Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் ...
காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!
காங்கிரஸ் Vs தி.மு.க
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே வார்த்தை மோதல் தீவிரமானது.
தி.மு.க மாணவரணி ராஜீவ் காந்தி, "கல்விக்கண் திறந்த காமராஜர் சொந்த காசில் பள்ளிக்கூடங்களைத் திறக்கவில்லை" என்றார்.
துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, "முன்னாள் முதல்வர் காமராஜருக்கு ஏசி இல்லாமல் தூக்கம் வராது" என்றார்.
இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க சர்ச்சையானது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இருவர் தி.மு.க-வில் இணைக்கப்பட்டது பிரச்னையைத் தீவிரமாக்கியது.
இதையடுத்து விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் சிலர், 'த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம்' எனக் காங்கிரஸின் டெல்லி தலைமையிடம் கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியானது.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்' எனப் பேட்டி கொடுத்துப் பரபரப்பை எகிற வைத்தனர்.
இப்படியான சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து 20.11.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "கடந்த இரண்டு மாதங்களாக சில சலசலப்புகள் நிலவின. கூட்டணியின் எதிர்காலம் என்ன, அது எந்தத் திசையில் செல்லும்? இந்த ஊகத்தைப் பயன்படுத்தி பலரும் ஆதாயம் தேட முயன்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகும்" எனத் தெரிவித்தார்.
ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிறகு 22.11.2025 அன்று ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.
இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு!
இவ்வாறு சிதம்பரம் தெரிவித்த பல மணி நேரம் கடந்த பிறகு குழுவை அறிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. அதில், ''2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் குழுவை மாணிக்கம் தாகூர் தரப்பு ஏற்கவில்லை. 'செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக அறிவித்துவிட்டார்' என, அவர்கள் குற்றம்ச்சாட்டி வந்தனர். இந்தச் சூழலில்தான் ஐவர் குழு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறது.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், "இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சந்திப்பே மிகப் பெரிய முன்னுதாரணம்.
நான்கைந்து தேர்தல்களாக வெற்றிகரமான கூட்டணியாக இருக்கிறோம். எங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்" என்றார். ஆனால் இந்தச் சந்திப்பு சத்தியமூர்த்தி பவனில் அடுத்த சர்ச்சை பட்டாசுக்கான திரியைக் கொளுத்தியிருக்கிறது.

இதன் பின்னணி குறித்து பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், "தமிழ்நாடு காங்கிரஸில் தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனச் செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு குழுவும், த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாமென மாணிக்கம் தாகூர் தலைமையில் ஒரு தரப்பும் வேலை செய்கிறது.
இதில் மாணிக்கம் தாகூர் தரப்பு பிரியங்கா காந்தியுடன் விஜய்யைச் சந்திக்க வைக்க முயற்சி செய்தது. த.வெ.க-வுடன் கைகோர்த்தால் தமிழகத்தில் கணிசமான எம்.எல்.ஏ இடங்களைக் கைப்பற்ற முடியும். புதுவை, கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கலாமெனச் சொல்லிவந்தனர்.
விஜய்யா, தி.மு.கவா.. பரபர பவன்!
ஆனால் தி.மு.க-வுடன் இருந்தால்தான் 40 எம்.பிக்கள் கிடைக்கும். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வை வலுவாக எதிர்க்க முடியும் என்பதால் ராகுல் 'ஓ.கே' சொல்லவில்லை.
இந்தச்சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் அடியாக அமைந்தது. இதற்கிடையில் த.வெ.க-வுடன் கூட்டணி வைப்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்குத் துளியும் விருப்பம் இல்லை. எனவே அவர் செல்வப்பெருந்தகை தரப்புக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.
இதை அவரது ட்விட்டர் பதிவில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். அந்தப் பதிவில், 'தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த ஐவர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், 'கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருவரி்ன் அறிவிப்பிலும் முரண் இருக்கிறது.
கூடவே தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு என எப்படி முன்கூட்டியே அறிவிக்க முடியும். அதேநேரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால்தான் அறிவிக்க வேண்டும். ஆனால் சிதம்பரம் ஆதரவு இருப்பதால்தான் செல்வப்பெருந்தகை தரப்பு குழு அறிவித்ததை அவர்கள் கண்டிக்காமல் இருக்கிறார்கள்.
குறைந்த தொகுதிகளுடன் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதற்கு சிதம்பரம் ஒரு முக்கிய காரணம். முன்னதாக 2011 தேர்தலில் 63 தொகுதிகளும், 2016ல் 41 தொகுதிகளையும் தி.மு.க, காங்கிரஸுக்கு ஒதுக்கியது. ஆனால் 2021 தேர்தலில் 25 தொகுதிகளைத்தான் தருவோம் எனத் தி.மு.க சொன்னபோது அகில இந்திய தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்போது அந்த விஷயத்தில் தலையிட்ட சிதம்பரம், 'நமது நிலைமை மோசமாக இருக்கிறது. 2021 தேர்தலில் தி.மு.க கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டால்தான் பிறகு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 எம்.பி-க்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவைப் பலமாக எதிர்க்க முடியும்' என, மன்மோகன் சிங் மூலமாகச் சோனியா காந்தியிடம் தெரிவித்து சம்மதம் பெற்றார்.
'இது சிதம்பரத்தின் விளையாட்டு; கொதிக்கும் கதர்கள்!'
அதனால்தான் அப்போது காங்கிரஸுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது. அதே வேலையைத்தான் இப்போதும் செய்கிறார். தி.மு.க-வுடன் இருந்தால்தான் அவர் மகன் கார்த்தி வெற்றிபெற முடியும். எனவேதான் இப்படியெல்லாம் செய்கிறார். ஆனால் அகில இந்திய தலைமையில் அவருக்கான முக்கியத்துவம் தற்போது குறைந்துவிட்டது.
இருந்தாலும் தனது விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி வருகிறார். மூத்த தலைவர் என்பதால் அகில இந்திய தலைமை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. மறுபக்கம் காங்கிரஸ் குழுவில் இருக்கும் பஞ்சாயத்துக்கள் அனைத்தும் தி.மு.க-வுக்கும் தெரியும்.
செல்வப்பெருந்தகை தரப்பு குழு அமைத்தது முதலே பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டு வந்தது. சந்திப்பு நடத்துவதன் மூலமாக த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்குச் செல்லும் என்கிற சர்ச்சைக்கு முடிவு கட்டலாமெனச் சொல்லி வந்தனர்.
ஆனால் தி.மு.க முதலில் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கவில்லை. பிறகுதான் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி தலைவர் அறிவாலயத்தில் கண்டிப்பாக இருப்பார். அப்போது சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் எனச் செல்வப்பெருந்தகை தரப்பு கோரிக்கை வைத்தது.
இதையடுத்துதான் அறிவாலயத்துக்கு வரும்படி தெரிவித்தார்கள். இதையடுத்து 2ம் தேதி இரவு டெல்லியிலிருந்து கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு சென்னைக்குப் புறப்பட்டது. மறுநாள் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திவிட்டு, மதியம் அறிவாலயம் சென்றனர்.
அங்கு அவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது காங்கிரஸ் தரப்பில் சென்றவர்கள், 'வரும் தேர்தலில் 40 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது' எனச் சொல்லியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் கவனமாகக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள்' எனத் தெரிவித்து அனுப்பி வைத்திருக்கிறார்" என்றனர் விரிவாக.
இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
பிறகு கேள்விகளை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைத்தோம். அதற்கு அவர், "அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் வெளியிட்டது" எனச் சுருக்கமாக நமக்கு பதில் அனுப்பி வைத்தார்.
ஒருவேளை கட்டுரை வெளியான பிறகு அவர் தனது கூடுதல் கருத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் அது உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்!
















