``இந்தச் சூழல் வந்தால், அன்றே பாடுவதை நிறுத்திவிடுவேன்" - மனம் திறந்து பேசிய ஸ்ர...
கூட்டணிக்கு தனி ரூட் பிடித்த ஆனந்த்; கடுப்பான விஜய்! தவெக - NDA கூட்டணி(?) நிலவரம் என்ன?
தவெக - NDA இடையே தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தவெக - NDA வுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என அடித்து கூறுகின்றனர் அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள். நிலவரம் என்னவென இறங்கி விசாரித்தோம்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் கட்சியின் மா.செக்களுடன் வீடியோ வழி ஒரு அவசர கூட்டத்தை நடத்தியிருந்தார்.
அதில்தான், 'நாம் கூட்டணிக்கு செல்லலாமா வேண்டாமா?, கூட்டணிக்கு சென்றால் உங்களில் பல பேருக்கு சீட் கிடைக்காதே?' போன்ற கேள்விகளை ஆனந்த் கேட்டிருந்தார். மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு செல்ல வேண்டுமென்றே விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்தத் தகவல் வெளியான பிறகுதான் தவெக - NDA கூட்டணி என்கிற செய்தி தீயாக பரவத் தொடங்கியது. அரசியல் வட்டாரமே பரபரப்பானது. இப்போது தவெக - NDA கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை எனக் கூறும் சீனியர்கள் சிலரிடம் ஆனந்த் நடத்திய மா.செக்கள் கூட்டத்தைப் பற்றி கேட்டோம்.
'ஆனந்த் அந்த கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு நேராக சென்று தலைவரைத்தான் சந்தித்தார். அவர் அலுவலகத்துக்கு வரும் முன்பே தவெக - NDA கூட்டணி என்கிற செய்தி எல்லா பக்கமும் பரவி விட்டது. அதை கண்டு தலைவரே டென்ஷனாகிவிட்டார்.

'ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க. அவங்கதான் நம்ம கூட கூட்டணிக்கு விரும்புறாங்க. நாம ஒண்ணும் கூட்டணிக்கு விருப்பப்படல. கூட்டத்துல பேசுற விஷயங்கள் அப்படியே நியூஸ் ஆகுற அளவுக்குதான் ஒரு கூட்டத்தை நடத்துவீங்களா? இனிமே நீங்களா எதுவும் செய்ய வேணாம்...' என ஆனந்திடம் தலைவர் உஷ்ணமாகிவிட்டார்.
அதனால்தான் மறுநாளே தி.நகரில் 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்!' என்பதை பிரதானப்படுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை நடத்தினார். அதில் மைக் பிடித்து தலைவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றும் பேசினார்.' என்கின்றனர் அந்த சீனியர்கள்.
ஆனந்த் ஆட்டத்தின் பின்னணி
ஆனந்த் கூட்டணிக்கு தனி ரூட் பிடிக்க காரணம் என்னவென்பதை அறிய கட்சியின் உள் விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம். 'கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் இதற்கு முக்கிய காரணம். ஜான், ஆதவ் போன்றோருக்கு NDA வுடன் கூட்டணி செல்ல விரும்பவில்லை. ஆனால், ஆனந்துக்கு அந்த தேவை இருக்கிறது. கட்சிக்குள் ஆதவ்வுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அவருக்கு உறுத்தலாக இருக்கிறது.
ஆதவ் தனி ஆவர்த்தனம் செய்வதாக ஆனந்த் தரப்பு நினைக்கிறது. போதாக்குறைக்கு விஜய் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியின் முழு பொறுப்பையும் ஆதவ் ஏற்றுக்கொண்டு விட்டார். அத்தோடு சேர்த்து பெரம்பூருக்கு அருகேயே இருக்கும் வில்லிவாக்கம் தொகுதியையும் கேட்டு வாங்கிவிட்டார்.

தலைவர் பெரம்பூரில் உண்டாக்கும் தாக்கத்திலேயே வில்லிவாக்கத்தில் தன்னால் வென்றுவிட முடியுமென ஆதவ் கணக்கு போடுகிறார். ஆதவ் வென்று நாம் தோற்றால் அது கௌரவக் குறைச்சல் என ஆனந்த் நினைக்கிறார். அதனால்தான் தி.நகர் தொகுதியில் எப்படியாவது வெல்ல வேண்டுமென எல்லா வழிகளிலும் முயல்கிறார்.
தி.நகரில் பாஜகவுக்கான வாக்குவங்கி கணிசமாக இருக்கிறது. பாஜக நிர்வாகிகளின் உதவியை நாடினால் தன்னால் வெல்ல முடியுமென ஆனந்த் நினைக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழியே அதற்கான முயற்சியிலும் இறங்கினார்.

அந்த லைனில்தான் தவெக - NDA கூட்டணியையும் முன்னெடுக்க முயன்றிருக்கிறார் ஆனந்த். ஆனால், தலைவர் ஆனந்தையெல்லாம் தாண்டி அவருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு சிலருடன்தான் கூட்டணி பற்றி பேசி காய்களை நகர்த்தி வருகிறார். அது புரியாமல் ஈகோ மோதலில் ஆனந்த் அவசரகதியில் நடத்திய மா.செக்கள் கூட்டம்தான் அத்தனை சர்ச்சைக்கும் காரணம்' என்கின்றனர்.
தலைவருக்கே விருப்பமில்லை
'இப்படியொரு கூட்டணிக்கு செல்ல தலைவருக்கே விருப்பமில்லை. குறுகிய காலத்தில் அந்த கூட்டணி நல்ல பலனை கொடுப்பதாக இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் தன்னுடைய அரசியலுக்கே அது பிரச்னையாக அமையும் என தலைவர் நினைக்கிறார்' எனக் கூறும் விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள், 'சூழலை உணர்ந்து நெளிவு சுழிவு அறிந்தே காய்களை நகர்த்த வேண்டும் என்பதால்தான் NDA வுக்கு நேரடியாக 'நோ' சொல்லவில்லை.
மாறாக, 90 சீட்டுகள் முதல்வர் பதவி என்றுதான் எங்களின் டிமாண்டையே முன்வைத்தோம். அதனால்தான் டெல்லி எங்களை கூட்டணிக்குள் இழுக்க முயன்றும் எடப்பாடி அதற்கான முன்னெடுப்புகள் எதையும் செய்யாமல் இருக்கிறார். 90 சீட்டுகள் + முதல்வர் பதவி என்பதே சுருக்கமாக 'நோ' தான் எடப்பாடி உணர்ந்திருக்கிறார்' என்கின்றனர் அந்த நிர்வாகிகள்.

எப்படியும் கூட்டணிக்கு செல்லப்போவதில்லை என்பதை தன்னுடைய தொண்டர்களுக்கு கடத்தும் விதமாகத்தான் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறும்போதே கார் மேல் ஏறி கையசைத்து வெற்றி முத்திரையை விஜய் காட்டி சென்றதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.
விஜய் தலையை சுற்றி மூக்கை தொட்டு 'நோ' சொன்னாலும் டெல்லி மேலிடம் இன்னும் இந்த கூட்டணியை சாத்தியப்படுத்தி விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது. 'மார்ச் 30' தான் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது. அதுவரை விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க நேரமிருப்பதாக நினைக்கிறது பாஜக!















