ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாந...
"மோடி சொன்ன ஒரு வார்த்தை; Ironman இலக்கை நோக்கி என்னைத் திருப்பியது!" - அண்ணாமலை
நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.
மாநிலம் முழுவதிலிருந்தும் தேர்வான 65 மாணவர்கள் இதில் பங்கேற்று, முன்னணி ஆளுமைகளுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து கலந்துரையாடினார்.

உடல் எடையைக் குறையுங்கள்
அவர் உடல் நலன் குறித்துப் பேசுகையில் "காவல் துறையில் பணியாற்றும்போது என் உடல் எடை 88 கிலோ இருந்தது. அரசியலுக்கு வந்த பிறகு காலப்போக்கில் உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது. நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, என் உடல் எடையைப் பற்றி கேட்டார். ' மன அழுத்தம் காரணமாக எட்டு கிலோ வரை எடை அதிகரித்துவிட்டது' என்றேன். 'பிரதமராக எனக்கும் எவ்வளவோ மன அழுத்தங்கள் இருக்கிறது. ஆனாலும் உடல் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். 'உடல் எடையைக் குறையுங்கள், உடல்நலத்தை கவனியுங்கள்' என்று அறிவுரை கூறினார்.
அதன்பிறகு மூன்று மாதங்கள் தொடர்ந்து முயற்சி செய்தேன். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையையே மாற்றினேன். இருந்தாலும், உடல் எடை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. செல்லும் இடங்களிலெல்லாம் தொண்டர்கள் வீட்டில் டீ, காபி எனக் கொடுப்பதை மறுக்காமல் குடிப்பதால், உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது.
அப்போதுதான் உலகின் மிகக் கடினமான டிரையத்லான் (Triathlon) போட்டிகளில் ஒன்றான Ironman பற்றி தெரிந்துகொண்டேன். 3.8 கி.மீ. நீச்சல், 180 கி.மீ. சைக்கிள் ஓட்டம், 42.2 கி.மீ. மராத்தான் ஆகிய மூன்று பிரிவுகளையும் இடைவெளியின்றி தொடர்ந்து நிறைவு செய்ய வேண்டிய அந்தப் போட்டி என்னை மிகவும் ஈர்த்தது.
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் Ironman போட்டியில் பங்கேற்றது எனக்கு மேலும் ஊக்கமளித்தது. நானும் அந்தப் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினேன். தற்போது இரண்டாவது ஆண்டாக Ironman போட்டிக்காகத் தயாராகி வருகிறேன்." என்றார்
மாணவர்களிடம் பேசும்போது, "40 வயதுக்கு மேல் உடல்நலத்தில் கவனம் செலுத்துவதைவிட, இப்போதே அதற்கான பழக்கத்தைத் தொடங்குங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தைப் பாதுகாப்பதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய முதலீடு" என்று கூறினார்.













