50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்
Dopamine toxicity: செயற்கையான மகிழ்ச்சியோட இருந்தீங்கன்னா என்னப் பிரச்னை வரும் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு உறங்கும் வரை அனைவரும் செல்போனும் கையுமாகவே வாழ்கிறோம். இதனால் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் விளைவுகளையும், அதிலிருந்து வெளிவரும் வழிமுறைகளையும் சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா.

காலையில் எழுந்தவுடன் படுக்கையில் இருந்து கால்களை கீழே வைப்பதற்குள், நம் அனைவருடைய கைகளும் முதலில் செல்போனைத்தான் தேடும். இப்படி செல்போனை பார்க்கும்போது மூளையில் ’டோபமைன்’ என்ற ஹார்மோன் உற்பத்தியாகும். இது ஒரு மகிழ்ச்சி தரும் ஹார்மோன். ’ஒரு நிமிடம்’ என்று போனை பார்க்க ஆரம்பித்தால், நம்மை மறந்து மணிக்கணக்கில் அதிலேயே மூழ்கி இருக்க, செல்போன் பார்க்க ஆரம்பிக்கையில் உற்பத்தியாக ஆரம்பிக்கிற இந்த டோபமைன்தான் முக்கிய காரணம்.
உண்மையில், டோபமைன் நல்ல ஹார்மோன் தான். நம்மை மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். அந்தக் காலத்தில் கஷ்டப்பட்டு படித்து மதிப்பெண் பெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பாராட்டுப் பெறுவது போன்றவற்றை ஒரு பரிசாகப் பார்த்தது நமது மூளை.
ஆனால், இப்போது இருக்கும் தொழில்நுட்பம் ஒரு ரீல்ஸ் மூலமே இந்த டோபமைன் உற்பத்தியைத் தூண்டி விட்டு விடுகிறது. நாம் மணிக்கணக்கில் ரீல்ஸ் பார்க்க, மகிழ்ச்சி தரும் டோபமைன் ஹார்மோனும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்க, நாளடைவில் இதுவே ‘டோபமைன் நச்சுத்தன்மை’யை ஏற்படுத்தி விடும். விளைவு, தேவைப்படும்போது டோபமைன் பற்றாக்குறையாகிவிடும்.

நாளடைவில் நம் மூளைக்கு உண்மையான சந்தோஷம் என்னவென்றே தெரியாமல் போகலாம். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அதிலிருந்து கவனம் மாறி வேறொரு வேலையை செய்வது; சின்ன வேலையைக்கூட சரியாக கவனம் செலுத்தி செய்ய முடியாமல் மூளை தடுமாறுவது போன்ற அறிகுறிகள் மன அழுத்தத்தை உருவாக்க ஆரம்பிக்கும்.
அதாவது, ரீல்ஸ் பார்த்துப் பார்த்து இப்போது எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு பின்னாட்களில் மன அழுத்தத்தில் தள்ளப்படுவோம்.
* காலையில் எழுந்ததும் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு, புத்தகம் அல்லது நியூஸ் பேப்பர் வாசிக்கலாம். நடைப்பயிற்சி செய்வது, சமையல் செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவற்றை செய்யலாம்.
* மற்ற நேரங்களில் ஓய்வுக்கிடைத்தால், நண்பர்களுடன் நேரம் செலவு செய்வது, சந்தோஷமான நிகழ்வுகளை நினைவுபடுத்துவது போன்றவற்றை செய்யலாம்.
டோபமைன் நச்சுத்தன்மையைக் குறைக்கும் மூச்சுப்பயிற்சிகள் பற்றிய வீடியோ இதோ..
* காலையில் மூச்சுப்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். இது ஸ்டிரெஸ் ஹார்மோனான கார்டிசோல் அளவைக் குறைத்து, ஹேப்பி ஹார்மோனான டோபமைனை தேவையான நேரத்தில் விடுவிக்கும்.
* நல்ல சத்தான உணவுப்பொருட்கள், தானியம் மற்றும் விதை வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பழங்களை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், உங்கள் மனதுக்குள் இருக்கிற குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்கிறார் டாக்டர் யோ. தீபா.



















