`முதல்வர் அறையை நவீனமாக மாற்றுகிறார்; அவர் நடிகர் ஆடம்பரமாக தான் இருப்பார்'- எடப...
ஒரு கனவு; ஓயாமல் கேட்கும் கைத்தறி சத்தம்! - இரு மகன்களையும் மருத்துவராக்கிய சேலம் நெசவாளர் தம்பதி
அந்தச் சிறிய வீட்டில் பகல் முழுதும் ஓயாமல் கேட்கிறது கைத்தறியின் சத்தம்.
அந்த நூல்களுக்கு நடுவேதான் ஒரு தந்தையின் வியர்வையும், ஒரு தாயின் கனவும் நெய்யப்பட்டு கொண்டிருந்தன. தான் பெற வேண்டும் என்று நினைத்த கல்வியை தனது இரு மகன்களையும் மருத்துவராக்கி வாழ்வில் சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள திருவள்ளுவர் கூட்டுறவு சொசைட்டியில் தினக்கூலிக்கு தறி நெய்து வரும் ஜெயராம் - லட்சுமி தம்பதிகளின் முதல் மகன் பிரவீன்குமார் மதுரை வாடிப்பட்டியில் கால்நடை உதவி மருத்துவராகவும், இரண்டாவது மகன் சுந்தர் ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

``கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி சேலைகளை நெய்து கொடுத்து மாதம் ரூ.10,000 வீதம் இருவரும் சம்பாதிக்கின்றோம். இரு மகன்களும் பள்ளி படிக்கும் போது அவர்களுடைய ஆசிரியர்கள் எங்களிடம், “இருவரும் நன்றாக படிக்கிறார்கள், அவர்கள் விருப்பத்திற்கு அவர்களை படிக்க வையுங்கள்” என்று கூறினார்கள்.
நான் நன்கு படித்தேன். ஆனால் என் தந்தை என்னை படிக்கவைக்கவில்லை. அதனால் அவர்கள் விரும்பியதை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
முதல் மகன் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளங்கலை கால்நடை அறிவியல் & கால்நடை பராமரிப்பு (BVSc&AH) படித்தான்.
இரண்டாவது மகன் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் இளநிலை மருத்துவம் (MBBS) படித்தான். இருவரும் அரசு கல்லூரியில் படித்ததால் எங்களுக்கு அவர்களின் விடுதி கட்டணம் பெரியவனுக்கு வருடத்திற்கு ஒரு லட்சமும், சின்னவனுக்கு வருடத்திற்கு நாற்பதாயிரமும் ஆனது.
என் மனைவி தறி நெய்து வாங்கிய கூலியை வைத்து அவர்கள் இருவருக்கும் விடுதி கட்டணம் செலுத்தினோம். நாங்கள் சம்பாதிப்பது அனைத்தும் அவர்கள் இருவரின் படிப்பு செலவுக்கே சரியாக இருந்தது. அதனால் நாங்கள் எங்கும் வெளியே எங்கேயும் செல்லாமலும்,மிகவும் சிக்கனமாக வாழ்ந்து வந்தோம்.
தற்போது முதல் மகன் தமிழ்நாடு அரசு மதுரை வாடிப்பட்டியில் துணை கால்நடை மருத்துவராகவும், இரண்டாவது மகன் இளநிலை மருத்துவர் பட்டம் பெற்று தற்பொழுது முதுநிலை மருத்துவர் பட்டத்திற்கு பயிற்சி பெற்று வருகிறான்.

எங்கள் உறவினர்கள் கூட அவனை வேலைக்கு அனுப்ப சொல்லி கூறினார்கள். நான் அவன் படித்து அவனுக்கு பிடித்த துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று கூறி விட்டேன். தறி நெய்யும் போது ஏற்படும் முதுகுவலி, கால்வலி போன்றவற்றை அனுசரித்து நெய்து அவர்கள் வாழ்வில் பெறும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க எண்ணினோம்.
எங்கள் குடும்பத்தில் இருவரும் மருத்துவர் ஆனதே முதல் முறை, அவர்கள் மருத்துவர் ஆனது வாழ்க்கையில் அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் மிகவும் சந்தோசமாக இருந்தது.

எங்களுக்கு பின்பு இந்த தொழிலை செய்ய ஆள் இல்லாதது ஒருபக்கம் சற்று வருத்தமாக உள்ளது. நெசவு தொழில் செய்யும் அனைவரும் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அதற்கான கூலி கிடைப்பது மிகவும் தாமதமாகிறது. இதனை அரசு கவனத்தில் கொண்டு நெசவுத்தொழில் செய்யும் அனைவருக்கும் சரியான நேரத்தில் ஊதியத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்றார்கள் தம்பதியாக.
ஒரு தறி நெய்யும் வீட்டிலிருந்து உருவாகியிருக்கும் இந்த இரண்டு மருத்துவர்களின் வெற்றிப் பயணம், "முயற்சி இருந்தால் எட்ட முடியாத உயரமும் இல்லை" என்பதை உரக்கச் சொல்கிறது!



















