Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு...
ஏற்காடு: ஸ்டிக்கர் பிரிக்காத புத்தாடை, புதருக்குள் சிறுமியின் சடலம், விலகாத மர்மம் - என்ன நடக்கிறது?
சேலம் மாவட்டம் ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதை அமைந்துள்ள வழுக்குப்பாறை பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறுமி ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமியின் இறப்பை உறுதி செய்து, ஆழமான பள்ளத்தின் புதருக்குள் கிடந்த 15 வயது சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமியின் உடலில் பெரிய அளவிலான வெளிக்காயங்கள் ஏதும் இல்லை என்றாலும், அவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த சிறுமி யார் என்று அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றப் பின்னனியைக் கண்டறியும் பணியில் 3 தனிப்படை போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னணி குறித்து காவல்துறையினர், " மலைப்பாதையின் 15 முதல் 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிறுமியின் சடலம் புதர் பகுதியில் கிடந்ததை அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் பார்த்து தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறந்த சிறுமி சாம்பல் நிற ஜெர்கினும், கத்திரிப்பூ நிற கவுனும் அணிந்திருந்தார். இதில் விசித்திரம் என்னவென்றால், அந்த கவுனில் கடையின் பெயர் மற்றும் விலை விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாமல் புத்தம் புதியதாக அப்படியே இருந்தது.

சிறுமியின் புகைப்படம் வெளியிடப்பட்டு, அண்டை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் அண்மையில் பதிவான சிறுமிகள் காணாமல் போன வழக்குகள் தீவிரமாக சரிபார்க்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து காணாமல் போன சிறுமியின் அடையாளங்களோடு ஒத்துப் போகிறதா என்று முதலில் பார்க்கப்பட்டது, ஆனால் அந்த சிறுமி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
குப்பனூர் மலைப்பாதை சுங்கச்சாவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து தேடி வருகிறோம். சம்பந்தப்பட்ட துணிக்கடையைத் தேடி வருகிறோம். முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுமியின் மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும். ஏற்காடு, கொளத்தூர், ஓமலூர் ஆகிய 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் இயங்கி வருகின்றன" என்றனர்.
















