செய்திகள் :

களம் : தில்லி அதிரும் போராட்டங்கள் - 'ஜென் ஜி தலைமுறையின் இன்னொரு முகம்' | இரா.சிந்தன்

post image

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `டெல்லி போராட்டம்'

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

கரப்பான் பூச்சிகள் என்ற இகழப்பட்ட ஒரு கூட்டம் இப்போது தலைநகர் தில்லியில் புதியதொரு வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறது.

இகழ்ச்சி என்று சொல்லும்போது, உச்ச நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்தை மட்டும் குறிப்பிடவில்லை. இன்றைய மூத்த தலைமுறையின் பலரிடமும் அவ்வாறான கருத்துகள் இருந்தன. இன்றைய புதிய தலைமுறை இளைஞர்களின் ரசனையை, கேள்விகளை, தேடலை, உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் பெருங் குறைபாடு தொடர்கிறது.

சிலர் ஜென் ஜி தலைமுறை சினிமாவுக்குள் மூழ்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்; பொழுதுகளை வெட்டியாக அவர்கள் கழிக்கிறார்கள் என வருத்தப்படுகிறார்கள். இந்த விமர்சனங்களைத் தனது நையாண்டியால் அவர்கள் கடக்க முயற்சிக்கும்போது, ‘பொறுப்பற்றவர்கள்’ என்ற பார்வையில் மூத்த தலைமுறையும் விலகிச் சென்றுவிடுகிறது.

ஆனால், உதாசீனங்களாகப் பார்க்கப்பட்ட அந்தத் தலைமுறையின் மௌனமும், நையாண்டிகளும் இப்போது எரிமலையைப் போல வெடிக்கத் தொடங்கியுள்ளன. யாராலும் வீழ்த்த முடியாதவர்களாக முன்னிறுத்தப்படும் ஒன்றிய ஆட்சியிடம் நடுக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது.

‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயர் பிரபலமான போது, அது ஒரு நையாண்டி இணையதளமாகத்தான் இருந்தது. அந்த எதிர்வினையோடு உடன்பட்ட மாணவர்களும், இணையதளப் பயன்பாட்டாளர்களும் கொண்டாடி வரவேற்றார்கள். சில நாட்களிலேயே கோடிக்கணக்கானவர்கள் கரப்பான் பூச்சிகளின் பல்வேறு சமூக ஊடகக் கணக்குகளைப் பின்தொடரத் தொடங்கினார்கள்.

கரப்பான் பூச்சியின் 5 முக்கிய பிரகடனங்கள் இந்தியாவின் நீதித்துறை, சட்டம், அரசியல், ஊடகம், நாடாளுமன்ற ஜனநாயகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பேசின. இவற்றில், இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆழ்ந்த கவலை வெளிப்பட்டது.

ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. இதுவரை போராட்டக் களங்களில் மட்டும் எழுப்பப்பட்டு, மைய ஊடகங்களிலும், அரசியலிலும் புறந்தள்ளப்பட்டு வந்த கேள்விகள் நமது அடுத்த தலைமுறை இளைஞர்களின் மனதில் வேறு வடிவங்களில் கவ்விப் பிடித்துள்ளன என்பதுதான்.

அதனால்தான் ஒன்றிய அரசு உடனே கடுமையாக எதிர்வினையாற்றியது. கரப்பான் பூச்சி தளங்கள் முடக்குதலை எதிர்கொண்டன. அவற்றை உருவாக்கிய மாணவரை நோக்கிய மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. ஆனால், கரப்பான் பூச்சிகள் மெல்ல மெல்ல ஒரு இயக்கமாக ஒருங்கிணையத் தொடங்கின. அது சமூக ஊடகத்தில் பார்த்த வேகத்தில் நடக்கவில்லை.

சிந்தன்

தலைநகர் தில்லியில் கடந்த பல ஆண்டுகளாகவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்ட அலைகளைப் பார்த்து வருகிறோம். பல்வேறு அரசியல் மாற்றங்களும், நிர்வாக அதிர்வுகளும் அதனால் நடந்துள்ளன. அவற்றில், மாபெரும் வரலாறு படைத்த மிக முக்கியமான போராட்டமாக விவசாயிகள் போராட்டத்தைச் சொல்லலாம். ஓராண்டு நீடித்த இந்தப் போராட்டம் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது; சமூக ஊடகங்களிலும் கூட அதன் செய்திகள் நசுக்கப்பட்டன; போலீஸ், துணை ராணுவம் என அரசின் அத்தனை கருவிகளையும் கொண்டு அந்தப் போராட்டத்தை முடக்கிச் சாகடித்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அரசு அவசரமாகக் கொண்டுவந்த சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்தது.

இப்போது, கரப்பான் பூச்சிகளின் போராட்டம் புதிய வரலாற்றைச் சுமந்து நிற்கிறது. பாரம்பரியமாகப் போராட்டங்களைக் கட்டமைக்கும் சக்திகள், இந்தக் கரப்பான் பூச்சிகளை முதலில் ஒரு சந்தேகத்தோடு அணுகின. கட்டுரையின் தொடக்கத்திலேயே கவனப்படுத்திய ‘மூத்த தலைமுறையின்’ மனநிலையும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சமூக ஊடகத் தளங்களின் ‘அல்காரிதமும்’ அதற்கு ஒரு காரணம். பல நாடுகளிலும் அரசியல் கலகங்களை உருவாக்கிய இந்த ‘அல்காரிதம்’, குறிப்பிட்ட இலட்சியத்தின் பேரில், அமைப்பாகத் திரள்வதற்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. எனவே, சமூக ஊடக நையாண்டிகள் போராட்டங்களுக்கு வடிகாலா? சிந்திக்கும் திறனுடைய ஒரு தலைமுறையையே அல்காரிதம் சிறைப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. அல்காரிதச் சிறைகளை, களம் உடைக்கும் என்பதை நாம் பார்க்கிறோம்.

இடதுசாரி மாணவர் இயக்கங்கள் கரப்பான் பூச்சிகளோடு முதலில் இணைந்தன. சோனம் வாங்சுக் போன்ற கல்வியாளர்கள், நேகா போரா உண்ணாவிரத உறுதிப்பாடுகள் ஒரு நெருப்புக் கனலாகித் தகித்தன. புதிய தலைமுறை இளைஞர்கள், சமூக ஊடக முடக்கத்தையும், மிரட்டல்களையும் நெகிழ்வாகக் கையாண்டனர். போராட்ட மொழியில் ஒரு Fusion நடந்துகொண்டிருக்கிறது.

போராட்டக் களத்தில் பங்கேற்ற ஒரு போராளி, சாவித்ரி பாய் பூலேவின் படத்தோடு அந்தக் களத்தில் பங்கேற்றார். அந்த இளைஞர்களுக்கு, சாவித்திரியின் வரலாற்றைக் கடத்த முடிந்ததைப் பெருமிதத்துடன் பதிவு செய்கிறார். அத்துடன் அந்தக் களத்தையும் அவர் இவ்வாறு விவரிக்கிறார்: ‘ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் கூடிய கூட்டத்தைப் போன்ற ஒரு கூட்டத்தை நான் இதற்கு முன் பார்த்ததில்லை... நான்கு முதல் ஐந்து லட்சம் பேர் வந்திருந்தார்கள். ஜந்தர் மந்தர் மட்டும் நிரம்பி வழியவில்லை; மத்திய டெல்லியே முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து முடங்கிவிட்டது.

அந்தக் கூட்டத்தின் அமைப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தியது... மாணவர்கள், தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள், பெற்றோர்கள், முதியோர்கள். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள். பெண்கள், ஆண்கள், திருநங்கைகள் எல்லோரும் இருந்தார்கள். எதிர்ப்புக் குரல்கள் வெளிப்பட்டன, ஆனால் போராட்டமே ஒரு கொண்டாட்டமாக இருந்தது.

இதுவரை போராட்டங்களுக்கே சென்றிராத இளைஞர்களை ஏராளம் பார்க்க முடிந்தது. ஜனநாயகம் தமக்கு அளித்துள்ள எதிர்க் குரலுக்கான உரிமையை அவர்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்தினார்கள். முன்பின் தெரியாதவர்களோடு பேசினார்கள். முழக்கமிட்டார்கள். பாட்டுப்பாடினார்கள். ஜனநாயகம் அந்தத் தெருக்களில் நடனமாடியது.’

cjp protest in delhi
cjp protest in delhi

அங்கே உரத்து முழங்கப்பட்ட முழக்கங்களையும் நாம் பேச வேண்டும். ‘ஜெய்பீம்’ என்று ஒரு பக்கம் முழக்கம் எழுந்தால், மற்றொரு பக்கம் ‘பெண் சக்தி ஓங்கட்டும்’ என்று கேட்டது. ‘இந்து – முஸ்லீம் அரசியல் எடுபடாது’ என்ற முழக்கம் மையமாக இருந்தது. ஒரு மாணவர் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் போராட்ட உரையை வெளியிட்டிருந்தார். தமது அன்றாட வாழ்க்கையில் சாதியப் பாகுபாட்டை எதிர்கொள்வதைப் பற்றியும், தனது ஊரில் கோயிலில் நிலவும் தீண்டாமையால் தான் வெளியேற்றப்பட்டதையும் அங்கே தனது அனுபவமாகப் பேசினார்.

இன்னொரு மாணவி தன்னுடைய அப்பாவுடன் நடந்த உரையாடலைப் பதிவு செய்தார்: ‘ஏன் போராட்டத்திற்குப் போகிறாய்?’ என்று என் அப்பா கேட்டார். ‘மோடி ஜி நமக்காகச் செய்துள்ள நன்மைகளுக்காக நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்’ என்றும் கூறினார். நான் அவரிடம் கேட்டேன்: “வேலைகள் இல்லை, தேர்வில் முறைகேடுகள் நடக்கின்றன. நம்முடைய வரிப்பணத்தில் இருந்து நமக்காகச் செய்யப்படும் செலவுகளுக்காக நாம் நன்றியோடு இருக்க முடியுமா? நிர்வாகம் எப்படி நடக்கிறது? ஊழல் முறைகேடுகள் ஏன் தொடர்கின்றன?” என்று பதிவு செய்கிறார்.

டேஜாவூ நாட்கள்

இணைய வழியில் உருவான ஒற்றுமை, நீட் முறைகேடுகள் என்ற பிரச்சனையில் ஒரு போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. வகுப்பறைகளில் பாடப்புத்தகங்களுடன் போராடியவர்கள், போராட்டக் களத்தைப் பாடப்புத்தகமாக மாற்றிப் படிப்பதுடன், அவர்களே எழுதவும் தொடங்கிவிட்டார்கள்.

இந்திய ஜனநாயகத்தைச் சீரழிக்கும் அத்தனை போக்குகளின் மீதும் இளம் தலைமுறை தனது தீவிரமான எதிர்ப்பைப் பேசிக் கற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு இந்த அனுபவம் ஏற்கனவே உண்டு. ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது, அது காளை மாடுகளைப் பற்றியதாகப் பலரும் ஊடகங்களில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், போராட்டக் களத்தில் அமர்ந்திருந்த நாங்கள், மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள், காவிரி உரிமை, தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டுச் சுதந்திரம், ஒற்றை இந்தியாவைத் திணிக்கும் முயற்சிகளுக்கு எதிரான ஜனநாயக உரையாடல்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.

கடைசியில் அந்தப் போராட்டம் வெற்றியில் முடிந்தாலும், பெரும்போலீஸ் வன்முறையை அந்த இளைஞர்களுக்குப் பரிசாகக் கொடுத்தது அரசும், அதிகாரமும்.

cjp protest in delhi
cjp protest

இதை தில்லியின் போலீசாருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? விவசாயிகள் போராட்டத்தில் அவர்கள் சாலைகளில் தடுப்பு அமைத்தார்கள். சாமானியர்கள் டிராக்டர்களில் அமர்ந்தபடி அந்தத் தடுப்புகளை முறியடித்தார்கள். இந்த முறையும் கொடும் வன்முறைத் தாண்டவம் ஏவப்பட்டது. ஆனால், இளைஞர்கள் தங்கள் செல்போன்களின் மூலம், அதிகாரத்தின் உண்மையான மொழியை உலகத்திற்கு அம்பலப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

இப்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் இந்தப் போராட்டம் விரிவடைகிறது. அங்கெல்லாம் போலீசும், துணை ராணுவமும் குவிக்கப்படுகிறார்கள். இளம் கன்றுகளின் கண்களில் பயம் ஒரு துளியும் இல்லை. உதடுகளில் புன்னகை தெறிக்கிறது. போலீசாரின் வன்முறைக்கு எதிராக எள்ளல் ததும்பும் நகைச்சுவைகள் வீசப்படுகின்றன. இந்தியாவின் இளம் தலைமுறை தனது ஜனநாயகத்தை ‘அப்டேட் செய்ய’ தயாராகிக் கொண்டிருப்பது தெரிகிறது.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரத்தில், கல்வியியல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்துத் தரப்பாரின் வேண்டுகோளை ஏற்று முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். மாணவர் இயக்கப் பெண் தலைவர்கள் நேகா போராவும், அய்ஷி கோஷும் உண்ணாவிரதக் களத்தில் உறுதி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர்களோடு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஒன்றிய அரசு இறங்கி வந்திருக்கிறது.

இனி வரும் நாட்களில் கரப்பான் பூச்சிகள் ஒரு கட்சியாக வலிமையடையலாம். கல்விக்கான போராட்டம், வேலைக்காகவும், ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகவும் விரிவடையலாம். பொய்களை விற்கும் பெரும் ஊடகங்களுக்கு எதிராகவும், மலிந்து போய்விட்ட பெருநிறுவன ஊழல்களுக்கு எதிராகவும் கோபம் கனன்றுகொண்டுதான் இருக்கிறது.

பாசிசத் தன்மைகொண்ட பிரிவினை முழக்கங்கள் சாமானியர்களை அச்சுறுத்துகின்றன. பருவமழை பொய்த்துப் போவதும், காற்றும் சூழலும் நஞ்சாவதும் அடுத்த தலைமுறையின் பூமியையே அழித்தொழிக்கும் அபாயத்தை நிகழ்த்திக் கொண்டுள்ளன.

சவாலான எதிர்காலத்திற்கு எழுதப்பட்ட நம்பிக்கையளிக்கும் உயிலைப் போல இந்த நாட்கள் அமைந்துள்ளன. ‘எங்களுக்கு எதிரிகளே இல்லை’ என்று கொக்கரிக்கும் அதிகாரத்தின் முன் நின்றபடி, ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்று பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறது ‘ஜென் ஜி’ தலைமுறை.

கோவை: `நீட் எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்த தமிழ்நாடு; ரத்து செய்யப்படும்வரை...'- இளைஞர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் காக்ரோச் ஜனதா கட்சியினரும் நீட் எதிர்ப்பாளர்களும் மூன... மேலும் பார்க்க

தூத்துக்குடி இளைஞர் லாக்கப் மரணம்: "பதவி மமதை கண்ணை மறைக்கிறதா முதல்வரே?" - சீமான் கண்டனம்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜூலை 23) உய... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: ``இளைஞர்களை நேரடியாக அவமதிக்கும் செயல்" - பாஜக அரசுக்கு CJP கடும் கண்டனம்!

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, ``நீட் குளறுபடிகள் ... மேலும் பார்க்க

CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' - ஜே.பி.நட்டா

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும். இன்று மதியம் காக்ர... மேலும் பார்க்க

வகுப்புகள் புறக்கணிப்பு; ஜந்தர் மந்தர் பாணி திரள்! - சென்னையில் வேகமெடுக்கும் காக்ரோச் போராட்டம்?

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான மாணவர்கள் போரட்டம், தமிழகத்திலும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு, தொ... மேலும் பார்க்க

`மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி'- ஆசிரியராக மாறிய ஓய்வுபெற்ற IPS

பொதுவாக அரசு அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் முன்னாள் டி.ஜி.பி சீமா அகர்வால் ஐ.பி.எஸ், ஓய்வ... மேலும் பார்க்க