சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?
காங்கிரஸ்: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை; டெல்லிக்குச் செல்லும் செல்வப்பெருந்தகை!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கிவிட்டன.

இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்று உறுதியளித்து வருகிறார். இந்நிலையில் தான் செல்வப்பெருந்தகை நாளை(ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.













