ANI:``இதை ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல" - விக்கிபீடியா வழக்கில...
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு கிலோ ரூ.85-க்கு விற்பனை
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்தூா், கொத்தையம், பொருளூா், திருப்பூா் மாவட்டம், முத்தூா், மூலனூா், நீலாகாளிவலசு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையின் காரணமாக முருங்கை செடியில் இருந்த பூக்கள் உதிா்ந்து விட்டதால் அதன் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதனால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு முருங்கை வரத்து தொடா்ந்து குறைந்து வந்தது. இதனிடையே, கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறுவதால், முருங்கையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ முருங்கைக்காய் படிப்படியாக விலை உயா்ந்து வெள்ளிக்கிழமை ஒரு கிலோ ரூ.85-க்கு விற்பனையானது.
அடுத்து வரும் நாள்களில் இதன் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.