சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?
நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! | பகுதி 01
இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன், தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்!
தமிழகத் தேர்தல் வரலாறு வெறும் ஆவணங்கள், வாக்கு எண்ணிக்கை, அரசு அறிவிக்கைகள் போன்றவற்றில் மட்டுமே பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கிகளின் கிரீச் சத்தத்தில், தூசி நிறைந்த திறந்த மைதானங்களில், தூக்கமின்றிக் காத்திருந்த கூட்டங்களின் இரவுகளில், தலைவர்களுக்கும் அவர்களைக் காண காத்திருந்த மக்களுக்கும் இடையே நிலவிய உணர்ச்சிகரமான பிணைப்புகளின் நினைவுகளாலும் நிரம்பியவை.
தரவு பகுப்பாய்வு, லைவ் ஸ்ட்ரீம், தேர்ந்தெடுக்கப்பட்ட சவுண்ட் பைட்ஸ், ஹேஷ்டேக், எல்இடி திரைகள் இவையெல்லாம் வருவதற்கு முன்பு, தமிழகத் தேர்தல்களும் அதன் பிரசாரங்களும் எப்படி இருந்தன..? அந்த கருப்பு வெள்ளை காலத்திய தேர்தல் திருவிழா காட்சிகள் தெரியுமா...

தமிழக தேர்தல் களத்தில் மைக்குகளும் ஒலிபெருக்கிகளும் வெறும் கருவிகளாக மட்டும் இருந்ததில்லை, அவை அரசியல் கட்சிகளின் ஆயுதங்களாகவும், மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையேயான பாலங்களாகவும் திகழ்ந்தன.
பிரசார மைதானங்கள் வெறும் அரசியல் மேடைகளாக மட்டுமல்லாது, கலாச்சாரக் கூடல்களாகவும் திகழ்ந்தன. தலைவர்கள் வருவதற்கு முன்னர், கட்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. தொண்டர்கள், கட்சியின் கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் அச்சுப் பிரதிகளை விநியோகித்தனர்.
இன்னொருபுறம் மைதானங்களில் திடீரென முளைத்த கடைகளில் வியாபாரிகள் தின்பண்டங்களை விற்றனர். பலூன் விற்பவர்கள் கூட்டத்துக்குள் நடமாடினர். குழந்தைகள் இந்தக் கூட்டங்களைப் பண்டிகை போல கொண்டாடினர். இத்தகைய மைதானங்கள் தற்காலிக பொது சதுக்கங்களாக மாறின. அங்கு அரசியல் அன்றாட வாழ்க்கையோடு கலந்து, சமூக எல்லைகள் மங்கி, அனைவருக்கும் அரசியல் அணுகக்கூடியதாக உணரப்பட்டது.
அரசியல் தலைவர்கள், தங்களது கருத்துகளை எப்படிச் சொல்கிறார்கள், எந்த பாணியில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே அவர்கள் மதிப்பிடப்பட்டனர். 1950-களிலிருந்து 90-கள் வரை, தேர்தல் பிரசாரங்கள் என்பது மைதானங்கள், பள்ளி மைதானங்கள், பரந்துவிரிந்த வீதிகள், வெறிச்சோடிய நிலங்கள் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பொது கூட்டங்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மூங்கில் கம்பங்களில் கட்டப்பட்ட லவுட் ஸ்பீக்கர்கள் அடிக்கடி கிரீச் சத்தம் எழுப்பி, பின்னர் தாளம் பிடித்தன. தலைவர் பேசத் தொடங்கிவிட்டால், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோரும் அப்படியே அமைதியாகி விடுவார்கள்.
காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மைக் அரசியலைத் திறம்படக் கையாண்டனர். அவர்களின் குரல்கள் மேடையைத் தாண்டி வீடுகள், தேநீர்க் கடைகள், பேருந்து நிலையங்கள் வரை பரவி, இன்றும் நினைவலைகளில் நீந்திக்கொண்டிருக்கின்றன.
தமிழகத் தேர்தல் வரலாற்றில் மிகவும் துடிப்பான அத்தியாயங்கள் என்றால், அது மேடைக்கு முன்னர் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்த நிகழ்வுகள்தான். தலைவர் வருவதற்கு பல மணி நேரம் முன்னரே மைதானத்தில் வந்து மக்கள் குவிந்திருந்தனர். பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆண்கள், தங்களது குழந்தைகளை, தங்களது தோள்களில் அமரவைத்துத் தூக்கிக்கொண்டு வந்ததெல்லாம் உண்டு.
இன்று 70 அல்லது 80 வயதில் இருக்கும் ஆண்களிடம் கேட்டால், அவர்களிடம் அது குறித்து சொல்வதற்கு ஏராளமான கதைகள் உண்டு. தலைவர்கள் வரத்தாமதமானால், தரையில் துண்டை விரித்துப் படுத்துவிடுவார்கள். அந்தக் காத்திருப்பு வெறும் பொறுமை மட்டுமல்ல – அது தேர்தலின் உண்மையான உயிர்நாடியாக இருந்தது.
அறிவிக்கப்பட்ட சரியான நேரத்துக்கு தலைவர்கள் வருவது என்பது அரிதாகவே இருக்கும். ஆனாலும், மக்கள் யாரும் கலைந்து போனதில்லை. ஏனெனில் ஒரு பிரசாரக் கூட்டம் வெறும் அரசியல் சார்ந்த நிகழ்வாக மட்டுமல்லாது, பொழுதுபோக்கு, கல்வி, விடுதலை உணர்ச்சி என எல்லாம் ஒன்றுசேர்ந்த ஒரு நிகழ்வாக இருந்தது. பல கிராமங்களைப் பொறுத்தவரை, தேர்தல் கூட்டங்கள்தான், தங்களது மனம் கவர்ந்த தேசிய அல்லது மாநிலத் தலைவர்களை நேரில் காணும் ஒரே வாய்ப்பு. அந்த எதிர்பார்ப்புதான் தூசி நிறைந்த மைதானங்களை நம்பிக்கை நிறைந்த இடங்களாக மாற்றியது.

தமிழக அரசியலில், தேர்தல் மேடை பேச்சுகளின் பொற்காலம் என்றால், அது 1949 செப்டம்பர் 17-ஆம் நாள், சென்னை ராபின்சன் பூங்காவில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கியதற்குப் பிந்தைய ஆண்டுகள்தான். 1967 முதல் தேர்தல்களில், தலைவர்களின் பேச்சைக் கேட்க மக்கள் வண்டி கட்டி, குடும்பத்தோடு கிளம்பி வந்த காட்சி வழக்கமாக இருந்தது. பிரசாரத்துக்கு நேரம் தடையாக இருந்ததில்லை. பகலும் இரவும் பாராமல் தலைவர்கள் சுற்றி வந்தனர். அவர்களின் வருகையை எதிர்பார்த்து, மாடி வீட்டில் வசிப்பவர்கள் கூட சாலையோரம் படுத்து உறங்கினர். கிட்டத்தட்ட 1990-களின் இறுதிவரை அது நீடித்தது.
காமராஜர், அவரது காலத்திய அரசியல்வாதிகளைப் போல் வளவளவென்று பேசுவது கிடையாது. நீண்ட வாக்கியங்களாகவும் பேசுவது இல்லை. எளிய தமிழில், குறைவான வார்த்தைகளில் பேசினார். ஆனால், அவை அளவிட முடியாத நம்பகத்தன்மையைக் கொண்டிருந்தன. அவரது கூட்டங்களில் மக்கள் நாடகத்தை எதிர்பார்க்கவில்லை. நேர்மையை எதிர்பார்த்தனர்.

அது அரசியல் பொதுக்கூட்ட மேடையோ, அடிக்கல் நாட்டு விழாவோ... தொழிற்சாலை திறப்பு விழாவோ... எதுவாக இருந்தாலும் சரி, நீண்ட சொற்பொழிவுகள் ஆற்றி அவர் நேரத்தை வீணாக்கியதில்லை. தேவையான அளவுக்கு பேசி , சொல்ல வேண்டிய கருத்துகளை மக்கள் மனதில் தைக்கும் அளவுக்கு உணர்த்தி விட்டுச் சென்றுவிடுவார்.
காமராஜின் பலம் மக்கள் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையில் இருந்தது. பள்ளிகள், உணவு, வளர்ச்சி பற்றி அவர் பேசியபோது கேட்பவர்கள் அதனை நம்பினர். ஏனெனில், அவர்கள் ஏற்கனவே அதன் பலன்களைப் பார்த்திருந்தனர்.வலிமையான பேச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், காமராஜ் அமைதியான பேச்சுக்கும் மக்களிடையே இடம் உண்டு என்பதை நிரூபித்தார்.
அண்ணாவின் தேர்தல் கூட்டங்கள் வெறும் இரைச்சலுக்காகவோ ஆரவாரத்துக்காகவோ நினைவுகூரப்படவில்லை. மக்களை, குறிப்பாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்திய, அவர்களுக்கு அரசியலைப் பயிற்றுவித்த சிந்தனைக்காகவே நினைவுகூரப்படுகின்றன.
தர்க்கம், நகைச்சுவை, இலக்கியக் குறிப்புகள் கலந்தவையாக இருந்தன அண்ணாவின் பேச்சுகள். மெதுவான குரலில், வார்த்தைகளுக்கு இடையே திட்டமிட்ட இடைவெளி விட்டு, தாம் பேசிய கருத்துகள் கூட்டத்தில் ஆழமாக ஊடுருவ அனுமதித்தார். அதனை மக்கள் மிக கவனமாக கேட்டனர். அந்தப் பேச்சுகளுக்கு தலையசைத்தனர். தாமதமாக வந்தவர்களுக்கு மற்றவர்கள் மெல்ல விளக்கினர்.

மைக்கில் பேசிய அண்ணாவின் குரல் இரைச்சலாக இல்லாமல், மக்களின் மனதை வெல்வதாக இருந்தது. பல ஊர்களில் அவரது பேச்சுகள் அடுத்த நாள் காலை தேநீர்க் கடைகளில், பத்திரிகைகளில் இடம்பெற்ற கட்டுரைகள் போல விவாதிக்கப்பட்டன. “நேத்து அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?” என்கிற கேள்வி சகஜமாக ஒலிக்கும். அவரது காலத்தில் அரசியல் அறிவுசார் உணர்வு கொண்டதாகத் தோன்றியது.
தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு அண்ணா வருவது தாமதமாகிவிட்டது. இரவு 10 மணியைத்தாண்டியும், மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், ஒரு வழியாக வந்து சேர்ந்தார் அண்ணா. மைக்கைப் பிடித்த அவர், "மாதமோ சித்திரை ... நேரமோ பத்தரை ... உங்கள் கண்களிலோ நித்திரை... உதயசூரியன் சின்னத்தில் குத்துங்கள் முத்திரை" என எதுகை மோனையுடன் பேச, கூட்டம் மொத்தமும் ஆர்ப்பரித்தது. அந்த அளவுக்கு அண்ணாவின் மேடைப்பேச்சு அப்போது மக்களைக் கட்டிப்போட்டிருந்தது.
அதேபோன்றுதான் கருணாநிதி. ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என கரகரத்த குரலில் கருணாநிதி தனது பேசத்தொடங்கியதுமே, திமுக தொண்டர்களின் கைத்தட்டலும் விசில் சத்தமும் விண்ணைப் பிளக்கும்.
கருணாநிதி மைக்கைப் பிடித்ததும் மைதானம் நாடக அரங்காக மாறிவிடும். அவரது பேச்சுகள் திரைக்கதை போல அமைந்திருக்கும் . தமிழ் இலக்கியம், வரலாறு, சமகால வாழ்க்கை ஆகியவற்றிலிருந்து தனது பேச்சுகளை எடுத்தாண்டார். அரசியல் ரீதியாக அவருடன் கருத்துமாறுபட்டவர்கள்கூட அவரது பேச்சைக் கேட்கக் காத்திருந்தனர். அவ்வளவு ஏன்... எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களே, கருணாநிதி பேசும் மேடை அருகே காரில் மறைவாக காத்திருந்து, அவரது பேச்சை ரசித்துச் செல்வார்களாம். அந்த அளவுக்கு அவர் பேசும் வார்த்தைகளில் தாளமும் ஆழமும் இருந்தன.

பேச்சின் ஊடே அவர் உதிர்க்கும் தனித்துவமான வாக்கியங்களும், அழகான உவமைகளும் மக்களின் கைத்தட்டலை அள்ளித்தரும். கருணாநிதியின் தேர்தல் கூட்டங்கள் பெரும்பாலும் நள்ளிரவு வரை நீண்டுகொண்டே போகும். ஆயினும் மக்கள் கலைந்து போனதில்லை. அந்த அளவுக்கு அவரது பேச்சில் மக்கள் மயங்கினர். அதே சமயம், அவரது பேச்சுகள் அறிவுரீதியான தர்க்கத்தைக் கிளப்பவும் தவறியதில்லை. மக்களுக்கும் கட்சித் தொண்டர்களைப் பொறுத்தவரை கருணாநிதியின் பேச்சைக் கேட்பது என்பது ஒரு இலக்கியக் கச்சேரியைப் போலத்தான் இருந்தது.
எம்.ஜி.ஆருக்கும் அதேதான். கருணாநிதி தனது பேச்சுகளை கவிதையாக்கினாரென்றால், எம்.ஜி. ராமச்சந்திரன் கூட்டங்களை உணர்ச்சிப் பெருக்கான காட்சியாக மாற்றினார். எம்.ஜி.ஆரின் குரல் இலேசாக மென்மையாக இருந்தாலும், ‘என் ரத்தத்தின் ரத்தங்களே' என்று மைக்கைப் பிடித்து உரத்துச் சொன்னதும், கரகோஷம் காதை கிழிக்கும். அவரிடமிருந்து வரும் அந்த ஒற்றை வார்த்தைக்காகவும், அவரது முகத்தை தரிசப்பதற்காகவும் மக்கள் கூட்டம் விடிய விடிய காத்திருக்கும்.

திறந்த ஜீப்பிலிருந்து அவர் தோன்றிய தருணமே மைதானம் ஆர்ப்பரிக்கும். வாழ்த்து முழக்கங்கள் ஒலி பெருக்கியின் குரலையே அமுக்கிவிடும். கைத்தட்டல்கள் காதைக் கிழிக்கும். கைகளை ஆட்டியும் நீட்டியும் ஒரு மீட்பரை வரவேற்பது போல எம்.ஜி.ஆரை வரவேற்றார்கள் மக்கள். அவரை நெருங்க முண்டியடிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் ரொம்பவே திணறிப்போய்விடுவார்கள்.எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை அவருக்கு நீண்ட பேச்சுகள் தேவையில்லை. அவரது முகம் ஒன்றே போதுமானது.அவரது ரசிகர்களும் கட்சியினரும் மக்களும் மதிமயங்கிப் போய்விடுவர்.
ஜெயலலிதாவின் ‘அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்கிற அவரது குரல், இப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் அதிமுகவினரால் பகிரப்படுகின்றன. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் தமிழகம் வரும்போது, அவர்களின் பேச்சு முழுமையாகப் புரியாவிட்டாலும், அவர்களின் உருவத்தையும் நிறத்தையும் காண மக்கள் கூட்டம் அலைமோதும்.

தேர்தலை திருவிழாவாக்கிய திரை நட்சத்திரங்கள்
தலைவர்கள் ஒருபுறம் தேர்தல் மேடைகளைத் தங்களது அனல் பறக்கும் பேச்சுகளால் தெறிக்கவிட்டார்களென்றால், இன்னொருபுறம், திரை நட்சத்திரங்களும் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு, தேர்தலை திருவிழாவாக மாற்றினர். சினிமா நட்சத்திரங்கள் மேடையில் தோன்றியதும், இளைஞர்களின் மனதில் உலகத்தையே வென்ற மகிழ்ச்சி பொங்கியது. அவர்களைப் பொறுத்தவரை அவர்களைப் பார்த்ததே போதுமானது.
அண்ணா திமுகவைத் தொடங்கிய பிறகு, அக்கட்சிக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்ற திரை நட்சத்திரங்கள் மேற்கொண்ட பிரசாரம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவாஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், 1980-களில் அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா மேற்கொண்ட பிரசாரம், அந்த சினிமா கவர்ச்சியை எதிர்கொள்ள திமுக தரப்பில் டி.ராஜேந்தர் களமிறங்கிய நிலையில், அவருக்குப் போட்டியாக அதிமுகவை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட கே.பாக்யராஜ், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நடிகர்கள் ராதாரவி, எஸ்.எஸ். சந்திரன், பின்னர் அவர்களே அதிமுகவுக்குத் தாவிய நிலையில், அவர்களுடன் கைகோத்த ராமராஜன் போன்ற திரை நட்சத்திரங்களால் தேர்தல் களம் வண்ணமயமாக காட்சி அளித்தது.
இன்று தொழில்நுட்பம் அரசியலின் வீச்சை விரிவாக்கியுள்ளது; ஆனால், அந்தப் பழைய மைதானங்களில் அமைக்கப்பட்ட உணர்ச்சிகரமான மேடைகளும் நடத்தப்பட்ட கூட்டங்களும் தமிழக அரசியலின் மறக்க முடியாத அடையாளங்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றன.!
(தொடரும்.!)













