Covid-19 : `தமிழ்நாட்டில் கொரோனா பரவல்... பாதிப்பா?' - சுகாதாரத்துறை விளக்கம்!
குட்கா விற்றதாக கைதுசெய்யப்பட்ட இளைஞர் சிறையில் மரணம்; போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் கொதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பை அடுத்த ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றதாகக் கடந்த 9-ம் தேதி, தென்தாமரைக் குளம் போலீஸார் சோதனை நடத்தி கடையில் இருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சபரிவர்மனைக் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சிறையில் உள்ள அறையில் சபரிவர்மன் இறந்துகிடந்ததாக சிறைக்காவலர்கள், சிறை உயர் அதிகாரிகளுக்கும் நேசமணி நகர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேசமணிநகர் போலீஸார், சபரிவர்மனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சபரிவர்மன் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் குவிந்தனர். சபரிவர்மனுக்கு எந்த நோயும் இல்லை என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், ``கடந்த 9-ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட சபரிவர்மனை, 10-ம் தேதி நாங்கள் நேரில் பார்த்தோம். அப்போது அவர் உடல்நலத்துடன் நன்றாகவே இருந்தார். அவரை ஜாமீனில் எடுக்க ஏற்பாடு செய்து வந்தோம். இன்று காலை அவரைப் பார்க்கச் சென்றபோது, ஆஸ்பத்திரிக்கு வருமாறு போலீஸார் தெரிவித்தனர். அங்கு சென்ற பிறகுதான் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். தென் தாமரைக்குளம் போலீஸார் தாக்கியதால்தான் அவர் இறந்துள்ளார்" என்றனர். மேலும், சபரிவர்மனின் மரணத்திற்கு நீதி கேட்டு, அவரது உறவினர்களும், கிராம மக்களும் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சபரிவர்மனின் உடலைப் பார்க்கவேண்டும் என்று மனைவி மற்றும் உறவினர்கள் கூறினர். உடலைப் பார்க்கலாம் எனக் கூறி அவர்களை அழைத்துச் சென்று ஓரிடத்தில் வெகுநேரம் அமர வைத்தனர், போலீஸார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்ததால், குமரி போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சபரிவர்மனின் உடலைப் பார்க்க அவரது தாய் மற்றும் மனைவியை மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அழைத்துச் சென்றார்.

அதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனையில் சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாகவோ, அவரது மரணத்தில் சந்தேகம் இருந்தாலோ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஸ்டாலின் உறுதியளித்தார். சபரிவர்மன் மரணம் குறித்து நீதிபதி மற்றும் ஆர்.டி.ஓ ஆகியோர் நாகர்கோவில் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
















