"அதிமுக, திமுக கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சேர்ந்து ஆட்சி அமைக்க..!" - சசிகலா க...
'காத்திருப்பு; எமோஷன்; கூட்டல் கழித்தல் கணக்குகள்' - எப்படியிருக்கிறது பனையூர்?| Detailed Report
தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடிக்க திரைமறைவில் காய்களை நகர்த்தி பல தரப்பினரும் முயன்று கொண்டிருக்கின்றனர். இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியும் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.

அடுத்து என்ன நடக்குமென தெரியாத இந்த சூழலில் பனையூரில் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. 'விஜய் இனி ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை' 'தவெகவின் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்கிறார்கள்' 'தவெக எம்.எல்.ஏக்களில் 10 பேர் விலைபோய் விட்டார்கள்' என என்னென்னமோ தகவல்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.
உண்மை என்னவென தவெக முகாமில் இறங்கி விசாரித்தோம்.
ரிசல்ட் வெளியான மறுநாள் காலை 10 மணிக்கே எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் பனையூரில் கூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்களும் பனையூரில் ஆஜர் ஆகினர். அப்போதே தவெக முகாம் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. எங்கே திமுக, அதிமுக உள்ளே புகுந்து எம்.எல்.ஏக்களை தூக்கி வேலையை காட்டி விடுவார்களோ என கொஞ்சல் அலர்ட்டாகவே இருந்தார்கள். ஒரு சில எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு வர தாமதமாகவே முக்கிய நிர்வாகிகள் கொஞ்சம் டென்ஷனும் ஆகியிருக்கிறார்கள்.

ஒருவழியாக 106 எம்.எல்.ஏக்களும் வந்து சேர விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறி, 'நாம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். கவலைப்படாதீர்கள்' என வாழ்த்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து சென்னையில் தங்க இடமுள்ள எம்.எல்.ஏக்கள் அவரவர் இடங்களில் தங்கியிருங்கள்.
வெளியூர் எம்.எல்.ஏக்களுக்காக மகாபலிபுரம் ரெசார்ட்டில் அறைகள் புக் செய்திருக்கிறோம். அங்கே தங்கிக் கொள்ளுங்கள். எப்போது அழைத்தாலும் உடனே வர வேண்டும் என தகவல் சொல்லப்பட்டிருந்தது. இதற்கு அடுத்த நாள்தான் காங்கிரஸ் தரப்பில் விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு கொடுக்கின்றனர். விஜய்யும் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆட்சியமைக்க அழைக்கவில்லை.
இதன்பிறகுதான் திமுக - அதிமுக கூட்டணி என்கிற தகவல் தீயாய் பரவ ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் தவெகவின் எம்.எல்.ஏக்களுக்கு அவசர கூட்டத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எம்.எல்.ஏக்கள் பனையூரில் கூடியிருந்தனர். அதே சமயத்தில் விஜய்யும் இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆளுநர் தரப்பிலிருந்து பாசிட்டிவான பதில் எதுவும் கிடைக்காததால் குழம்பிய விஜய் நேராக பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு வண்டியை விட்டார். அங்கே முக்கிய நிர்வாகிகளோடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். விசிக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கலாம் என முடிவெடுத்து அருண்ராஜ், சி.டி.ஆர், ஆதவ் என முக்கியஸ்தர்கள் மூவரையும் ஒவ்வொரு பக்கம் அனுப்பினார்.

பனையூரில் காத்திருந்த எம்.எல்.ஏக்கள் நாள் முழுவதும் காத்திருக்க, மாலை 6 மணிக்கு மேல் புஸ்ஸி ஆனந்த் எம்.எல்.ஏக்களை சந்திக்க வந்தார். 'எம்.எல்.ஏக்களான நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ப்ரீயாக இருங்கள். எல்லாவற்றையும் தலைவர் பார்த்துக் கொள்வார். இரண்டு நாட்களுக்கு பொறுமையாக இருங்கள். அதற்குள் நிலவரம் தெளிவு பெறும். உங்கள் எல்லார் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் மற்ற கட்சியினரைப் போல ரெசார்ட்டில் எல்லாம் அடைத்து வைக்க மாட்டோம். ரெசார்ட்டில் நமக்கென ரூம்கள் இருக்கிறது. அங்கே சென்று தங்க விரும்புபவர்கள் தங்குங்கள். மற்றவர்கள் சென்னைக்குள்ளேயே இருங்கள்.
அழைத்த அரைமணி நேரத்தில் ஸ்பாட்டில் இருக்கும் தொலைவில் இருக்க வேண்டும். எந்த கவலையும் இல்லாமல் சென்று வாருங்கள்' என ஆனந்த் கூறியிருக்கிறார்.
எம்.எல்.ஏக்கள் யாரும் முகாம் தாவிவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் பெர்சனலாகவும் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. 'தளபதி முகத்துக்காகதான் நாமெல்லாம் ஜெயிச்சிருக்கோம்' என ஆனந்த் ஆரம்பிக்க, அவிநாசி எம்.எல்.ஏ கமலி கையில் நான்கு மாத குழந்தையோடு இருக்கிறார். கூட்டத்தில் அவர் பேசுகையில், 'எல்லாரும் என்னையை 3 மாச குழந்தையோட பிரசாரம் பண்ணி ஜெயிச்சிருக்கீங்கன்னு பாராட்டுன்னீங்க. தளபதிக்காக இந்த 4 மாச குழந்தையை தூக்கிட்டு திரும்பவும் பிரசாரத்துக்கு போக தயாரா இருக்கேன். அவர் என்ன முடிவெடுத்தாலும் கூட நிற்போம். விட்டுட்டு போகமாட்டோம்' எனக் கூறியிருக்கிறார்.

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி பேசுகையில், 'என்னோட சின்னப் பையனுக்கு நேத்து ஆக்சிடண்ட். கால் உடைஞ்சு ஆஸ்பத்திரியில இருக்குறான். அவனை பார்க்க கோயம்புத்தூர் போனா ஒரு எம்.எல்.ஏ மிஸ்ஸிங்னு தளபதி பெயரை டேமேஜ் பண்ற மாதிரி நியூஸ் வரும்னு புள்ளையை கூட பார்க்க போகாம இங்கே இருக்கேன். என்ன ஆனாலும் பார்த்திடலாம். சோதனைகளை கடந்து தளபதி ஜெயிப்பார்' என எமோஷனலாக கூறியிருக்கிறார்.
'கும்பகோணம் மொத்தமும் திமுக ஆதிக்கம்தான். அங்க 20 ரவுண்ட்ல திமுகதான் முன்னிலையில இருந்துச்சு. கடைசி ரவுண்ட்லதான் நான் முன்னிலைக்கு வந்தேன். அங்க மக்களுக்கு என்ன யாருனே தெரியாது. தளபதிக்காகதான் மக்கள் எனக்கு ஓட்டு போட்ருக்காங்க. நான் எப்படி தளபதியை விட்டுட்டு போவேன்' என கும்பகோணம் வினோத் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
மக்கள் இயக்கத்தவர்கள் அணி மாறமாட்டார்கள், புதிதாக வந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சிலர் பேச, ரெட்டியார்பட்டி நாராயணனும் ஜெகன்நாத் மிஸ்ராவும் கொந்தளித்திருக்கிறார்கள். 'என் பொண்டாட்டி போலீஸூ, என் பையன் வக்கீலுக்கு படிக்குறான். ரெண்டு பேரும் இனிமே நம்ம வாழ்நாளுக்கும் தவெகலதான் இருக்கணும்.
ஒரு மனுசனை எல்லாரும் ஒன்னா சேர்ந்து வருத்துறப்போ நாம அவருக்கு துணையா நிக்கணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. நான் இங்க இருந்து போனா என் வீட்லயே என்னை மதிக்க மாட்டாங்க. இப்போ நடக்குற கொடுமைகளை அழிச்சு ஒழிச்சு நாம ஆட்சியமைக்கணும்' என திருக்குறள் ரெபரன்ஸ் எல்லாம் வைத்து கனீரென பேசியிருக்கிறார் நாராயணன்

வேண்டுமென்றால் திமுகவிலிருந்து நான்கு எம்.எல்.ஏக்களை இழுத்து வரட்டுமா...' என மாற்றுக்கட்சியிலிருந்து வந்து வென்ற எம்.எல்.ஏக்கள் சிலர் கேட்க பெரும் உத்வேகத்தோடு கூட்டம் முடிந்திருக்கிறது.
இன்று காலையும் செங்கோட்டையன், ஆதவ் ஆகியோர் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்திருக்கிறது. ஒருவர் விடாமல் 106 எம்.எல்.ஏக்களும் கூட்டத்தில் கலந்துகொண்டதிலும் எம்.எல்.ஏக்கள் உத்வேகத்தோடு இருப்பதிலும் விஜய்யே தெம்பாக இருக்கிறார்.
காத்திருப்பு, பரிதவிப்பு, கூட்டல் கழித்தல் கணக்குகள் என நிமிடங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது பனையூர். விஜய் இன்று மாலை 4:30 மணிக்கு மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார். பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது பனையூர்.!













