.
இதனால் ஒரு வெற்றிடம் இருப்பதாக தலைமை கருதியது. இந்தச் சூழலில் வைத்திலிங்கத்தை திமுகவிற்குள் இழுக்க அமைச்சர் அன்பில் மகேஸ் மூலம் தூண்டில் போடப்பட்டது. அன்பில் மகேஸ் மனைவியின் ஊரும் தெலுங்கன்கடிக்காடு என்பதாலும், ஏற்கனவே இவர்கள் உறவினர்கள் என்பதாலும் இந்த மூவ் ஈசியாக அமைந்தது.
சாதரணமாக இருந்த என்னை உச்சாணி கொம்பில் உட்கார வைத்தவர் அம்மா ஜெயலலிதா, அவரது விசுவாசியான என்னால் எப்படி திமுகவிற்கு வர முடியும் எனக் கேட்டு தவிர்த்திருக்கிறார் வைத்தி. அப்போது, செந்தில்பாலாஜியும் வந்துருங்கண்ணே உங்களுக்கான மரியாதை தரப்படும் எனச் சொன்னது அவரை யோசிக்க வைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் தரப்புக்கு கட்சியில் இடம் இல்லைனு திட்டவட்டமாக கூறியது வைத்தியைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஒரத்தநாடு தொகுதியில் 2021ல் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வருகிறார் வைத்தி.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டது இப்படியே போனால் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் என நினைத்தார். எம்.பி தேர்தலில் ஓ.பி.எஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டதை போன்ற நிலையையும் அவர் விரும்பவில்லை.

இதனால் அன்பில் மகேஸ் வீசிய வலையில் சிக்கி விட்டார். தனக்கு மட்டும் நல்லது நடந்தால் போதாது, தன்னையே நம்பியிருக்கும் தீவிர விசுவாசிகளான வெல்லமண்டி நடராஜன், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன், தஞ்சாவூரில் முன்னாள் துணை மேயர் மணிகண்டன், சண்முகபிரபு, சாமிநாதன், செல்லத்துரை, நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ் ஆகியோருக்கும் எதவாது செய்ய வேண்டும் என நினைத்தார்.
முதலில் திமுகவில் சேர்வதைத் தப்பான முடிவுண்ணே, நாம் பேசாம அமைதியாக இருந்துடலாம் என்று பலரும் சொல்லியுள்ளனர். 'நானும் குழப்பமான மனநிலையில்தான் இருந்தேன். ஆனால் நம்மை தூசியாக நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும், எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது நடக்கும். அரசியலில் இதெல்லாம் சகஜம்' என அவர்களைச் சமாதானம் செய்திருக்கிறார் வைத்தி.
இதில் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன், நாஞ்சில் சத்தியராஜ் உள்ளிட்டோர் வைத்தியுடன் செல்வதற்குச் சம்மதித்து விட்டதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் அதிமுகவில் இணைய பேசி வருகின்றனர்.
ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர், வரும் தேர்தலில் தனக்கு மற்றும் தன்னை சேர்ந்தவர்களுக்கு என மூன்று சீட் கேட்டிருக்கிறார். வைத்தியின் வருகையை அமைச்சர் கே.என்.நேரு தரப்பு எதிர்த்துள்ளது.
வெல்லமண்டி நடராஜனுக்கு மவுசு இல்லாத பட்சத்தில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தலைமையிடம் கேட்டுள்ளனர். அவர்களைச் சமாதானம் செய்த தலைமை, வைத்தியிடம் உங்களுக்கு சீட், அமைச்சர் பதவி தருவதாகக் கூறி டீல் பேசி முடிக்கப்பட்டதாம்.

இன்று காலை 11.30 மணியளவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வைத்திலிங்கம் அதன் பிறகு அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருடன் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோரும் செல்ல இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நேற்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த பிறகு மத்திய மாவட்ட செயலாளரான துரை.சந்திரசேகரன், எம்.பி முரசொலி உள்ளிட்டோரை திரும்பி வரச்சொல்லி திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வர பாதியில் மீண்டும் சென்னை திரும்பி விட்டனர். இதனால் வைத்தி அறிவாலயத்தில் அடைக்கலமாவது உறுதி என்றனர்.


















