``விஜய்யின் தவெக கட்சியில் நான் ஏன் இணைந்தேன்?'' - செங்கோட்டையன் விளக்கம்
`கரும்புத்தோட்டம்தான் இஷ்டம்' வனப்பகுதிக்கு செல்ல மறுக்கிற சிறுத்தைகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே, சோலாப்பூர், சதாரா போன்ற சில மாவட்டங்களில் கரும்பு விளைச்சல் அதிகமாக இருக்கிறது. புனே மாவட்டத்தில் உள்ள ஜுன்னார் தாலுகாவில் அதிக அளவில் விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்கின்றனர். ஜுன்னார் பகுதியில் அதிக அளவில் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறது. அந்தச் சிறுத்தைகள் பெரும்பாலும் கரும்பு தோட்டத்தில்தான் வாழ்கின்றன. கரும்பு தோட்டத்தில் குட்டி போட்டு வளர்க்கின்றன. பல முறை கரும்புத் தோட்டத்திற்குள் சிறுத்தை குட்டிகள் இருந்ததை விவசாயிகள் பார்த்துள்ளனர். அவற்றை வனத்துறையினரின் துணையோடு அவற்றின் தாயோடு சேர்த்திருக்கின்றனர்.
தாய் சிறுத்தைகள் குட்டிகளை கரும்புத் தோட்டத்திற்குள் பாதுகாப்பாக வைத்துவிட்டு அருகில் உள்ள பகுதிகளில் உணவு தேடி சென்று வருகின்றன.

பல முறை கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்திருக்கின்றனர். ஆனால் அவ்வாறு பிடித்த சிறுத்தைகளை அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய்விட்டாலும் அடுத்த சில நாட்களில் மீண்டும் கரும்புத் தோட்டத்திற்கே வந்துவிடுகின்றன.
இது குறித்து இப்பகுதியில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் இந்திய வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்தின் அதிகாரி பிரசாந்த் காடே கூறுகையில்,''சிறுத்தைகள் வழக்கமாக விவசாய நிலத்தில் தற்காலிகமாகத்தான் தங்கும். ஆனால் இங்கு சிறுத்தைகள் மனிதர்கள் நடமாடும் பகுதியோடு சேர்ந்து வாழப் பழகிக்கொண்டுள்ளன. விவசாய நிலத்தில் இனப்பெருக்கமும் செய்கின்றன. இந்தச் சிறுத்தைகளை பிடித்துச்சென்று வனப்பகுதியில் விட்டாலும் மீண்டும் கரும்புத் தோட்டத்திற்கே வந்துவிடுகின்றன.
அதனால் அவற்றை கரும்புத் தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்கு எப்படி அனுப்புவது என்பது சவாலான காரியமாக இருக்கிறது. தற்போது ஜுன்னார் பகுதியில் இருக்கும் சிறுத்தைகள் அனைத்தும் கரும்புத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவையாகும். கரும்புகளோடு வாழ்ந்து பழகிவிட்டன. அவற்றை வனப்பகுதியில் கொண்டு போய்விடுவது பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் செயலாகும்.
அவற்றின் உணவு பழக்க வழக்கம் மற்றும் மனநிலை கரும்புத் தோட்டத்தை சார்ந்தே இருக்கிறது''என்று தெரிவித்தார்.
கரும்புத் தோட்டத்தில் பிடிபடும் சிறுத்தைகளை எவ்வளவு தூரத்தில் இருக்கும் வனப்பகுதியில் கொண்டு போய்விட்டாலும் தங்களது கரும்புத்தோட்ட இருப்பிடத்தை சரியாக கண்டுபிடித்து வந்துவிடுவதாக வனத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள், பட்டாசு வெடித்து அல்லது டிரம் அடித்து சத்தம் எழுப்பி சிறுத்தைகளை விரட்ட முயற்சி செய்கின்றனர். ஆனால் அதைச் சிறுத்தைகள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று வனத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வனவிலங்கு புகைப்படக்கலைஞரும், ஆராய்ச்சியாளருமான தனஞ்சே ஜாதவ் கூறுகையில்,''சிறுத்தைகள் கரும்புத் தோட்டத்திற்கு வருவதற்குக் காரணம் வனப்பகுதி அழிக்கப்படுவது, வனப்பகுதியில் தீப்பிடிப்பது மற்றும் கரும்பு விளையும் பகுதியை அதிகரிப்பது போன்றவை முக்கிய காரணங்களாகும்''என்று தெரிவித்தார். இப்போது விவசாயிகள் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்லவே அச்சம் அடைந்துள்ளனர். அதிகமான விவசாயிகள் இரவு நேரத்திற்கு தோட்டத்திற்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.


















