Gold: "இப்போது தங்க நகை வாங்கலாம்; ஆனால்" - ஏறிக்கொண்டே இருக்கும் தங்க விலை; என்...
ஜனநாயகன்: `ராணுவ சின்னங்கள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு..!' - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்!
விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.
ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது.
தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியத்தின் வாதங்களை கேட்ட நீதிமன்றம் திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பியது.
மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.27) தீர்ப்பு வழங்கியது.
ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்கும்படி, சென்சார் போர்டுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

படத்தில் ராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அன்னிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமான புகார் வந்துள்ளதால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தீவிரமான புகார் கூறப்பட்டுள்ள நிலையில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டனர்.
மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து பட நிறுவனம் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.





















