ராகுல் காந்தி, பினராயி விஜயன் முன்னிலையில் வி.டி.சதீசன் கேரள முதல்வராக பதவியேற்...
கேரளம்: `மகளிர் இலவச பஸ் பயணம், முதியோருக்கு சிறப்பு துறை'- புதிய முதல்வர் வி.டி.சதீசன் அறிவிப்பு!
கேரளத்தின் 13-வது முதல்வராக வி.டி.சதீசன் இன்று பதவி ஏற்றார். திருவனந்தபுரம் செண்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தலைமைச் செயலாளர் கே.ஜெயதிலக், வி.டி. சதீசனைப் பதவியேற்குமாறு அழைத்தார். ஆளுநர் விஸ்வநாத் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 'வடசேரி தாமோதரமேனன் சதீசன் ஆகிய நான்...' என்று கூறித் தனது உறுதிமொழியைத் தொடங்கிய வி.டி.சதீசன் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பதவியேற்ற பின்னர் தலைமைச் செயலகம் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் வி.டி.சதீசன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் இந்திரா கேரண்டி என உறுதி அளிக்கப்பட்ட 6 வாக்குறுதிகளில் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதன் முன்னோட்டமாக சில திட்டங்களை அறிவித்தார் முதல்வர் வி.டி.சதீசன். கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் ஜூன் 15 முதல் மகளிருக்கு இலவசப் பயணம் தொடங்கும் என்று முதலமைச்சர் வி.டி.சதீசன் கூறினார். இதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதியோர்களுக்கென ஒரு சிறப்புத் துறையை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. நாட்டில் முதியோர்களுக்கென ஒரு சிறப்புத் துறை செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் வி.டி.சதீசன் கூறினார். ஆஷா பணியாளர்களின் மதிப்பூதியம் ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளது. ஆஷா பணியாளர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக அவர்களின் மதிப்பூதியத்தில் 3000 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், இதன் மூலம் ஆஷா பணியாளர்களின் மாதச் சம்பளம் 9000 ரூபாயிலிருந்து 12000 ரூபாயாக உயரும் என்றும் முதலமைச்சர் வி. டி.சதீசன் தெரிவித்தார். அங்கன்வாடிப் பணியாளர்களின் சம்பளம் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்களின் சம்பளமும் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பாளர்களின் சம்பளமும் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது.










