பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததா...
மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?
ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டியுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்புதான் மக்கள் அமோக ஆதரவுடன் தேர்ந்தெடுத்த மேயர் பாலன் ஷா தலைமையிலான அரசுக்கு எதிராக, இன்று இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து கணக்குக் கேட்கத் தொடங்கியுள்ளனர். ஒரு தனிநபரின் மரணம், ஓர் அரசின் நிர்வாகக் குறைபாடுகளையும், அதன் இரக்கமற்ற அணுகுமுறையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை, கணேஷ் நேபாளி என்ற 25 வயது இளைஞர், தனது பைக்-டாக்சி சேவைக்காக வாடிக்கையாளருக்காக காத்மாண்டு வீதியில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மாநகராட்சி காவல்துறையினர், எந்த முன்னறிவிப்புமின்றி அவரது பைக்கின் சக்கரத்தைப் பூட்டினர். வாழ்வாதாரமே பறிபோன விரக்தியின் உச்சத்தில், அந்த இளைஞர் தன் மீதே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இந்த நெஞ்சை உலுக்கும் காட்சியை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், வெள்ளிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம், அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எதிராக நீண்ட காலமாக இருந்துவந்த அதிருப்தியை ஒரு கொந்தளிப்பாக மாற்றியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, தலைநகரில் உள்ள சிங்துர்பார் செயலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களின் கைகளில், 'ஏழைகளுக்கு எதிரான அட்டூழியத்தை நிறுத்து', 'மனித உரிமைகளை மதியுங்கள்' போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் இருந்தன. சட்டவிரோதக் கைதுகளை நிறுத்த வேண்டும் என்றும், பாலன் ஷா அரசால் இடம்பெயரச் செய்யப்பட்ட சாலையோர மக்களுக்கு தங்குமிடம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பினர்.
பாலன் ஷாவின் நிர்வாகம்!
நேபாள ஊடக அறிக்கைகளின்படி, 2022-ல் பாலன் ஷா மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து காத்மாண்டு மாநகராட்சியின் அணுகுமுறையில் ஒருவித ஆக்ரோஷம் அதிகரித்துள்ளது. நடைபாதைகள் மற்றும் முறைசாரா சாலையோரச் சந்தைகளை அகற்றுவது, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற நகர மேலாண்மைப் பணிகளில் ஷா கடுமையான போக்கைக் கடைப்பிடித்தார்.
பல சமயங்களில், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் வன்முறை மோதல்களில் முடிந்தன. இது, நகரின் ஏழை மக்கள் மீதான இரக்கமற்ற தன்மையைக் கண்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன?
அப்படியானால், ஒரு மாநகராட்சியின் காவல்துறைக்கு இவ்வளவு அதிகாரம் எங்கிருந்து வந்தது? சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, மாநகராட்சி நிர்வாகம் தனது அரசியலமைப்புச் சட்ட வரம்புகளைத் தொடர்ந்து மீறி வருகிறது. ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பாக இருக்க வேண்டிய மாநகராட்சி காவல்துறை, மத்திய காவல் படையான நேபாள காவல்துறையின் தந்திரங்களைப் பின்பற்றும் ஒரு ஆக்கிரமிப்புப் படையாக மாறியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் ராஜு சாபகெய்ன் இதுபற்றிக் கூறும்போது, "மாநகராட்சி காவல்துறைக்கு உடல்ரீதியான பலத்தைப் பயன்படுத்தவோ, கலவரத்தைக் கட்டுப்படுத்தும் தந்திரங்களைக் கையாளவோ சட்டத்தில் எந்த இடமும் இல்லை. அவர்களின் முக்கியப் பணி, பேச்சுகள் மற்றும் சமூக ஈடுபாடு மூலம் நிர்வாகப் பணிகளுக்கு உதவுவது மட்டுமே," என்கிறார்.
"போக்குவரத்து அல்லது தெருத் தடைகள் தொடர்பான பிரச்சினைகள் எழும்போது, அது போக்குவரத்து காவல்துறையிடம் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சி அதிகாரிகளே வியாபாரிகளைத் துரத்துவதையும், தனிப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதையும், குடிமக்களைத் தாக்குவதையும் நாம் காண்கிறோம். இது முற்றிலும் சட்டவிரோதமானது," என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சட்டம் சொல்வது வேறு!
இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால், ஷாவின் பதவிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 'காத்மாண்டு மாநகராட்சி காவல்துறை சட்டம் 2023', மாநகராட்சி காவல்துறைக்கு தடியடி நடத்தவோ அல்லது குடிமக்களைக் கைது செய்யவோ அதிகாரம் அளிக்கவில்லை. அந்தச் சட்டத்தின்படி, நகராட்சி சொத்துக்களைப் பாதுகாப்பது, பொதுப் பூங்காக்களைப் பாதுகாப்பது, துப்புரவு இணக்கத்தைக் கண்காணிப்பது, உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் கலாச்சார ஊர்வலங்களுக்கு உதவுவது மட்டுமே அவர்களின் முதன்மைப் பொறுப்புகள். ஓய்வுபெற்ற நேபாள காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பூர்ண சந்திர ஜோஷி, "அவர்கள் முற்றிலும் ஒரு நிர்வாக வசதி அமைப்பு மட்டுமே. ஒரு நிலைமை பொது அமைதிக்குக் குந்தகமாக மாறினாலோ அல்லது உடல்ரீதியான தலையீடு தேவைப்பட்டாலோ, மாநகராட்சி அதிகாரிகள் நேபாள காவல்துறையைத்தான் அழைக்க வேண்டும். அவர்களாகத் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது," என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.
இந்த சட்ட வரம்புகள் இருந்தபோதிலும், ஷாவின் நிர்வாகத்தின் கீழ் மாநகராட்சி காவல்துறை தினக்கூலி வியாபாரிகளுக்கு எதிராக அடிக்கடி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்த ஆக்கிரமிப்புமிக்க நகர்ப்புற நிர்வாக மாதிரி நாடு முழுவதும் உள்ள மற்ற நகராட்சிகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. ஒ
ஒரு நகரத்தை அழகுபடுத்துவது என்பது அதன் ஏழை மக்களை வாழ்வாதாரத்தை விட்டு விரட்டியடிப்பதுதானா என்ற கேள்வி இன்று காத்மாண்டு வீதிகளில் எதிரொலிக்கிறது.















