டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு - மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூ...
குபுகுபுவென எரிந்த மஹிந்திரா கார் - என்னது, பேட்டரி காரணம் இல்லையா? டிரைவிங் ஸ்டைல்தான் காரணமா?
உண்மையைச் சொல்லுங்கள்; எலெக்ட்ரிக் கார்களின் மீது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறதுதானே! அது குறைந்தபாடில்லை. அண்மையில் மீண்டும் ஒரு சம்பவம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் Hapur எனும் இடத்தில், Hurana எனும் டோல்கேட்டுக்குப் பக்கத்தில் ஒரு கார் குபுகுபுவென தீப்பற்றி எரிந்த வீடியோவைப் பார்க்கையில் கொஞ்சம் பகீரென்று தான் இருக்கிறது.
எரிந்து கொண்டிருந்த அந்தக் கார் மஹிந்திராவின் லேட்டஸ்ட் மாடல் BE 6. இதன் ஆன்ரோடு விலை சுமார் 25 லட்சம் வரும். இந்த வாகன உரிமையாளர் அமன் என்பவர், நீண்ட தூரப் பயணம் போகும்போது, டோல்கேட் பக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. நல்லவேளையாக, வேறு யாருக்கும் வேறெந்த ஆபத்தும் இல்லை என்பது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.
हापुड़ में रविवार को महिंद्रा की इलेक्ट्रिक कार चलते-चलते जलकर खाक हो गई। गनीमत रही कि ड्राइवर की जान बच गई। इलेक्ट्रिक गाड़ियों में ब्लास्ट होना, उनका जलना आए दिन की घटनाएं हो गई हैं। लेकिन अफ़सोस कि इस तरफ़ ध्यान नहीं दिया जा रहा। pic.twitter.com/ZeI79oLQpM
— Bhadohi Wallah (@Mithileshdhar) January 25, 2026
இந்த விஷயம், மஹிந்திரா நிறுவனம் வரை காதுக்குப் போய், அந்நிறுவனம் சார்பாக ஒரு ஸ்டேட்மென்ட்டும் விடப்பட்டிருக்கிறது. OBD மூலம் சாஃப்ட்வேர் டயக்னசிஸ் செய்ததில் - இந்தத் தீ விபத்து, பேட்டரியால் நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறது மஹிந்திரா.
அதாவது, ஆக்ஸிலரேட்டரையும் பிரேக் பெடல்களையும் தொடர்ந்து நீண்ட நேரம் இயக்கியிருப்பதால், இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வழக்கத்திற்கு மாறான டிரைவிங் ஸ்டைல் எனவும், அதனால் ரிப்பீட்டட் ஆக பின் பக்க வலது வீல் ஸ்பின் ஆகி, அதன் காரணமாக அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக பேட்டரி மற்றும் மோட்டார் என மற்ற பாகங்களுக்குத் தீ பரவியதாகச் சொல்கிறது மஹிந்திரா. இருந்தாலும், இது Early Analysis Report எனவும், விரிவான புலனாய்வு இனிமேல் நடத்தப்போவதாகவும் தெரிவித்திருக்கிறது அந்தக் கார் நிறுவனம்.
இதற்கு முன்பு எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தால் பேட்டரி வெப்பம், ஓவர் சார்ஜிங் என முக்கியமான 2 சமாச்சாரங்கள்தான் காரணமாகச் சொல்லப்பட்டு வந்தது. இப்போது, மஹிந்திராவின் இந்த ஸ்டேட்மென்ட் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. அப்படியென்றால், புதிதாகக் கார் ஓட்டுபவர்கள் எலெக்ட்ரிக் கார் ஓட்டுவது சிக்கலோ என்கிற அச்சத்தையும் இது கிளறி விட்டிருக்கிறது.

பொதுவாக, ICE கார்களுக்கு - அதிகப்படியான வெப்பம் என்பது ஆகாது. அதிலும் எலெக்ட்ரிக் கார்களுக்குச் சொல்லவே வேண்டாம். இந்த அதிகப்படியான வெப்பம், பேட்டரிக்குத்தான் பெரிய எமன். அதற்காகத்தான் INGLO எனும் ப்ளாட்ஃபார்மிலும், LFP (Lithium Iron Phosphate) எனும் Blade Battery தொழில்நுட்பத்திலும் இந்த BE 6 காரைப் பார்த்துப் பார்த்துத் தயார் செய்திருக்கிறது மஹிந்திரா. இந்த பிளேடு பேட்டரி எனும் டெக்னாலஜி BYD நிறுவனத்தினுடையது.
இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தயாரிப்பதில் கரை கண்ட நிறுவனம். BYD பேட்டரி என்றால், பயப்படத் தேவையில்லை என்கிற சூழல் இருந்து வந்தது. என்னதான், பேட்டரி காரணமில்லை என்று சொல்லப்பட்டாலும், இப்போது அதற்கும் ஒரு கமா போட்டிருக்கிறது இந்தக் கார் தீ விபத்துச் சம்பவம். டாப் செல்லிங் மாடலான அந்தச் சிவப்பு நிற மஹிந்திரா கார், தீயில் கருகி கறுப்பு நிறமாகிப் போனதைப் பார்க்கவே திகிலாகத்தான் இருக்கிறது.

இதற்கு முன்பு பேட்டரி மீது மட்டும்தான் ஒரு பயம் இருந்து கொண்டிருந்தது. இப்போது டிரைவிங் ஸ்டைலுக்குமா? என்னப்பா, எலெக்ட்ரிக் கார் வாங்கலாமா? வேண்டாமா?
















