“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது தான் வழக்கம்..!” – சபாநாயகர் ஜேசிடி பி...
கல்லூரி மாணவனாக தொடங்கிய கனவு... இன்று தொழில்முனவோராக நிற்கும் விழுப்புரம் இளைஞர் அருண் குமார்!
“படிப்பை முடித்துவிட்டு ஒரு corporate job-க்குச் செல்... இப்படி ரிஸ்க் எடுக்காதே” என்ற அறிவுரைகளுக்கு மத்தியில், தனது ஆர்வத்தின் மீது நம்பிக்கை வைத்து தொழில் தொடங்கிய 22 வயது அருண் குமார்!
“Business என்பது விளையாட்டு அல்ல; அதற்கு அனுபவம் தேவை. முதலில் படிப்பில் கவனம் செலுத்தி ஒரு corporate job-க்குச் சென்று, நிம்மதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடு” எனப் பலரும் அறிவுறுத்தியபோதும், தனது கனவை விட்டுக்கொடுக்காமல் கல்லூரிப் பருவத்திலேயே தொழில்முனைவில் இறங்கியிருக்கிறார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது அருண் குமார்.
B.Tech Artificial Intelligence and Data Science படித்துள்ள இவர், தற்போது MUA Tech நிறுவனத்தின் Co-Founder மற்றும் CEO-வாகவும், AJ Cybernetics நிறுவனத்தின் Executive Director-ஆகவும் செயல்பட்டு வருகிறார். பள்ளிப் பருவத்திலேயே Programming, Game Development, Robotics, Artificial Intelligence, Machine Learning எனத் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தவர், அந்த ஆர்வத்தை படிப்போடு நிறுத்தாமல் நடைமுறை அனுபவமாகவும், பின்னர் தொழிலாகவும் மாற்றியிருக்கிறார்.
அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்டது,
தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
“பள்ளியில் படிக்கும்போதே Programming Languages, Game Development, Robotics, AI, ML போன்றவற்றின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. என் பெற்றோருக்கும் technology-யில் ஓரளவு பின்னணி இருந்ததால், சிறு வயதிலேயே இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 11ஆம் வகுப்பு படிக்கும்போதே பல விஷயங்களை நடைமுறையாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு concepts மனப்பாடம் செய்து படிப்பது கொஞ்சம் சிரமம். அதனால் மதிப்பெண்கள் எடுப்பதைவிட, ஒரு concept practical-ஆக செய்து பார்ப்பதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. குறிப்பாக Machine Learning மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டது.

AI எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நாளடைவில், ‘நாமே ஏன் AI-ஐ உருவாக்கக் கூடாது?’ என்ற எண்ணமாக மாறியது. அதனால்தான் என்னுடைய degree-யையும் AI & Data Science துறையில் தேர்வு செய்தேன்.”
இயந்திரக் கற்றல்(Machine Learning) மீதான ஆர்வம், அடுத்தகட்டமாக Large Language Models (LLMs) மீது அவருடைய கவனத்தைத் திருப்பியது. AI-ன் பின்னால் இருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி, பயிற்சி செய்து, நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் தேவையான வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் உருவானது.
கல்லூரி மாணவனாக இருக்கும்போதே தொழில் தொடங்கியது...
“Machine Learning கற்றுக்கொண்ட பிறகு, AI-யின் பின்னால் இருக்கும் Large Language Models (LLMs) மீது ஆர்வம் வந்தது. அவற்றை உருவாக்கி, train செய்து, நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் தேவையான வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதற்காக ஒரு technology company தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படித்தான் 2025ஆம் ஆண்டு MUA Tech-ஐ தொடங்கினேன். அப்போது நான் எந்தவிதமான பெரிய தொழிலதிபரும் இல்லை. மற்ற மாணவர்களைப் போலவே கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரு சாதாரண மாணவன்தான்.”
ஒரு மாணவனாக இருக்கும்போதே நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற முடிவு எளிதானதாக இருக்கவில்லை. குறிப்பாக, ஆரம்பத்தில் அவரைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து பல்வேறு எதிர்மறையான கருத்துகளும் வந்திருக்கின்றன.
“இது சாத்தியமில்லை... If so, it wouldn’t sustain...” என்ற வார்த்தைகளோடு, “Business என்பது விளையாட்டு அல்ல; அதற்கு அனுபவம் தேவை”, “படிப்பில் கவனம் செலுத்தி corporate job-க்குச் செல்”, “இப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்காதே” எனப் பலரும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த வார்த்தைகள் தனது முயற்சியைத் தடுக்கவில்லை என்கிறார் அருண்.
“ஒரு கட்டத்தில் நாமும் யோசிக்க வேண்டியிருக்கும். ஆனால், எனக்கு அந்தத் துறையின் மீது இருந்த ஆர்வமும், அதைச் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் என்னைத் தொடர்ந்து முன்னேற வைத்தது. இந்தப் பயணத்தில் என் பெற்றோரின் ஆதரவு மிகவும் முக்கியமானது. அவர்கள் என்னைத் தடுக்காமல் ஊக்கப்படுத்தினார்கள். நண்பரின் நிதியுதவியுடனும், என்னுடைய சிறிய அளவிலான சேமிப்பையும் வைத்துக்கொண்டு MUA Tech-ஐ தொடங்கினேன்.”

பெரிய முதலீடு இல்லாமலேயே முதல் அடி!
தொழில் தொடங்குவதற்கு மிகப்பெரிய முதலீடு அவசியம் என்ற எண்ணம் பல இளைஞர்களிடம் இருக்கும். ஆனால், தனது ஆரம்பகட்ட அனுபவத்தைப் பகிரும் அருண், அதற்கு மாறுபட்ட ஒரு படத்தை முன்வைக்கிறார்.
“ஆரம்பத்தில் பெரிய அளவிலான முதலீடு எதுவும் இல்லை. என்னிடம் இருந்த சிறிய சேமிப்பு மற்றும் நண்பரின் உதவியுடன் 4 இலட்சம் ரூபாய் முதலீடு செய்தேன்.
ஒரு business தொடங்குவதற்கு எல்லாமே perfect-ஆக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நம்மிடம் இருக்கும் resources-ஐ வைத்து முதலில் தொடங்கி, அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறலாம்.”
அந்தச் சிறிய தொடக்கமே படிப்படியாக வளர்ந்து, இன்று ஒரு குழுவுடன் இயங்கும் நிலைக்கு வந்திருக்கிறது.
மாணவனாகத் தொடங்கிய முயற்சி...
“கல்லூரியில் ஒரு மாணவனாகத் தொடங்கிய முயற்சி தற்போது ஒரு குழுவாக வளர்ந்திருக்கிறது. தற்போது MUA Tech-ல் 12 பேர் பணியாற்றுகின்றனர். மாணவர்கள் தங்களது theoretical knowledge-ஐ practical-ஆக பயன்படுத்திக் கற்றுக்கொள்ள internship வாய்ப்புகளையும் வழங்கி வருகிறோம். தற்போது 3 முக்கிய நிறுவனங்களுக்கும், 8 individual users-க்கும் சேவை வழங்கி வருகிறோம். நிறுவனத்தின் தற்போதைய MRR சுமார் ரூ.1 லட்சம். இது ஒரு முடிவு கிடையாது. இது ஆரம்பித்த பாதையில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது.”
ஒரு மாணவனாகத் தொடங்கிய முயற்சி இன்று வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது அவரது பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக இருக்கிறது. இருப்பினும், இதை இறுதி இலக்காக அவர் பார்க்கவில்லை.
அடுத்த இலக்கு என்ன?
“எதிர்காலத்தில் 50-க்கும் மேற்பட்ட enterprises-க்கு சேவை வழங்க வேண்டும் என்பது ஓர் இலக்கு. அதேபோல் ரூ.2 கோடி ARR என்ற இலக்கையும் வைத்திருக்கிறேன். தற்போதைய workforce-ஐ 10 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதும் திட்டத்தில் இருக்கிறது. ஆனால், இந்த இலக்குகளை அடைவதற்கு முன்பு தொடர்ந்து கற்றுக்கொள்வதும், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதும் முக்கியம் என்று நினைக்கிறேன்.”
தொழில்நுட்பத்தில் வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தன்னையும் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்வதே ஒரு தொழில்முனைவோரின் முக்கியமான பயணம் என்கிற அவரது அணுகுமுறை, இளம் தலைமுறையினர் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

“முயன்று பார்ப்போம்” என்ற முதல் அடி!
அருணின் பயணம், தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறது. தொழில் தொடங்குவதற்கு எல்லாமே தயாராகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. நம்மிடம் இருக்கும் அறிவு, ஆர்வம், வளங்களை வைத்துக்கொண்டு சிறிய அளவில் தொடங்கி, அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம் என்பதே அவரது பயணத்தின் மூலம் வெளிப்படும் எண்ணம். பிறர் கூறும் அறிவுரைகளைக் கேட்காமல் இருப்பது அல்ல; அவற்றை ஆராய்ந்து, நமக்கான பாதையைத் தேர்வு செய்வதே முக்கியம். அருணின் வாழ்க்கையிலும், “முடியாது” என்ற வார்த்தைகளுக்கு நடுவே தனது ஆர்வத்தின் மீது வைத்த நம்பிக்கையே அவரை முதல் அடியை எடுத்து வைக்கச் செய்திருக்கிறது.
ஒரு காலத்தில் “இது முடியாது” என்று கேட்கப்பட்ட ஒரு மாணவனின் முயற்சி, இன்று ஒரு தொழிலாக வளர்ந்திருக்கிறது. கல்லூரிப் பருவத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொரு இளைஞருக்கும் அருணின் பயணம் சொல்லும் செய்தி ஒன்றுதான்—
“முடியுமா?’ என்று யோசித்துக் கொண்டிருப்பதைவிட, ‘முயன்று பார்ப்போம்’ என்று முதல் அடியை எடுத்து வைப்பதே வெற்றிக்கான தொடக்கம்.”

















