திருப்பரங்குன்றம் விவகாரம்: "அறங்காவலர் குழு எங்களிடம் ஆலோசிக்கவில்லை" - ஸ்தானி...
கிருஷ்ணகிரி: ராகி களியில் விஷம் வைத்து கணவர் கொலை; மனைவி கைது; என்ன நடந்தது?
ராகி களியில் விஷம் வைத்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி கைது செயப்பட்டுள்ள சம்பவம், தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள பேலாளம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் மகேஷ். இவர் மனைவி முனிரத்னா கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது.
கடந்த 14 ஆம் தேதி மகேஷ்க்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தவர், வீட்டுக்கு வந்து இறந்து விட்டார்.
மகேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தளி போலீசில் புகார் அளித்தனர். மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், உடலை உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகேஷ உட்கொண்ட உணவில் விஷம் கலந்திருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவர, போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மனைவி முனிரத்னாவிடம் போலீசார் விசாரணை நடத்த, கணவரை தான்தான் விஷம் வைத்து கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தில், "என் கணவர் தினமும் மது குடிப்பார். வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமல் குடிப்பது மட்டுமின்றி, நான் சம்பாதிக்கும் பணத்தையும் வாங்கி குடித்து விடுவார். இதைக் கண்டித்தால் என்னை அடித்து கொடுமைப்படுத்துவார்.
இனி பொறுக்க முடியாது என்று முடிவெடுத்து கணவரைக் கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவம் நடந்த அன்று, தானியங்கள் கெடாமல் இருக்கப் பயன்படுத்தும் மாத்திரைகளைக் கரைத்து ராகி களியில் கலந்து கணவருக்கு சாப்பிட கொடுத்தேன். சிறிது நேரத்தில் வீட்டிலேயே இறந்துவிடுவார் என்று நினைத்து வேலைக்குச் சென்றுவிட்டேன்.
ஆனால், அவர் வயிற்று வலி என்று தனியார் மருத்துவமனைக்குச் சென்றது எனக்குத் தெரியாது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்ததும் அங்கு சென்றேன். தொடர்ந்து சிகிச்சை எடுத்து கணவர் பிழைத்துக்கொண்டால் களியில் விஷம் கலந்த விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால், தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க பணம் இல்லை என்று கூறி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்.
வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார். இதை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், உறவினர்கள் போலீசில் புகார் அளித்ததால் உடற்கூராய்வில் விஷம் கலந்தது தெரிந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.
முனிரத்னாவைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.















