கோவில்பட்டி: `யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, திமுக கூட்டணி வெற்றி பெறுவது...
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர்: பிள்ளையாருக்கு வெண்ணெய்க்காப்பு, பிள்ளைவரம் தரும் கிராதமூர்த்தி தரிசனம்!
தமிழகத்தின் புண்ணியத்தலங்களில் கும்பகோணத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. திரும்பிய திசையெல்லாம் கோயில்கள்.
அண்ணாந்து பார்த்தால் கோபுரக் கலசங்கள் என ஊரே தெய்வாம்சம் பொருந்திக் காணப்படுவதால் இதற்கு கோயில்களின் நகரம் என்கிற சிறப்புப் பெயரும் உண்டு. ஏன் கும்பகோணத்தில் மட்டும் இவ்வளவு கோயில்கள்... அதற்கு விடை சொல்கிறது புராணம்.
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பிரளயம் தோன்றி பூமியை நிறைக்கும். அதன் பின் புதிய சிருஷ்டி உண்டாகும். சகல சக்திகளும் பரமேஸ்வரனுக்குள் அடங்கிவிடும். அப்படிபட்ட பிரளயத்தின் போது அமிர்தத்தை ஓர் கலசத்தில் ஊற்றி சிருஷ்டி ரகசியத்தையும் வைத்தும் பிரம்மன் அதைப் பாதுகாப்பாக வைத்தார். பிரளயத்தில் சகலமும் நீருக்குள் மூழ்கிப்போக அமிர்தக் குடம் மட்டும் மிதந்துவந்தது.

நெடுந்தூரம் மிதந்த கலசத்தில் இருந்த தர்ப்பையும் மாவிலைகளும் கீழே விழ அங்கு வன்னி மரங்களும் லிங்கமும் தோன்றின. சமிவனம் என்று அந்த இடத்துக்குப் பெயர் ஏற்பட்டது. லிங்கமும் சமிவனேசர் என்ற பெயர் கொண்டது.
தொடந்து அமுதக் கலசம் தென்கிழக்காக மேலும் அதிலிருந்து உறி, தேங்காய் ஆகியன விழ அங்கு சோமநாதர் கோயில், நாரிகேள லிங்கம் (அபிமுகேசம்) ஆகியன தோன்றின.
வில்வம் விழுந்த இடத்தில் தோன்றிய லிங்கம் நாகேஸ்வரர் கோயிலானது. கலசத்தைச் சுற்றியிருந்த புனித நூல் (பூணூல்) விழுந்து சிதறிய இடத்தில் தோன்றிய லிங்கம் உபவீதேசர் ஆனது.
அமுதக் கலசம் தொடர்ந்து மிதந்து செல்ல ஓர் இடத்தில் ஈசன் வேடன் வடிவம் தாங்கி கும்பத்தின் மீது அம்பு எய்தார். அமுதக் கலசத்தின் வாய்ப் பகுதி விளிம்பு, தெறித்து விழுந்த இடம் குடவாயில் என்னும் திருத்தலமானது.
சிவபெருமான் நின்று அம்புப் பிரயோகம் செய்த இடம், பாணபுரி (பாணாதுறை) ஆனது; ஈசனோ பாணபுரீசர் ஆனார். கலசம் குப்புறக் கவிழ்ந்ததால், அதிலிருந்த அமுதம் நான்கு திசைகளிலும் பெருகிப் பாய்ந்தது.
இரண்டு இடங்களில், குளமாகவும் அமுதம் தேங்கி நின்றது. இரண்டு குளங்களும் முறையே பொற்றாமரைக் குளமாகவும் மகாமகக் குளமாகவும் அழைக்கப்படுகின்றன.
அமுதக் கலசம் தங்கிய இடம் என்பதால், இந்தத் திருத்தலம் கும்ப கோணம் ஆனது. இலக்கியங்களில் குடமூக்கு (கும்பத்தின் மூக்குப் பகுதி - அமுதம் வழிந்த பகுதி) என்று குறிப்பிடப்பட்டாலும், மக்கள் வழக்கில் கும்பகோணம்தான்.

வருடம்தோறும் மாசி மகத்தில் இங்கே திருவிழா களைகட்டும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் மகாமகமோ, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும். இந்தியா முழுவதும் நடைபெறும் கும்பமேளாக்களுக்கு இணையானது கும்பகோணம் மகாமகம்.
அப்படிப்பட்ட தலத்தில் ஈசன் ஆதிகும்பேஸ்வரராக அருளும் தலம் அற்புதமானது. வாருங்கள் இத்தலத்தின் மகிமையை அறிந்துகொள்வோம்.
கும்பேஸ்வரர் ஆலய கருவறைகளின் அமைப்பு சோமாஸ்கந்த வடிவத்தில் சுவாமி சந்நிதி, கார்த்திகேயர் சந்நிதி, அம்பாள் சந்நிதி என்ற அமைப்பில் உள்ளது.
இங்கே இறைவன் ஆதிகும்பேஸ்வரராக அருள்கிறார் என்றால், பிள்ளையாரும் ஆதிவிநாயகராகத் தரிசனம் தருகிறார். அமுதக் கலசம் தங்கிய இடத்தில், மண்ணையும் அமுதத்தையும் குழைத்து லிங்கம் ஏற்படுத்தி, அதனுள் தாமே புகுந்து, சிவ பெருமான், ஆதிகும்பேசர் ஆனார்.
அம்பிகையும் உடன் தோன்றி மங்களாம்பிகை ஆனார். அம்மையும் அப்பனும் இங்கு எழுந்தருள்வதற்கு முன்னால், தாமும் முன் தோன்றி அவர்களை வழிபட்டு நின்றாராம் விநாயகர். எனவே, ஆதிவிநாயகர் என்று பெயர் பெற்றார்
சுவாமி சந்நிதிக்கு இடப் புறத்தில் கிழக்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள் அம்பிகை. தாமரைப் பீடத்தில், நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்கும் சதுர்புஜ நாயகி இவள். அம்பாளின் கரங்கள் சற்றே வித்தியாசமானவை.
வலதுமேல் கரத்தில் கெண்டி, இடதுமேல் கரத்தில் ஜப மாலை, வலது கீழ்க்கரம் அபய ஹஸ்தம், இடது கீழ்க் கரம் ‘ஊரு ஹஸ்தம்’ (தொடை மீது ஊன்றியபடி) கொண்டு காட்சி தருகிறாள்.
அம்பாளின் திருப்பாதங்களைக் காண்கிறோம். வலப்பாதத்தை, இடப்பாதத்தை விட லேசாக முன்னால் வைத்து, பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரத் தயாராக நிற்கிறாள் அம்பிகை.
ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் அம்பாள் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. அம்பிகையின் அருள்பீடங்களில் ஒன்றாகவும், மந்திர பீடமாகவும் திகழ்கிறது இது. இதனாலேயே, அம்பாளுக்கு மந்திர பீடேஸ்வரி என்றொரு திருநாமமும் உண்டு.

இந்தக் கோயிலில் பிள்ளையார் நவநீத விநாயகராகவும் அருள்கிறார். துர்வாசர் அளித்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாம் காமதேனு அம்பிகையின் இடப்புறம் கணபதியை பிரதிஷ்டை செய்தது.
தனது குளம்புகளால் தோண்டி தீர்த்தம் வரவழைத்தது. கணபதியையும், அம்பாள்- சிவனையும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டது. அதனால் விரைவில் பலன் கிடைத்து சாபவிமோசனம் பெற்றது. அந்த மகிழ்ச்சியில் தனது பாலிலிருந்து வெண்ணெய் எடுத்து கணபதியின் திருமேனியில் பூசி வழிபட்டது காமதேனு என்கிறது தலபுராணம்.
இந்த நவநீத கணபதிக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, அம்பிகையையும் அப்பனையும் வழிபட்டால், எல்லா வித தோஷங்களும் பாவங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.
வேட வடிவம் தாங்கி, அமுதக் கலசத்தை வில்லால் அடித்து உடைத்தாரே, அந்தச் சிவனாரின் வடிவமே கிராதமூர்த்தி. நவநீத விநாயகருக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, கிராதமூர்த்தியை வணங்கினால், மகப்பேறு இல்லாதவர்களுக்குக் கட்டாயம் மகப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்கே ஈசனுக்குப் பௌர்ணமி தோறும், புனுகுச் சட்டம் சார்த்தப்படுகிறது. கும்பேஸ்வரரை வழிபடும் அன்பர்களுக்கு, நோய்நொடி இல்லாத நீண்ட ஆயுளும், யோகங்கள் கூடிய வாழ்வும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
கும்பகோணம் செல்லும் பக்தர்கள் தவறாமல் ஆதி கும்பேஸ்வரரைத் தரிசித்து வாருங்கள். வாழ்வில் சகல நலன்களும் உண்டாகும்.




















