டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!
சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.க
காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது.
அதில் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார், கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் போன்ற ஆறு பேர் வெற்றிபெற்றனர். அதேபோல முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பத்து தொகுதிகளில் வெற்றிபெற்றது.
ஆட்சியமைக்க தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றதால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி. அதையடுத்து சபாநாயகர், உள்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை ரங்கசாமியிடம் கேட்டுப் பெற்றது பா.ஜ.க.

அதன்படி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார் போன்றவர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துவிட, கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் வெறும் எம்.எல்.ஏ-க்களாகவே தொடர்ந்தனர்.
இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொண்டது பா.ஜ.க தரப்பு. அத்துடன் உழவர்கரை சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் மற்றும் திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்களை தங்கள் கட்சி ஆதரவாளர்களாக வளைத்துப் போட்டது.
அதன் மூலம் தங்கள் எம்.எல்.ஏ-க்களின் பலத்தை உயர்த்திக் காட்டிய பா.ஜ.க, அவர்களுக்காக வாரியத் தலைவர் பதவிகளைக் கேட்டது.
விரக்தியில் விழுந்த அமைச்சர் ஜான்குமார்
ஆனால் முதல்வர் ரங்கசாமி அதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதற்கிடையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த எம்.எல்.ஏ ஜான்குமார், அது கிடைக்காமல் போனதும் விரக்தியடைந்தார்.
அதையடுத்து டெல்லி சென்று திரும்பிய அவர், ``சுழற்சி முறையில் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் இப்போது இருக்கும் அமைச்சர் தொடர்வார். அதன்பிறகு எனக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியிருக்கிறார்கள்" என்றார்.
ஆனால் நான்கரை ஆண்டுகள் கடந்தும் அப்படி ஒரு சுழற்சி நடைபெறாததால் மீண்டும் விரக்தியில் விழுந்தார். அதனால் தன்னுடைய லாட்டரி தொழில் குருவான மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரி அரசியலில் களமிறக்கினார் ஜான்குமார்.

அதன்பிறகு இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்களை இணைத்துக் கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கினார் ஜான்குமார். செல்லுமிடங்களிலெல்லாம் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.
உச்சபட்சமாக முதல்வர் ரங்கசாமியை `கிணற்றுத் தவளை' என்று விமர்சித்தார். அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளிப்படையாக எதிர்ப்புகள் வரவில்லை என்றாலும், `கூட்டணியில் இருந்துகொண்டே யாரோ ஒரு தனி நபருடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நம்மை இப்படி விமர்சிப்பது சரியா?' என்று முதல்வர் ரங்கசாமியிடம் பொருமித் தீர்த்தனர் மூத்த நிர்வாகிகள்.
இதற்கிடையில் ஜான்குமாரின் `மூவ்'வை பார்த்து `ஜெர்க்'கான பா.ஜ.க தலைமை சாய் சரவணகுமாரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ஜான்குமாரை அமைச்சராக அறிவித்தது.
`ஜோஸ் சார்லஸ் மீது எத்தனை ஈ.டி வழக்குகள் இருக்கிறது என்பது தெரியாதா ?’
ஆனால் அவருக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அரசியல் விளையாட்டை துவக்கினார் முதல்வர் ரங்கசாமி. விளைவு… அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக வலம் வருகிறார் ஜான்குமார்.
அத்துடன் பா.ஜ.க தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்த்த அவர், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் மட்டும் வலம் வந்தார். இதற்கிடையில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.
அதையடுத்து பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தவிர்த்த என்.ஆர்.காங்கிரஸ், `தேர்தலுக்கு முன்பாகவே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.

உங்களின் `பி' டீமாக செயல்படும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினையும், அவருடன் இருக்கும் உங்கள் எம்.எல்.ஏ-க்களையும் அடக்கி வையுங்கள். போலி மருந்து விவகாரத்தில் எங்கள் முதல்வர் ரங்கசாமிக்கு கெடு விதிப்பதற்கு இவர் யார் முதலில்? இவருக்கும் புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம் ?
இவர் மீது எந்தெந்த மாநிலங்களில் எத்தனை அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதா ?’ என்று கறாராகக் கூறியது. அதன் எதிரொலியாக பா.ஜ.க தலைமையில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.
அப்போது, `பா.ஜ.க கூட்டணிக்குள் வந்துவிட வேண்டும். உங்களுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி கொடுக்கப்படும். அதைத் தாண்டி எதுவும் அங்கு நடைபெறக் கூடாது' என்று டோஸ் விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமிக்கு பூங்கொத்து கொடுத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவரது காலில் விழுந்து ஆசி பெற்று அமைதியானார்.
திசை தெரியாமல் நிற்கும் எம்.எல்.ஏ-க்கள்
அதேபோல பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ-க்கள் ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் கல்யாணசுந்தரம் போன்றவர்கள், பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் துவங்கியிருக்கின்றனர்.
இந்த அதிரடி மாற்றங்களால், `ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முதல்வரானதும் நாம் அமைச்சராகிவிடலாம்' என்று கணக்குப் போட்டவர்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.
குறிப்பாக உழவர்கரை தொகுதியில் 819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், திருபுவனை தொகுதியில் 2,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன், கட்டப்பஞ்சாயத்துக் குற்றச்சாட்டால் கம்யூனிஸ்ட் கட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு சார்லஸ் மார்ட்டினிடம் இணைந்த ஏ.ஐ.டி.யு.சி-யின் மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் போன்றவர்கள் லட்சிய ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டனர்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டால், தங்களின் கதி என்ன என்று இவர்கள் கலங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில் `அமித் ஷா எச்சரித்ததால் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் `கப்சிப்' ஆனதாக செய்திகள் வெளியாகின.
அதையடுத்து கடந்த ஜனவரி 25-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ``கூட்டணியில் சேருமாறு உள்துறை அமைச்சர் என்னை மிரட்டியதாகக் கூறுவது தவறானது. எங்களை பயமுறுத்தி எதையும் சாதிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் யாரையும் மிரட்டி பணிய வைக்க முடியாது. புதுச்சேரியில் தனித்து வெற்றிபெற்றால் எதையும் செய்ய முடியாது" என்றார்.
ஜான்குமார் தன்னுடைய காமராஜர் நகர் தொகுதியை ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, முதலியார்பேட்டை தொகுதியில் களமாடி வருகிறார். அதேபோல தன்னுடைய மூத்த மகன் ரிச்சர்டை நெல்லித்தோப்பு தொகுதியிலும், இளைய மகன் ரீகனை பாகூர் தொகுதியிலும் களமிறக்கி விட்டிருக்கிறார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகும் நிலை வந்தால், ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.!














