கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப...
கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு!
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில்... கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுமி கொலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகளான கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர். சாக்லேட் வாங்கித் தருவதாக சிறுமியை கார்த்தி மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், அதற்கு அவரது நண்பரான மோகன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சம்பவம் நடந்த 21 நாள்களில் 819 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். மேலும் கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வழக்கறிஞர்கள் வாதம் நடந்து வந்தது. நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் குற்றச்சாட்டு விவரங்களை எழுத்து மூலமாக 250 பக்கத்திற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 221 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்ட சூழலில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் கடந்த 16 ஆம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று முதலில் அறிவித்தார்.
ஆனால் அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஹரிஹரன் அறிவித்து இருந்தார். இதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன் இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஹரிஹரன் அறிவித்தார். இருவருக்குமான தண்டனை விவரங்கள் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதியன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இதற்கு முன்னதாக நீதிமன்றத்திற்கு மோகனை அழைத்த வந்தபோது செய்தியாளர்களிடம், “இந்த வழக்கிற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. கார்த்தியைப் பிடித்துக் கொடுத்ததே நான்தான். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


















