செய்திகள் :

98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் கே பாப் பாடல் - ஆஸ்கர் மேடையில் ஏற்பட்ட சலசலப்பு!

post image

98வது ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட்டிலுள்ள டால்பி தியேட்டரில் இன்று அதிகாலையில் (இந்திய நேரப்படி) தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது.

வருடந்தோறும் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறும். அப்படி இந்த வருடமும் ஆஸ்கர் மேடையில் பல்வேறு சுவாரஸ்யங்களும், பல முக்கியமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

எப்போதுமே 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு சிறந்த நடிகர் தேர்வு (Best Casting) என புதியதாகவும் ஒரு பிரிவைச் சேர்த்திருக்கிறார்கள்.

Golden - First K Pop Song Won Oscars
Golden - First K Pop Song Won Oscars

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோனன் ஓ'ப்ரையன் (Conan O'Brien) கடந்தாண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

நடிகை பிரியங்கா சோப்ரா இந்தாண்டு சர்வதேச சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக வந்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிலும் பிரியங்கா சோப்ரா விருது வழங்குவதற்காக வந்திருந்தார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை 'கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்' (KPop Demon Hunters) திரைப்படம் வென்றிருக்கிறது. விருதை இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான மேகி காங் (Maggie Kang) பெற்றிருக்கிறார்.

தென் கொரியா வம்சாவளியைச் சேர்ந்த முதல் இயக்குநர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். விருது பெற்றதும் மேடையில், "என்னைப்போலவே தோற்றம் கொண்டவர்களுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள கொரியர்களுக்காகவும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

Golden - First K Pop Song Won Oscars
Golden - First K Pop Song Won Oscars

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'கோல்டன்' என்கிற பாடலுக்கும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.

ஆஸ்கர் விருது வென்ற முதல் கே-பாப் என்ற பெருமையும் இப்பாடலுக்கு கிடைத்திருக்கிறது. ஆஸ்கர் விருதுகளுக்கு தகுதி பெறுவதற்கு அவை திரைப்படங்களுக்கென பிரத்யேகமாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், பெரும்பாலான கே-பாப் பாடல்கள் சுயாதீன பாடல்களாகவே வெளியாகியிருக்கின்றன.

2020-ம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்கர் வரலாற்றில் கொரியன் திரைப்படங்கள் முத்திரைகளைப் பதிக்கத் தொடங்கினாலும், இசையைப் பொறுத்தமட்டில் வெஸ்டர்ன் வகைக்கே ஆஸ்கர் முக்கியத்துவம் கொடுத்து வந்தது.

ஆனால், 'கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டது.

இதன் மூலம் ஆஸ்கர் நடுவர்கள் புறக்கணித்துவிட முடியாத இடத்தையும் இத்திரைப்படம் பெற்று, இப்போது விருதையும் தட்டிச் சென்றிருக்கிறது.

Golden - First K Pop Song Won Oscars
Golden - First K Pop Song Won Oscars

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்ற பிறகு இப்பாடலை எழுதியவர், பாடியவர் என இப்பாடலுக்காக வேலை பார்த்த அனைவரும் மேடையேறினார்கள்.

இந்தப் பாடலின் இணை பாடலாசிரியர் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆர்கெஸ்ட்ரா ஒலியை ஒலிக்கச் செய்திருக்கிறது. மேடையிலிருந்து மின் விளக்குகளும் சரியாக வேலை செய்யாதபடி செய்திருக்கிறார்கள். இப்படியான சில சலசலப்புகள் இவர்கள் பேசும்போது நடந்திருக்கிறது.

"மற்றவர்கள் பேசுவதற்கு அதிக அளவில் நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வரலாற்று தருணத்தில் 'கோல்டன்' பாடல் குழுவிற்கு பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை" என கே-பாப் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் - ஆஸ்கர் மேடையில் 'சின்னர்ஸ்' செய்த சம்பவங்கள்!

98வது ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட்டிலுள்ள டால்பி தியேட்டரில் இன்று அதிகாலையில் (இந்திய நேரப்படி) தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. வருடந்தோறும் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான மற்றும... மேலும் பார்க்க