ஷிண்டே அணிக்குத் தாவிய சட்டமேலவை உறுப்பினர் சச்சின்; தொடர்ந்து உத்தவிடமிருந்து வ...
கரையும் அதிமுக... தனித்துவிடப்பட்ட திமுக! – தமிழக அரசியல் களத்தில் மாறும் அதிகாரச் சமன்பாடுகள்!
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த ஐந்து தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மைய சக்திகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு உருவாகியுள்ள புதிய அரசியல் சூழல், அந்த இருதுருவ அரசியலின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்பு, திமுக கூட்டணியில் ஏற்பட்ட சிதறல்கள், அதிமுகவில் தொடரும் உள்கட்சி அதிருப்திகள் ஆகியவை தமிழ்நாட்டு அரசியலை புதிய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு அரசியல் சோதனைகளை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டாலும், ஜெயலலிதா காலத்தில் இருந்த ஆதிக்கத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியவில்லை என்ற மதிப்பீடு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
சமீப காலங்களில் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்திகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. புதிய நிர்வாகப் பொறுப்புகளை சிலர் ஏற்க மறுத்திருப்பது, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வெளியேறியிருப்பது, தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது போன்ற நிகழ்வுகள் கட்சியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. தற்போது வரை ஆறு எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியிருப்பதும், அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருப்பதும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேசமயம், பாஜகவுடனான கூட்டணி அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக இரட்டை சவாலாக உள்ளது. தேசியக் கட்சியின் ஆதரவைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயமும், மறுபுறம் தனது திராவிட அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமும் அதிமுகவுக்கு உள்ளது. இதனால் “பாஜக கூட்டணி தேர்தலுக்கானது மட்டுமே. கொள்கை ரீதியானது அல்ல” என்ற விளக்கத்தை மீண்டும் மீண்டும் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
எனினும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தவிர கூட்டணியில் இருந்து பெரிய கட்சிகள் வெளியேறாதது அதிமுகவுக்கு ஓரளவு ஆறுதலாக பார்க்கப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திமுக கூட்டணி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளது. திமுகவுடன் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து புதிய ஆட்சிக் கூட்டணியில் இணைந்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இதனால் நீண்ட காலமாக திமுகவுடன் இருந்த முக்கிய கூட்டணி சக்திகள் தற்போது வேறு அரசியல் தளத்தில் செயல்படுகின்றன.

தற்போது திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்தாலும், முக்கிய கூட்டணி கட்சிகளின் விலகல் திமுகவுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இதனுடன், வைகோ தலைமையிலான மதிமுகவும் ஒன்பது ஆண்டுகள் நீடித்த கூட்டணியில் இருந்து விலகியிருப்பது வரவிருக்கும் தேர்தல்களில் திமுக புதிய கூட்டணி அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் மாற்றம் விஜய்யின் அரசியல் எழுச்சிதான். 1977-க்குப் பிறகு முதல் முறையாக திமுக அல்லது அதிமுக அல்லாத ஒரு சக்தி ஆட்சியைப் பிடித்திருப்பது மாநில அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் வருகை, இரு திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியையும் பாதித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடையே உருவாகியுள்ள புதிய அரசியல் மனநிலை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பாரம்பரிய அரசியல் கணக்கீடுகளை மாற்றியுள்ளது.
இதன் விளைவாக, இன்று அதிமுக தனது எதிர்க்கட்சித் தகுதியை தக்கவைத்துக் கொள்ள போராடும் நிலையில் உள்ளது. அதே நேரத்தில், திமுக மீண்டும் அரசியல் மைய எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது.

கூட்டணியில் ஏற்பட்ட சிதறல்கள் இருந்தாலும், திமுக இன்னும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அமைப்பு வலிமை கொண்ட அரசியல் கட்சிகளில் ஒன்றாகவே உள்ளது. மாவட்ட அளவிலான கட்டமைப்பு, உள்ளாட்சித் தளத்தில் இருக்கும் செல்வாக்கு, நீண்டகால அரசியல் அடித்தளம் ஆகியவை திமுகவின் முக்கிய பலங்களாக உள்ளன.
ஆட்சியில் இல்லாவிட்டாலும், தற்போதைய அரசை நேரடியாக அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் முக்கிய சக்தியாக திமுக தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. எனவே, கூட்டணியில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திமுக முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறுவது இன்னும் அவசரமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. தனித்து களம் காண்பது குறித்து பரிசீலிப்போம் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்திருப்பதும் திமுகவின் இன்றைய நிலையை காண்ப்பிக்கிறது
அதேபோல், அதிமுக அரசியல் ரீதியாக முற்றிலும் பலவீனமடைந்துவிட்டதா என்ற கேள்விக்கும் எழுந்துள்ளது
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்னும் வலுவான அடிப்படை அமைப்பைக் கொண்ட கட்சியாக அதிமுக தொடர்கிறது. பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியைத் தக்கவைத்திருப்பதும் அதன் அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் உள்கட்சி அதிருப்திகள், முக்கிய தலைவர்களின் விலகல்கள், புதிய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்க வேண்டிய அவசியம் மற்றும் விஜய் தலைமையிலான புதிய அரசியல் சவால் ஆகியவை அதிமுக எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
தமிழ்நாடு அரசியல் தற்போது ஒரு முக்கிய இடைநிலைக் கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. திமுக தனது கூட்டணியை மறுசீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதிமுக தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க போராடுகிறது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் அரசியலை நிர்ணயித்த திமுக – அதிமுக அரசியல் சமன்பாடு தற்போது புதிய சோதனையை சந்தித்துள்ளது. இந்த மாற்றமான அரசியல் சூழலில் தங்களை மறுவடிவமைத்து மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவது எந்தக் கட்சி என்பதையும், தமிழக அரசியலின் அடுத்த அத்தியாயத்தை எழுதப் போவது யார் என்பதையும் காலமே தீர்மானிக்க வேண்டும்.















