"தவெக-விற்குச் செல்ல செங்கோட்டையனை நான் தூண்டிவிட்டேனா?" - டிடிவி தினகரன் சொல்வத...
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; வீடியோ ஆதாரத்துடன் புகார்; தலைமறைவான காவலர்
சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீஸாரின் அலட்சியம் காரணமாக தற்போது அந்தக் காவலர் தலைமறைவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியில் கோவையைச் சேர்ந்த மாணவி படித்து வருகிறார். இவர் விடுமுறைக்காக கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து கோவைக்கு வரும் இன்டர்சிட்டி ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் வந்துள்ளார்.
அப்போது, இவர் அருகில், கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் ஷேக்முகமத் என்பவரும் பயணித்துள்ளார். அந்த ரயில் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே வந்தபோது, அருகே அமர்ந்து இருந்த காவலர் ஷேக் முகமத், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது செல்போனில் காவலரின் செய்கையை வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார். மேலும், இதுகுறித்து அந்த மாணவி ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஷேக் முகமத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, தூக்கக் கலக்கத்தில் தெரியாமல் மாணவி மீது கை பட்டதாக காவலர் தெரிவித்தார். இருப்பினும், அப்பெண் புகார் அளித்ததையடுத்து காவலர் ஷேக் முகமத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீடியோ ஆதாரத்துடன் ஷேக் முகமத் மீது புகார் அளித்தும், போலீஸாரின் அலட்சியத்தால் அவர் தற்போது தலைமறைவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் விசாரித்தபோது, "சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கமாக விடுமுறை நாள்களில் சென்னையில் இருந்து ரயிலில் கோவைக்கு வருவது வழக்கம். அவ்வாறு கடந்த சனிக்கிழமை ரயிலில் வந்து கொண்டிருந்தபோது, கூட்டம் அதிகமாக இல்லாத நிலையிலும், ஆண் ஒருவர் தனக்கு அருகில் வந்து அமர்ந்துள்ளார்.
தொடக்கத்தில் இருந்தே அவரது செயல்பாடுகள் சரியாக இல்லை. அரக்கோணம் அருகே வந்தபோது தூங்குவதுபோல் அமர்ந்திருந்த அவர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்பதால் அவருடைய செல்போனில் அந்த நபரின் செயல்பாடுகளை வீடியோவாகப் பதிவு செய்து, அரக்கோணம் ரயில்வே போலீஸாருக்கு மாணவி புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து காட்பாடியில் அவரைக் கீழே இறக்கி போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கோவையைச் சேர்ந்த காவலர் என்பது தெரியவந்தது.

இருந்தபோதிலும் மாணவியிடம் அத்துமீறிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.
காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது" என்றனர்.
இதனிடையே காவலரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான சட்டக் கல்லூரி மாணவி விசாரணை நடத்திய பெண் அதிகாரியிடம் பேசிய செல்போன் உரையாடல் வெளியாகி உள்ளது. அதில் காவல் அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட காவலர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்புகிறார்.
மேலும், கூட்ட நெரிசலில் இவ்வாறு தெரியாமல் நடந்ததாகக் கூறி அவர் சொல்லித் தப்பிக்கக் கூடும் என்பதாலேயே ஆதாரத்திற்காக வீடியோ பதிவு செய்து காவல்துறைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறுகிறார். வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் காவலரை போலீஸார் கைது செய்யாமல் தப்பவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் கூறுகையில், "சட்டக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார் பெற்றவுடன், காட்பாடி ரயில்வே போலீஸார் உடனடியாகச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நபரிடம் விசாரித்தபோது, அவர் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றுவது தெரியவந்தது.
தூக்கக் கலக்கத்தில் மாணவி மீது தெரியாமல் கைப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தொடர் விசாரணையில் திட்டமிட்டே மாணவியிடம் காவலர் ஷேக் முகமத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

அப்போது மாணவி தரப்பில் இருந்து வீடியோ ஆதாரம் ஏதும் காவல் துறையிடம் வழங்கவில்லை. வீடியோ ஆதாரத்தை வழங்கி இருந்தால், அப்போதே கைது செய்திருப்போம். அதுமட்டுமில்லாமல், ஷேக் முகமத்தை ரயிலில் இருந்து இறக்கிவிட்டால்போதும் என்பது மாணவி முதற்கட்டமாக அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்படவில்லை. தற்போது, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ய காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. ஓரிரு நாள்களில் ஷேக் முகமத் கைது செய்யப்படுவார்" என்றார்.



















