குலசேகரன்பட்டினம்: தம்பதியினர் மீது கோயில் பணியாளர்கள் தாக்குதல்; பரவும் வீடியோ....
கும்பகோணம்: `மக்கள் புறக்கணித்ததால் இனி அங்கு அமரப் போவதில்லை' - திமுக துணை மேயர்!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில், மாமன்ற கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி மேயர் சவரணன் தலைமையில் நடந்தது. தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்ட அரங்கில், முதல்வர் விஜய் போட்டோ மட்டுமே இருந்தது. கூட்டத்திற்கு முன்னதாக, திமுக கவுன்சிலர்கள் அனைவரும் தங்களின் இருக்கைக்கு முன் இருந்த மேசையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை வைத்தப்படி கூடத்தில் கலந்துக்கொண்டனர். இதனால் அரங்கத்தில் அதிக அளவில் ஸ்டாலின் போட்டோக்கள் இருந்தன.

இதையடுத்து, கூட்டம் தொடங்கியதும், மண்டல குழு தலைவரும், திமுக கவுன்சிலருமான அசோக்குமார், ஆதரவாளர்களுடன், `எங்கள் தலைவர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியே தீருவோம்' என மேடைக்குச் சென்று, ஆணி அடித்து மாட்டினார். இதைத் தொடர்ந்து, மேலும் சில திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டோவையும், அதிமுக கவுன்சிலர் குமரேசன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டோவையும், காங்கிரஸ் கவுன்சிலர் ஐயப்பன் முன்னாள் முதல்வர் காமராஜர் போட்டோவையும் மேடையில் மாட்டினர். பிறகு, ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் தலைவர்களின் பெயரை சொல்லி கோஷமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மேயர் சரவணன், `எல்லோர் போட்டோக்களும் இருக்கும் போது, எல்லா அரசு அலுவலகங்களிலும் இருக்க வேண்டிய காந்தி படம் இதில் இல்லை. காந்தி படத்தை மாட்டுங்கள்' என அலுவலர்களிடம் கூறிய நிலையில், காந்தி போட்டோவும் மாட்டப்பட்டன. திமுக-வை சேர்ந்த துணை மேயர் தமிழழகன், மேடையில் தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் கவுன்சிலர்களுடன் அமர்ந்திருந்தார்.

மேயர் சரவணன் அவரை மேடைக்கு அழைத்தபோது, "சட்டமன்ற தேர்தலில், நாங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். இந்த புறக்கணிப்பை வெளிப்படுத்தும் விதமாக, தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து அரசு காரைப் பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்து அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். அதேபோல், துணை மேயருக்கான இருக்கையிலும் இனி அமரப்போவதில்லை" என்றார்.















