Gold: "இப்போது தங்க நகை வாங்கலாம்; ஆனால்" - ஏறிக்கொண்டே இருக்கும் தங்க விலை; என்...
புதுச்சேரி: 480 பாரம்பர்ய நெல் ரகங்களுடன் சீர்வரிசை; விழிப்புணர்வு விழாவான மஞ்சள் நீராட்டு விழா!
புதுச்சேரி சுகாதாரத் துறையில் சுகாதார உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அய்யனார், தமிழர்களின் மரபு மற்றும் பாரம்பர்யத்தைப் பாதுகாப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவர்.
கடந்த முப்பது ஆண்டுகளாக முன்னோர்கள் பயன்படுத்திய பித்தளை, வெண்கலம், செம்பு, மரம் மற்றும் மண்ணால் ஆன பழங்காலப் பொருட்களைச் சேகரித்தும், மீட்டெடுத்தும் வருகிறார்.
இவற்றை நாளைய தலைமுறைக்காக கல்லூரிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தியும் வருகிறார். இதன் மூலம் பழமை மற்றும் முன்னோர்களின் வாழ்வியல் முறையை மீட்டெடுத்து இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
பழங்காலத்தில் வீட்டில் பெண்கள் பருவம் அடைந்தவுடன் அவர்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி, தாய்மாமன் சீர் செய்வது வழக்கம்.

அப்போது ஆடம்பரச் செலவுகள் இல்லாமல், அந்தந்தக் குடும்பங்களில் விளைவித்த நெல், தானியங்கள், காய்கறிகள், கிழங்குகள் மற்றும் வளர்த்த கால்நடைகளையே சீராகக் கொடுத்து வந்தனர். காலப்போக்கில் அந்த நடைமுறை ஆடம்பரச் செலவுகளாக மாறிவிட்டது.
இப்படியான சூழலில்தான் பாரம்பர்யத்தை பொது நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், குடும்ப விழாக்களிலும் காட்சிப்படுத்தினால் மக்கள் அதைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த அய்யனார், தன்னுடைய தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் பாரம்பர்ய நெல் வகைகளை சீர் வரிசையாகத் தந்து காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இது பற்றி விகடனிடம் பேசிய அய்யனார், "மரபுசார்ந்த விஷயங்களில் எனக்கு உள்ள ஆழ்ந்த ஈடுபாடுதான் இந்த முயற்சிக்குக் காரணம். பழமை, மரபு, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் உயிர்ப்பை உணரவைக்கும் விதமாக சுப நிகழ்வுகளிலும் மரபுசார்ந்த பொருள்கள் இடம்பெற வேண்டும் என்பது என் நோக்கம்.
இது வெறும் மஞ்சள் நீராட்டு விழாவாக மட்டும் இல்லாமல், விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாய்மாமன் சீராகப் பழத்தட்டுகளுடன் சேர்த்து 480 வகையான பாரம்பர்ய நெல் வகைகளைக் காட்சிப்படுத்தினேன். இந்தியாவில் 2,000-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
பண்ருட்டியைச் சேர்ந்த என் நண்பர் கவிதை கணேசன் 500-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். பாரம்பர்ய நெல் ரகங்கள் சேகரிப்பில் ஆர்வம் உள்ள நான், அவரிடமிருந்து 480 ரகங்களை வாங்கி வந்து காட்சிப்படுத்தினேன்.
மஞ்சள் நீராட்டு விழாவில் இதை நான் காட்சிப்படுத்துவதற்குக் காரணம் இருக்கிறது. தனியாக நடைபெறும் வேளாண் நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். ஆனால், குடும்ப விழாக்களில் காட்சிப்படுத்தும்போது, அங்கு வரும் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் இந்த நெல் ரகங்களைப் பார்க்கிறார்கள்.

அப்போது பாரம்பர்ய நெல் ரகங்களை நினைவுகூர்வதோடு, இத்தனை நெல் ரகங்களை நம் முன்னோர்கள் விளைவித்தார்களா என்ற விழிப்புணர்வும் உருவாகிறது. இதை ஏற்படுத்தவே இக்காட்சியை அமைத்தேன். வேளாண் நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்துவதைப்போல, சுப நிகழ்ச்சிகளிலும் இத்தகைய கண்காட்சிகள் நடத்தினால், குடும்பத்துடன் வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பழமையை நினைவூட்ட முடியும்.
இளம் தலைமுறைக்குப் பாரம்பர்யம் குறித்த புரிதல், விழிப்புணர்வு மட்டுமல்லாமல் விவசாயத்தின் மீதான ஈர்ப்பும் தோன்ற வேண்டும் என்பதற்கான என் முதல் முயற்சி இது. என் தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் இந்தப் புதிய முயற்சியைத் தொடங்கியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இதை விழிப்புணர்வாக வைத்து, இளைய தலைமுறை விவசாயத்தின் மீதும் பாரம்பர்யத்தின் மீதும் ஆர்வம் காட்டும் என்ற குறிக்கோளுடன் பழமையை நினைவூட்டும் விதமாக இதைச் செய்தேன்" என்றார்.





















