சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூர...
ஓ.பன்னீர் செல்வம் தவறவிட்ட வாய்ப்புகள்! – இனி எங்கே செல்லும் இந்த பாதை?
2001-ம் ஆண்டு மத்தியில்... சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியிலிருக்கும் அந்த சலூனுக்கு ஆட்டோவில் வந்திறங்கினார், அந்த அரசியல்வாதி. சில நிமிடங்களில் முகச்சவரம் முடித்துவிட்டு கிளம்பத் தயாரான போதுதான், அவரைக் கவனிக்கிறார் சலூன்காரர்.
ஜெயலலிதாவின் சாய்ஸ்!
அப்படியே கடையில் கிடக்கும் செய்தித்தாளையும் பார்க்கிறார். 'தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்கிறார்' என்றச் செய்தியையும் பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தையும் பார்த்த சலூன்காரருக்கு, கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை. ஆம், கடைக்கு ஆட்டோவில் வந்திருந்தது ஓ.பன்னீர் செல்வமேதான். முதன்முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக சலூன் வந்திருந்தார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது, ஜானகி அணிக்குச் சென்றவர் என்றாலும், தான் பதவி விலக வேண்டி வந்த போதெல்லாம்... ஒரே சாய்ஸாக ஜெயலலிதா கை காட்டியது இவரைத்தான். எங்கேயோ பெரியகுளத்தில் உள்ளாட்சி மன்றப் பதவியில் இருந்தபடி அரசியல் வெளிச்சம் படாமல் இருந்தவரை, ஜெயலலிதா முன்பாக போய் நிறுத்தியது சசிகலா என்றார்கள்.
மூன்று முறை தமிழக முதல்வராக இருந்திருக்கிறார். நிதி அமைச்சராக தமிழக அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்.
ஆனால் இன்று?!

தன்னந்தனியாக நான் நிற்கும் வேளை!
திக்குத் தெரியாத ஒரு பாதையில் நின்று கொண்டிருக்கிறார். அடையாளம் தந்த அதிமுக-வில் இன்றைய தேதிக்கு இவர் உறுப்பினர்கூட இல்லை. அதிமுக-வை மீட்கப் போகிறேன் என சிலரைச் சேர்த்துக் கொண்டு கடந்த சில வருடங்களாக அறிக்கை விட்டபடி இருந்தார்.
உடன் இருந்த அந்தச் சிலரில், 'மத்த நேரம் சரி, தேர்தல் நேரத்துல ஏதாவதொரு முடிவெடுத்து யார் கூடவாச்சும் போய் பதவி கிதவி கிடைச்சாதானே அரசியல் செய்ய முடியும், இப்படியே இருந்தா எப்படி?' என நினைத்தவர்கள் கிளம்பி விட்டனர்.
எம்.எல்.ஏ-வாக இவருடன் இருந்த மூன்று பேரில் மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் திமுக-வுக்குப் போய் விட்டார்கள். உசிலம்பட்டி ஐயப்பனும், இவரால் ராஜ்ய சபா எம்.பி ஆகும் வாய்ப்பு கிடைத்த முதுகுளத்தூர் தர்மரும் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர் தவெக பக்கம் சென்று விட்டார்.
ஏன் இந்த நிலை?!
ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவராலும் மிகவும் நம்பிக்கையான மனிதராகப் பார்க்கப் பட்ட ஓ.பி.எஸ் இன்று ஏன் இந்த நிலைக்கு ஆளானார்?
அதிமுக சீனியர் ஒருவரிடம் பேசினோம்.
சறுக்களில் தொடங்கிய யுத்தம்!
''அவர் கட்சிக்கு விசுவாசமானவரா நடித்திருக்கிறாரோ என எண்ண தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சியில இல்லாத போது அவருடைய நாற்காலியைப் பயன்படுத்த மாட்டேன்னு சொன்னதெல்லாம் நடந்துச்சு தான். அவருடைய உண்மையான கட்சிப் பாசம், சுயரூபம், போலி விசுவாசம் எல்லாமே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அம்மா உடல்நிலை சரியில்லாத போது முதல்வரானார், சரி. அவங்க மறைஞ்சதும் அந்த சூழலைப் பயன்படுத்தி டெல்லி கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்குச்சு. தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதான்னு அவங்க பார்த்தாங்க.. அந்தச் சூழல்ல இவர் என்ன செய்தார்?
கட்சியின் நலன் முக்கியம்னு நின்றிருக்க வேண்டாமா? 'என்னை ராஜினாமா செய்யச் சொல்றாங்க'ன்னு பொதுவெளியில சசிகலா பத்திப் பேசினாரே, இவருக்கு அடையாளம் தந்ததே இதே சசிகலாதானே? அவர் நினைக்கலையே, அந்த இடத்துல இவரது விசுவசம் கேள்விக்குள்ளாச்சி . அன்னைக்கு கட்சிக்குச் சம்பந்தமில்லாத சிலர் பேச்சையல்லவா கேட்டுட்டு 'தர்ம யுத்தம்' அது இதுன்னு போய் உட்கார்ந்தார்.
ஒருவேளை சசிகலா ராஜினாமா செய்யச் சொன்னதும் ஜெ.,-வுக்காக ராஜினாமா செய்தது போலவே பதவியை விட்டு விலகியிருந்தா, ஜெயிலுக்குப் போகும் முன் சசிகலா இவரையே முதல்வராக்கி விட்டுப் போயிருந்திருக்கலாம்... எடப்பாடி பழனிசாமியின் என்ட்ரியே நிகழாமல் போயிருந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கு.
ஒருவேளை, கட்சி முழுக்க அவர் கட்டுப்பாட்டுல போயிருந்தா வடக்கிலிருந்து என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்து கட்சியை ஒரு வழி பண்ணியிருப்பார்.

அரசியலுக்கு செட் ஆகாத பணிவே துணை!
ஏன்னா, எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற துணிச்சல், கட்சி மீதான பற்று எல்லாம் இவர்கிட்ட கொஞ்சமும் இல்லை. 'எங்க உட்கட்சி விவகாரங்களில் தலையிடாதீங்க' என அமித் ஷாவிடம் சொல்கிற துணிச்சல் எல்லாம் ஓ.பி.எஸ் க்கு கிடையாது.
ஒராண்டுக்கு முன் கூட்டணி அறிவிக்க வந்த அமித் ஷா, 'அதிமுக-வின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்' எனச் சொன்னதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அதேபோல போகிற போக்கில் ஜெயலலிதாவையே விமர்சித்த அண்ணாமலை இருந்தால் கூட்டணி செட் ஆகாது என மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியிலிருக்கும் போதுதான் சொல்லி கூட்டணியை முறித்தார் எடப்பாடி. இந்த இடத்தில் பன்னீர் செல்வம் இருந்திருந்தால் பேசியிருப்பாரா?
2016 முதல் 21 வரையிலான ஆட்சியில் ஜெயலலிதா இல்லாத மிச்சக் காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடித்ததும், கட்சியை இப்போது வரை கட்டுக் கோப்பாக கொண்டு போவதும் எடப்பாடிதான். ஒரு பக்கம் ஆளும் திமுக, இன்னொருபுறம் இவங்க வழியா சவாரி செய்யலாமா எனத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சி. 'திமுக-வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி' எனப் புதுசா கிளம்பியிருக்கிற ஒருத்தர் என எல்லாரையும் சமாளிச்சபடியே கட்சியை 2026 தேர்தலுக்குத் தயார்படுத்திட்டு வர்றார் பழனிசாமி. .
துணிவே துணை என எந்த முடிவையும் எடுக்கிறார் பழனிசாமி. இவர் பணிவே துணைன்னு இருந்தா அரசியலுக்கு அது செட் ஆகாதே. இதை ஏத்துக்கிட்டுப் போயிருந்தா இவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது" என்கிறார் அவர்.

தவற விட்ட அன்பழகன் இடம்!
மூத்தப் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசியபோது,
''எளிமையான மனிதர்தான். ஆனா சமயத்துல என்ன பண்றோம்னு தெரியாமச் செய்கிறாரா அல்லது தெரிஞ்சே செய்கிறாரா தெரியல. அவருடைய சில செயல்பாடுகள் கட்சியின் உண்மையான தொண்டர்கள்கிட்ட இருந்து அவரை அந்நியப்படுத்திடுது. 'இந்த தேர்தல்ல திமுக ஜெயிக்க வாய்ப்பிருக்கு'னு சொல்றது, அதிமுக வேட்பாளரை எதிர்த்து தேர்தல்ல நின்னது போன்ற செயல்களை உதாரணமாகச் சொல்லலாம்.
கட்சியின் கள நிலவரத்தைக் கொஞ்சம் புரிஞ்சு நடந்திருந்தா திமுக-வில் அன்பழகன் இருந்த மாதிரி, நம்பர் 2 என்ற இடத்தில் இவர் அதிமுக-வில் இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார்" என்றார்.

எங்கே செல்லும் இந்தப் பாதை?
எது என்னவோ இன்று திக்குத் தெரியாத காட்டில் நிற்கிறார் பன்னீர் செல்வம். இயக்குநர் பாலா இவரின் உறவினர் என்கிறார்கள். அவரது 'சேது' படத்தில் வரும் 'எங்கே செல்லும் இந்தப் பாதை' பாடல்தான் நினைவுக்கு வருகிறது, பன்னீர் செல்வத்தின் நாளைய அரசியலை நினைத்துப் பார்க்கும் போது. 'நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை' எனச் சொன்ன பிறகும் பழனிசாமி இவரைச் சேர்க்க மறுக்கிறார் என்றால், உள்ளே வந்த பிறகு எப்படியும் மாறலாம் என்று நினைக்கிறார்போல. டி.டி.வி.தினகரன் போல தனியாக ஓரிரு இடங்களை வாங்கிக் கொண்டு தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வருவாரா என்றால், டெல்லியே இவரை விரும்பி அழைக்குமா என்பதும் தெரியவில்லை.
டெல்லியைப் பொறுத்தவரை யார் மூலமாவது ஆதாயம் இருந்தால் மட்டுமே அவர்கள் பக்கம் போவார்கள். மொத்தத்தில் பழைய பன்னீர் செல்வமாக அரசியலில் இனி ஒ.பி.எஸ்.ஸைப் பார்க்க முடியுமா என நோக்கினால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெளிச்சம் இல்லை. காலத்திடம்தான் விடை இருக்கிறது.!












