IRAN முன்னாள் அதிபரை வைத்து Israel நடந்த ரகசிய ஆபரேஷன் - முழு உண்மை! | Decode
எ.வ.வேலு விவகாரம் : `நீங்க ஆளுங்கட்சியாக இருந்தபோதும் இதை தானே.!' - நீதிபதிகள் சுவாரஸ்ய கமெண்ட்
தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.
அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
ஜூன் 25 அன்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றார். அவர் நாட்டை விட்டு வெளியேறியதால் லஞ்ச ஒழிப்புத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதனை எதிர்த்து எ.வ.வேலு தொடர்ந்த வழக்கில், லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 15-ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்:
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "வழக்கு விசாரணை தொடங்கிய உடனே எதிர்மனுதாரர் சிங்கப்பூருக்குச் சென்று தங்கிவிட்டார். மனுதாரர் கேட்காத ஒரு கோரிக்கையின் மீது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது" என வாதாடினார்.
அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் தானே உள்ளது? தற்பொழுது எ.வ.வேலு இந்தியாவிற்குத் திரும்பிவிட்டாரே, அவரிடம் விசாரணை நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியிருக்கும் போது, நீங்கள் தாராளமாக விசாரிக்கலாமே" என்று கேள்வி எழுப்பினர்.

கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம்:
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க எ.வ.வேலுவுக்கு உத்தரவிட வேண்டும் என்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவர் ஒத்துழைப்பார் என்று கூறிய பிறகு ஏன் தனியாக உத்தரவிட வேண்டும் எனக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மேலும், எ.வ.வேலுவின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை கோரிய போது, "இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காது, இக்கோரிக்கையை நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே முன்வையுங்கள்" என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நீதிபதிகளின் சுவாரசியமான நகைச்சுவை கமெண்ட்:
விசாரணையின் போது எ.வ.வேலு தரப்பில், "நான் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதால், மாநிலத்தில் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "நீங்களும் ஆளுங்கட்சியாக இருந்தபோது இதைத்தானே செய்திருப்பீர்கள்!" என்று நீதிமன்ற அறையிலேயே நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்தது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.


.webp)
















