பசிபிக்கில் தொடங்கிய பேராபத்து; ஒருபுறம் வறட்சி மறுபுறம் கனமழை.. உலகை அச்சுறுத்த...
`ஏன் என்னை தனியே விட்டுப் போனாய்?' - கொலை செய்துவிட்டு இன்ஸ்டாவில் உருகிய மணப்பெண் சியா கோயல்
கடந்த பிப்ரவரியில் தங்களின் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்து, நவம்பரில் தனியார் விமானங்கள் மற்றும் அரண்மனைகள் என பிரம்மாண்டமான திருமணத்திற்கு தயாராகி வந்தனர் கேத்தன் விஷால் அகர்வால் மற்றும் சியா கோயல். ஆனால், இந்த ஆடம்பர திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே, மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து தவறி விழுந்து கேத்தன் அகர்வால் உயிரிழந்தார். இந்த மரணம் ஒரு விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்றும், அதன் முக்கிய குற்றவாளி கேத்தனின் வருங்கால மனைவி சியா கோயல்தான் என்றும் காவல்துறை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை கடந்த ஜூன் 18 அன்று நடந்துள்ளது. கேத்தனின் மரண செய்தி வெளிவந்த பிறகு, சியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அதில், கேத்தனின் திடீர் இழப்பு குறித்து தனது ஆழ்ந்த துக்கத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தியிருந்தார். தற்போது அந்த இன்ஸ்டாகிராம் பதிவின் ஸ்கிரீன்ஷாட், பெரும் கவனம் பெற்று வருகிறது.

“என் பிறந்தநாளன்றே நீ என்னை விட்டுப் போய்விட்டாய். நம் திருமணம் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தபோது நீ சென்றுவிட்டாய். ஏன் எனக்கு இப்படி செய்தாய் என்று என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு கனவுகள் இருந்தன, பதில்களே கிடைக்காத கேள்விகள் இருந்தன. நான் உன்னை இவ்வளவு நேசித்தபோது ஏன் என்னை விட்டுச் சென்றாய்? உன் ஆன்மா சாந்தியடையட்டும்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், கேத்தன் காரின் முன் இருக்கையில் திரும்பி யாரிடமோ பேசும் வீடியோவும், இருவரும் ஒரு காதல் பாடலுக்கு நடனமாடும் காட்சியும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. "நீ இங்கேயே இருக்கிறாய் என்று என் மனதிற்குத் தெரியும். திரும்பி வா," என்ற அர்த்தம் தரும் இந்தி வரியும் அதில் இடம்பெற்றிருந்தது.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான கேத்தன், தனது குடும்பத்தின் ரியல் எஸ்டேட் வணிகத்தின் இயக்குநராக இருந்தார். லோகாகட் கோட்டையில் சுமார் 400 அடி பள்ளத்தில் விழுந்து அவர் உயிரிழந்தார். அப்போது, பலத்த காற்று வீசியதால் கோட்டைக்குச் சென்றிருந்தபோது கேத்தன் கால் தவறி விழுந்துவிட்டதாக அவரது வருங்கால மனைவி சியா, லோனாவாலா ஊரக காவல்துறையிடம் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், புனே ஊரக காவல்துறையின் தீவிரமான விசாரணையில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில் கூறுகையில், "சம்பவத்தின் சூழ்நிலைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால், பல கோணங்களில் விசாரணையைத் தொடங்கினோம்," என்றார். விசாரணையில், கேத்தனும் சியாவும், இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவிருந்தது தெரியவந்தது. இவர்களின் திருமணத்திற்காக ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையை முன்பதிவு செய்வது உட்பட இரு குடும்பத்தினரும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

காவல்துறை விசாரணையின்படி, சியா கோயலுக்கு புனேவைச் சேர்ந்த 22 வயதான சேத்தன் பாபுலால் சௌத்ரி என்பவருடனும் தொடர்பு இருந்துள்ளது. அகர்வாலுடனான சியாவின் உறவில் சேத்தன் அதிருப்தி அடைந்ததாகவும், அவரைத் தனது காதலுக்கு ஒரு தடையாகக் கருதியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இருவரும் சேர்ந்து அகர்வாலை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
திட்டத்தின்படி, சியா கேத்தனை சாதாரணமாக வெளியே செல்வதாகக் கூறி லோகாகட் கோட்டைக்கு வரவழைத்துள்ளார். பின்னர், சேத்தனும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இருவரும் சேர்ந்து கேத்தனைப் பின்புறமாகத் தள்ளி பள்ளத்தில் விழச் செய்து கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஒரு விபத்து போல சித்தரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கேத்தனின் தந்தை விஷால் அகர்வால் அளித்த புகாரின் பேரில், செவ்வாயன்று புனே ஊரக காவல்துறை சியா மற்றும் சேத்தன் இருவரையும் கைது செய்தது. உள்ளூர் குற்றப்பிரிவு சேத்தனைக் காவலில் எடுத்து விசாரித்தபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கொலை மற்றும் குற்றவியல் சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"விசாரணையின் போது, கோயலுக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. அகர்வாலைத் திருமணம் செய்ய கோயல் விரும்பவில்லை என்றும், சௌத்ரியுடனான தனது உறவுக்கு அவர் ஒரு தடையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த லோகாகட் கோட்டை, மராட்டியப் பேரரசை நிறுவிய சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு முக்கிய இடமாகும். இது மகாராஷ்டிராவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட 12 கோட்டைகளில் ஒன்றாகும். மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே இது மிகவும் பிரபலமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.


















