Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup...
சிறுமிகளை விரட்டிவிட்டு கங்கைக்குப் பால் அபிஷேகம்; வைரலான வீடியோவும்... எழுந்த விவாதங்களும்!
இந்துகளின் புனித நதிகளில் ஒன்று கங்கை கங்கையில் நீராடினால், செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. கங்கையில் நீராடியவர்களின் ஏழு தலைமுறைகளை பாவம் அணுகாது என்றும் சொல்வதுண்டு. கங்கை நதியின்மீது பக்தி காரணமாகவும், மோட்சத்தை எதிர்பார்த்தும் இறந்தவர்களின் உடல்கள், பூ மாலைகள், ஆடை, உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை, பக்தர்கள் மிதக்கவிடுவதைப் பார்க்க முடியும்.
அந்த வகையில், பக்தர் ஒருவர் லிட்டர் கணக்கிலான பாலை கங்கை நதியில் ஊற்றும் `துக்தாபிஷேகம்' என்ற சடங்கைச் செய்கிறார். அப்போது அந்தப் பகுதியில் வாழும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சில சிறுமிகள், கங்கையில் ஊற்றப்படும் பாலை சிறு பாத்திரங்களில் பிடிக்க முயற்சிக்கிறார்கள்.
அப்போது அந்த பக்தர் அவர்களை விரட்டும் வீடியோவை, ஊடகவியலாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
அந்த வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. ஒரு புனிதமான சடங்கைச் செய்வதற்கும், மனிதர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இடையிலான சமநிலை குறித்து சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுவருகிறது.
ஒரு பயனர், "இந்த நதியை விட அந்த ஏழை மக்களுக்குத்தான் இந்தப் பால் மிகவும் அவசியமாக இருந்தது" என்று கருத்து தெரிவித்தார்.
மற்றொருவர், "புனித நதியை இப்படி அசுத்தப்படுத்துவதற்கு பதில், அந்தப் பாலை ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் விநியோகிக்கலாம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொருவர், ``கடவுளை வணங்கும் மனிதர்கள் ஏன் இன்னும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வதில்லை என்று இது என்னை எப்போதும் யோசிக்க வைக்கிறது" என்று கூறினார்.
एक श्रद्धालु गंगा जी में दूध विसर्जन कर रहा है वहीं कुछ गरीब बच्चियां अपने बर्तन लेकर आईं और दूध लेने लगीं। लेकिन.... pic.twitter.com/nvW2zTWo35
— Abhimanyu Singh Journalist (@Abhimanyu1305) January 21, 2026
இன்னொரு பயனர், "அவர் அந்த குழந்தைகளுக்குப் பாலைக் கொடுத்திருந்தால், இன்னும் அதிக புண்ணியத்தைச் சம்பாதித்திருப்பார்" என எழுதினார்.
வேறு சிலர், ``அவரது பக்தி அந்தச் சிறுமிக்கானது அல்ல, அதனால்தான் அவர் அந்தப் பாலைக் கொடுக்கவில்லை. நாம் அனைவரின் பக்தியையும் மதிக்க வேண்டும்" என அந்த நபருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதேப் போன்ற சம்பவங்கள் கும்பமேளாவின் போதும் நடந்தது. பக்தர்கள் நதி நீரில் போடும் ஆடை, பழம் உள்ளிட்டப் பொருள்களை குழுவாக வரும் ஏழைகள், அவற்றை எடுக்கப் போட்டிப்போடும் காட்சிகள் அப்போது வைரலானது.
















