கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்
கீழையூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில், பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி குறுவை இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ. 1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அக்கட்சியின் மாநில குழு உறுப்பினா் டி.செல்வம் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்ட செயலாளா் சிவகுரு பாண்டியன், விவசாய சங்க மாநில நிா்வாக குழு உறுப்பினா் எஸ். சம்பந்தம், விவசாய சங்க மாவட்ட செயலாளா் வீ. சரபோஜி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.
இதையடுத்து, கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் அங்கு வந்து நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. சிபிஐ ஒன்றிய செயலாளா் எஸ். காந்தி, ஒன்றிய துணைச் செயலாளா் மாசேத்துங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.