செய்திகள் :

'சமூகநீதி டு வாக்கரசியல்' - பாமகவின் தேர்தல் கால ஸ்டண்ட்ஸ்! | கூட்டணி சர்க்கஸ் 03

post image

``தலித் அல்லாத எந்த கட்சியும் தங்களின் கொடியில் நீலத்தை வைத்துக் கொள்ள தயங்கும். ஆனால், பாமகவின் கொடியில் நீலத்தை வைத்தார் ராமதாஸ். வட மாவட்டங்கள் முழுவதும் 100 அம்பேத்கர் சிலைகளை நிறுவினார். இன்றைக்கும் நாம் மாலை போடும் பல சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை. அவர் வீட்டில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலைகளை வைத்திருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இடது சிந்தனை கொண்டவர்களால் மாற்றாக பார்க்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பதை யாராலும் மறக்க முடியாது."

- ராமதாஸைப் பற்றியும் பாமகவைப் பற்றியும் திருமா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியவை இவை.!

ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்!

ஒரு காலத்தில் பாமக இப்படித்தான் இருந்தது. ஆனால், தேர்தல் அரசியல் பாமகவை தடம் மாற்றியது. வந்த வழியை மறக்க செய்தது. வெறுமென சாதிய வாக்குகளை மட்டுமே நம்பிய சந்தர்ப்பவாத அரசியலை நோக்கி தள்ளியது. தேர்தல் அரசியலுக்காக ராமதாஸ் சுயநலமாக எடுத்த முடிவுகள்தான் இப்போது அவர் வடிக்கும் கண்ணீருக்கும் காரணம்.

வாக்கு வங்கி தூண்டில், செய்த சத்தியத்தையே மீற வைக்கும், அதன்வழி வளர்த்த கிடாவையே மாரில் பாய வைக்கும், பெரும் கனவோடு தொடங்கப்பட்ட இயக்கத்தில் தன்னுடைய உரிமையையே அது கேள்விக்குள்ளாக்கும் என்றெல்லாம் ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்.

ராமதாஸ் - பாமக
ராமதாஸ் - பாமக

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்காக வட மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் வகையில் ராமதாஸ் முன்னெடுத்த போராட்டங்கள் ஒரு புதிய அரசியல் சக்திக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. 1989 இல் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது. அது வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாகத்தான் பாமகவை வடிவமைத்திருந்தார் ராமதாஸ். அதனால்தான் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்கள் ஆக்கிக் கொண்டார். வர்க்க விடுதலைக்காக மார்க்ஸையும் உடன் இணைத்துக் கொண்டார்.

'கருணாநிதி ஒரு துரோகி' என..!

கட்சியில் பொதுச்செயலாளர் பதவி ஒரு தலித்துக்குதான் வழங்கப்பட வேண்டுமென பைலாவிலேயே இடம்பெறச் செய்தார். அதனால்தான் 90 களின் தொடக்கத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் திராவிட கட்சிகளின் மாற்றென யோசிக்கையில் பாமகவே அவர்களின் புகலிடமாக இருந்தது.

ராமதாஸூம் ஆரம்பக்கட்டத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் கடுமையாக எதிர்த்தார். போராடிய இட ஒதுக்கீடு கிடைத்திருந்தாலும் 108 சாதிகளோடு பங்கு போட்டுக் கொள்ள சொன்னதில், 'கருணாநிதி ஒரு துரோகி' என கடுமையாக விமர்சித்திருந்தார். சர்ச்சைகள் நிரம்பிய ஜெயலலிதாவின் அந்த 91-96 ஆட்சியிலும் அரசுக்கு எதிராக காத்திரமாக களமாடினார். விடுதலைப் புலிகளுக்காக தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி கைதாகினார். பாமகவை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் பேசினார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

தடாவை திரும்பப் பெறக்கோரி போராடி ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல்நலிவுற்றார், அவதிப்பட்டார். 'ஜெயலலிதா நல்லாவே இருக்கமாட்டாங்க' என ராமதாஸின் மனைவி சாபம் விட்டார். ராமதாஸ் துவளவில்லை. சிறையிலிருந்து வந்து மீண்டும் இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் செய்தார்.

1996 சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணி கட்டி போராடினார். 1991 தான் பாமக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் சேர்த்துக் கொண்டு 194 தொகுதிகளில் பாமகவை போட்டியிட வைத்தார். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாமக வென்றது.

பாமக சார்பில் வென்று சட்டமன்றத்துக்கு யானையில் சென்றது பண்ருட்டி ராமச்சந்திரன் எனும் பூர்விக அதிமுக-காரர். பெரிய தோல்வியென்றாலும் பாமகவுக்கு கிடைத்த 5.9% வாக்கு வங்கி ராமதாஸூக்கு நம்பிக்கைக் கொடுத்தது. அந்த நம்பிக்கையோடுதான் 96 தேர்தலிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டார். போட்டியிட்ட 116 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே யானை சின்னம் வெற்றி வாகை சூடியது. அப்போது பாமகவுக்கு யானை சின்னம்தான் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராமதாஸ்
ராமதாஸ்

கூட்டணி சர்க்கஸ் ஆரம்பம்

96 தேர்தலுக்குப் பிறகுதான் ராமதாஸின் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பமானது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நின்றதால் மட்டுமே ராமதாஸ் கொண்டாடப்படவில்லை. ராமதாஸ் ஆர்.எஸ்.எஸூக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். மேடைகளில் ஆர்.எஸ்.எஸூக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். தடா சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜெயலலிதா அரசு பயன்படுத்துகிறது என்று கூறிதான் போராடி கைதாகினார்.

ஆனால், 1998 இல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜகவோடு கூட்டணிக்கு சேர்ந்தார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நான்கில் பாமக வென்றது. மத்திய இணை அமைச்சர் பதவி பாமகவை தேடி வருகிறது. அந்த அமைச்சர் பதவியை தலித் ஏழுமலைக்கு கொடுத்தார் ராமதாஸ். பாமக வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை என்பதில் ராமதாஸ் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதற்கு இதெல்லாம் சாட்சி.

'தமிழ்க்குடிதாங்கி'

90 களின் முற்பகுதியில் கும்பகோணம் அருகே குடிதாங்கி கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்லக்கூடாதென வன்னியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். நீண்டகால பிரச்னை இது. விஷயம் ராமதாஸின் காதுக்கு செல்கிறது. குடிதாங்கிக்கு புறப்பட்ட ராமதாஸ், சொந்த சாதியினரின் எதிர்ப்பையும் மீறி அந்த சடலத்தை தோளில் சுமந்து சென்றார். இதற்காக அப்போது திருமாவளவன் ராமதாஸை மதுரையின் மேலூருக்கு அழைத்து பாராட்டு விழா எடுத்து 'தமிழ்க்குடிதாங்கி' என்று பட்டம் கொடுத்தார். 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்புடனேயே பயணித்தனர். அவர்கள் பிளவுபட்ட இடத்தைப் பற்றி பிற்பகுதியில் பார்ப்போம்.

ராமதாஸ்
ராமதாஸ்

1998 இல் ஆட்சியைப் பிடித்த வாஜ்பாயின் அரசு ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் 13 மாதங்களிலேயே கலைந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த இடத்துக்கு திமுக வந்து சேர்ந்தது. பாமக அப்படியே தொடர்ந்தது. அந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 5 தொகுதிகளில் பாமக வென்றது.

இரண்டே ஆண்டுகளில் ராமதாஸ் ஜம்ப் அடித்தார். 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தார். பாமகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாமகவின் 37 ஆண்டுகால வரலாற்றில் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த தேர்தல் இதுவே. பாமக சார்பில் 20 பேர் கோட்டைக்கு சென்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு மீண்டும் ஜம்ப் அடித்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து சேர்ந்தார்.

ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவம்...

அடுத்தடுத்து அணிகள் மாறினாலும் துடிப்பான அரசியல் செயல்பாடுகளால் பாமகவுக்கான வாக்கு வங்கியை பெருக்கிக் கொண்டே இருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் வென்றது. பாமகவின் வாக்கு வங்கி 6.7% ஆக உயர்ந்தது. அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறென ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவமும் அப்போதுதான் நடந்தது. அன்புமணி மாநிலங்களவைக்கு சென்றார். சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார்.

Anbumani
Anbumani

2006 சட்டமன்றத் தேர்தலுக்கும் இதே கூட்டணியில் தொடர்ந்தார் ராமதாஸ். கருணாநிதி பாமகவுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கினார். 18 தொகுதிகளில் பாமக வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதால் 130 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட்டிருந்தது. 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாமக, காங்கிரஸின் ஆதரவில்தான் கருணாநிதி ஆட்சியமைத்தார். இந்த சமயத்தில்தான் திமுகவுக்கு பெரிய குடைச்சலாக மாறினார் ராமதாஸ். தினசரி எதாவது ஒரு பிரச்னையை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்.

நிழல் பட்ஜெட், அரசுக்கான ரேங்க் கார்ட் என அடித்து ஆடினார். ஆட்சியமைந்த சில மாதங்களிலேயே சென்னையில் புறநகரத்தில் துணை நகரம் என்ற ஒன்றை அமைக்கப்போகிறோம் என திமுக அரசு முடிவெடுத்தது. அதற்காக 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.

ராமதாஸ் களத்தில் இறங்கினார். இத்திட்டத்தால் பாதிப்படையும் 132 கிராம மக்களையும் திரட்டி போராடினார். கருணாநிதியின் பிரதிநிதியாக தயாநிதி ராமதாஸை சந்தித்து திட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். ராமதாஸ் மசியவில்லை. மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி போராட்டத்தில் இறங்கினார்.

ராமதாஸ்
ராமதாஸ்

கருணாநிதி பின்வாங்கினார். திட்டம் கைவிடப்பட்டது. இப்படியாக அந்த ஆட்சி முழுவதும் யானையின் காதில் புகுந்த எறும்பாக உறுத்தினார் ராமதாஸ். ஆட்சிக்கு '0' மதிப்பெண் கொடுத்து கருணாநிதியையே திணறடித்தார். ஆனால், இந்த காலக்கட்டத்தில்தான் தேர்தல் ரீதியாக ராமதாஸ் எடுத்த முடிவுகள் தவறாகப் போனது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப்போராட்டத்தை காரணம் காட்டி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆனாலும் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை அப்படியே தொடர்ந்தது. எனினும் பாமக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அப்படியே 2011 தேர்தலையும் அதிமுக கூட்டணியிலேயே எதிர்கொள்வார் என எதிர்பார்க்க, சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் அறிவாலயம் பக்கம் வந்தார்.

பேரனின் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க கோபாலபுரம் சென்றவர் 2011 தேர்தலுக்கான கூட்டணியையும் பேசி முடித்துவிட்டு வந்தார். அந்தத் தேர்தலில் விசிகவும் திமுக கூட்டணியில்தான் இருந்தது. பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. வென்றதோ 3 தொகுதிகள் மட்டுமே. திமுக கூட்டணிக்கே மிகப்பெரிய தோல்வி. இந்தத் தோல்வி ராமதாஸின் அரசியல் பாதையையே மாற்றியது. அதுவரை பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர், வன்னியர்களுக்கான கட்சி என்கிற தனி வட்டத்துக்குள் பாமகவை அடக்க தொடங்கினார்.

திருமாவளவன்
திருமாவளவன்

2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்பு பாராட்டியே வந்தனர். சமூக உரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர் வாழ்வுரிமை மாநாடுகளை ராமதாஸ் நடத்தினார். அதில் திருமா கலந்திருக்கிறார். அதேமாதிரி, திருமா மதுரையிலிருந்து சென்னை வந்து அரசியல் செய்யவும் ஊக்கமாக இருந்தவர்களில் ராமதாஸூம் ஒருவர். ஈழப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் திருமா காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தவர் ராமதாஸ்தான். விசிகவும் பாமகவும் இணைந்து ஈழத்துக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுக்கலாம் என திருமாவே திட்டமிட்டார்.

2011 க்குப் பிறகு நடந்த சில சம்பவங்கள் ராமதாஸூக்கும் திருமாவுக்கும் இடையில் இணைய முடியாத விரிசலை ஏற்படுத்தியது. இளவரசன் - திவ்யா காதல் விவகாரம், அதைத் தொடர்ந்து தலித் குடிசைகள் எரிக்கப்பட்ட சம்பவம், மரக்காணம் கலவரம் என சமூகரீதியாகவே பிளவு ஏற்பட்டது.

பாமக
பாமக

'பாமக கொடியில் முதலில் நீலம் கீழ் பகுதியில்தான் இருந்தது. கட்சியின் சில செயற்குழு உறுப்பினர்கள். தலித்துகளின் அடையாளமான நீலத்தை கீழே வைத்திருப்பதா என கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் கேட்பது சரிதானே என்று உடனடியாக நீலத்தை மேல்பகுதிக்கு கொண்டு சென்று கட்சிக் கொடியையே மாற்றினேன்' பாமகவின் நீலம் - மஞ்சள் - சிவப்பு கொடியைப் பற்றி இப்படி கூறிய அதே ராமதாஸ்தான், 2011 க்குப் பிறகு 'கூலிங் க்ளாஸையும் ஜீன்ஸையும் போட்டுட்டு நம்ம வீட்டு புள்ளைங்களை காதலிச்சுட்டு போறானுங்க' என தலித் இளைஞர்கள் மீது வெறுப்பை கக்கினார்.

தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற பெயரில் தலித்துகளற்ற மற்ற கட்சியினரை ஒருங்கிணைத்தார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலையை தைலாபுரத்தில் வைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக்காக கட்சி தொடங்கிய ராமதாஸை சமூகத்தை பிளக்கும் வெறுப்பரசியலை நோக்கி தள்ளியது வாக்கரசியல். இந்த சமயத்தில்தான் பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விசிக எப்போதும் இருக்காது என திருமா அறிவித்தார்.

திருமா
திருமாவளவன்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமானது பாமக. அது அதிமுகவின் தேர்தல். மோடியா லேடியா எனக் கேட்டு ஜெ. வாக்குகளை அள்ளினார். பாமக சார்பில் அன்புமணி மட்டும் தர்மபுரி தொகுதியில் வென்றார்.

கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய கொள்கைகள், லட்சியங்கள் என ராமதாஸ் வகுத்து வைத்திருந்த கோட்பாடுகளை ஒவ்வொன்றாக அவரே மீறிய காலக்கட்டம் இது.

'என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். இது சத்தியம். இதிலிருந்து தவறினால் என்னை நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என பழைய ராமதாஸ் கூறியிருந்தார். அன்புமணி வழி அந்த சத்தியத்தை எப்போதோ மீறிவிட்டார்.

மகனை எம்.பி ஆக்கி அமைச்சர் ஆக்கியவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். இப்போது விஜய்க்கு 'பலே' வியூகங்களை வகுத்து கொண்டிருக்கிறாரே, அதே ஜான் ஆரோக்கியசாமிதான் அப்போது அன்புமணிக்கும் வியூக வகுப்பாளர்.

அமெரிக்க தேர்தல் கலாசாரத்தை பின்பற்றி வியூகங்களை வகுத்தார். கொள்கைகளைப் பேசி பல உயிர்களைப் பலிகொடுத்து உருவான கட்சியின் ஒற்றை முகமாக அன்புமணி முன்னிறுத்தப்பட்டார். 'மாற்றம்...முன்னேற்றம்...அன்புமணி' என படோபடமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஒரு பயனும் இல்லை. பாமகவுக்கு எப்போதும் கிடைக்கும் அதே 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி:
மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி:

'பிக்பாஸில் ஓவியாவுக்கு போட்ட வாக்குகளை எனக்கு போட்டிருந்தால் நான் முதல்வராகியிருப்பேன்' பொதுவெளியில் மேடையிலேயே மனம்விட்டு பேசி விரக்தியடைந்தார் அன்புமணி. அடுத்த 3 ஆண்டுகளில் நடந்ததுதான் அதகளம். அரசியல்வாதிகளின் பேச்சை ஓடும் தண்ணீரில்தான் எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக செயல்பட்டார் அன்புமணி.

ஜெ. இறப்புக்குப் பிறகு பதவியேற்ற எடப்பாடி அரசை கன்னாபின்னாவென விமர்சித்தார். அதிமுகவினரை டயர் நக்கிகள் என்று நாகரீகத்தை மீறி வசைபாடினார். ஊழல் அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநரிடம் முறையிட்டார். அதிமுக அரசுக்கு எதிராக புழுதி பறக்க களமாடிவிட்டு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணியிலேயே தஞ்சமடைந்ததுதான் சோகம்.

மதுவிலக்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பென ஒப்புக்கு 10 கோரிக்கைகளை அதிமுகவிடம் நீட்டி, அதைச் செயல்படுத்த முயல்வதாக எடப்பாடி உத்தரவாதம் கொடுத்ததால் கூட்டணியில் இணைகிறோம் என தந்தையும் மகனும் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஜல்லியடித்தனர். அதிமுகவை 180 டிகிரியில் வளைபவர்கள் என திட்டி தீர்த்துவிட்டு, 'கூட்டணிக்காக நாணலாக வளைகிறோம்' என்றார் ராமதாஸ்.

தேர்தல் முடிவுகள் தமிழகம் அறிந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. ஓ.பி.எஸ்ஸின் மகன் மட்டுமே வென்றார். இந்தத் தேர்தலின் பிரசாரத்தின் போதும் ராமதாஸ் திருமா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சிதம்பரத்தில் பிரசாரம் செய்த ராமதாஸ், 'தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான்.. ஆனா அது என் தப்புதான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே எதுக்கு? வேண்டாம் என்றுதான் சொல்வேன்' என்றார்.

ராமதாஸ் - மோடி
ராமதாஸ் - மோடி

2021 சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பாமக தொடர்ந்தது. பாமகவுக்கு 23 தொகுதிகள். ஐந்தில் மட்டுமே பாமக வென்றது. வாக்கு சதவீதமும் இதுவரை இல்லாத அளவுக்கு 3.8% ஆக கடுமையாக சரிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவே பாஜகவிடமிருந்து பிரிந்து வந்துவிட்டது. பாமக வரவில்லை. தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று கூட்டணியை உறுதி செய்துவிட்டு வந்தார் அண்ணாமலை. அப்போது திரைமறைவில் நடந்த விவகாரங்களையெல்லாம் இப்போதுதான் போட்டுடைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ்.

அன்புமணி vs ராமதாஸ்

அன்புமணியை மகனாக பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் என கண்ணீர் விடுகிறார் ராமதாஸ். வாரிசை கட்சிக்குள் கொண்டு வரமாட்டேன் என செய்த சத்தியத்தை மீறியதற்காக அவர் வருந்தவில்லை. மகன் சொல்படி கேட்கவில்லை. மகன் தன் சொல்படி கேட்டு வர வேண்டும் அல்லது மகன் இருந்த இடத்தில் மகளையோ பேரனையோ நிறுத்தி அழகு பார்க்க வேண்டும், அவ்வளவுதான். மற்றபடி பெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளமாக இருந்த கட்சி ஒரு குடும்பத்தின் அடையாளமாக மாறி பங்கு பிரிப்பு சண்டை வீதிக்கு வந்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை.

'திடீர்னு பாரத் மாதா கி ஜேனு ஒரு கூட்டம் உள்ள வந்துருச்சு' என 2024 இல் NDA கூட்டணியில் இணைந்ததைப் பற்றி கூறுகிறார். 2019 இல் நாணலாக வளைந்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார்.

பாமக
பாமக

2021 இல் மோடியை கட்டித்தழுவி புன்னகைத்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். அப்போதெல்லாம் பாஜக 'பாரத் மாதா கி ஜே' பாடும் என்பது ராமதாஸூக்கு தெரிந்திருக்கவில்லை போலும்.

2003 இல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர்ந்தால் சரியாக இருக்கும். பாமகவின் ஏ.கே.மூர்த்தி மத்திய இரயில்வே துறை இணையமைச்சர். ராமதாஸூம் ஏ.கே.மூர்த்தியும் டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு கூட்டத்துக்காக புறப்ப்படுகிறார்கள். பெங்களூரு வரை விமானம். அங்கிருந்து இரயில் பயணம். ஏ.கே.மூர்த்தி இரயில்வேதுறை இணை அமைச்சர் என்பதால் அவருக்கு இரயிலில் சகல வசதிகளுடன் தனிப்பெட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

ராமதாஸ் 2AC இல் டிக்கெட் போட்டிருக்கிறார். என்னுடன் தனிப்பெட்டியில் வாருங்கள் என ராமதாஸை ஏ.கே.மூர்த்தி அழைக்கிறார். அதற்கு ராமதாஸ் 'இரயில்வேதுறை இணையமைச்சர் என்ற முறையில் உனக்கு அந்தப் பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எந்தப் பதவியிலும் இல்லாத நான் அதில் பயணம் செய்வது முறையல்ல. எந்த அதிகாரப் பதவியையும் வகிப்பதில்லை என்பதிலும் அதனால் கிடைக்கும் சௌகரியங்களையும் அனுபவிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றாராம்.

வன்னியர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சாதியினருக்கும் குறிப்பாக தலித்துகளுக்கும் சேர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கிய கட்சியை பொதுவுடைமையாக பாவித்த அதே தலைவர், அதிகாரத்தால் கிடைக்கும் சௌகரியங்கள் குடும்பத்துக்கே கிடைக்க வேண்டும், வெறுப்பரசியலின் வழி பிளவை ஏற்படுத்தி ஒரு சாராரின் வாக்கை மட்டுமே அறுவடை செய்துவிடலாம் என்றெல்லாம் மாறி நிற்பது வாக்கரசியலின் அலங்கோலம் என்று தானே சொல்ல முடியும்.!

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

(சர்க்கஸ் தொடரும்..!)

"திமுகவின் பி டீம் அதிமுக; தினகரன் தவெகவில் இணைய விரும்பினார்" - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பல மு... மேலும் பார்க்க

டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!

சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.ககாரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் க... மேலும் பார்க்க

"அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது!" - கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், " நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டைய... மேலும் பார்க்க

”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” - ஸ்டாலின்

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு' நடைபெற்றது. இதற்காக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மூவாயிரத்திற... மேலும் பார்க்க

மீண்டும் மொழியைக் கையிலெடுக்கும் திமுக - தேர்தலில் கைகொடுக்குமா?

தியாகிகள் தினம்!தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுகூரும் விதமாக ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று முந்தினம் செ... மேலும் பார்க்க