Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு...
குலசேகரன்பட்டினம்: காணிக்கை எண்ணும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதா? - பக்தர்கள் புகார்
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்று, குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த அக்டோபர் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 25-ம் தேதி நிறைவடைந்தது. 26-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தசராத் திருவிழா நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து தசரா திருவிழா நாட்களில் பக்தர்கள் கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை நடைபெற்ற இப்பணிகள், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஆண்டில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 15-ம் தேதி கந்தசஷ்டி விழா நிறைவடைந்த நிலையில், நேற்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது, உள்ளூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது.

”வழக்கமாக கோயில்களில் உண்டியல் எண்ணும் பணிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உழவாரப்பணி குழுவினர், மகளிர் அமைப்பினர், மகளிர் குழுவினர், தன்னார்வலர்கள், ஓய்வுபெற்றவர்கள் போன்றோர்களையே ஈடுபடுத்துவது வழக்கம். இப்பணிக்கு வருபவர்கள் சுய விருப்பத்தின் பேரிலும் சேவை நோக்கத்திலும்தான் வருகிறார்கள் என்றாலும்கூட, இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், மாணவர்களை கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தியது தவறு.
கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் அவர்களையும் காணிக்கை எண்ணும் பணிக்கு அழைத்ததும் தவறுதான் என, பொதுமக்களும் பக்தர்களும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திருக்கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகத்திடம் விளக்கம் கேட்டபோது, ”தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் வட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், காணிக்கை எண்ணும் பணிக்கு தேவைப்பட்டால் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என, குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டார்களாம்.

அதன் அடிப்படையிலேயே கோயிலின் பிற ஊழியர்கள் மாணவர்களை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து பக்தர்களின் புகார் எனக்கு தெரிய வந்ததும் மாணவர்களை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்து விடுவித்ததுடன், மதியம் அன்னதானத்தில் மாணவர்களை சாப்பிட வைத்து வீட்டுக்கு அனுப்பி விட்டோம். இனி வரும் காலங்களில் உண்டியல் எண்ணும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என திருக்கோயில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
















