GT vs CSK: "சென்னை, பெங்களூரு அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம்; ஆனால்..." - ச...
‘கொங்கு மண்டல திமுக-வில் ஒரு சாதிக்கு மட்டுமே முக்கியத்துவம்’ – பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!
தி.மு.க கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளராக மீனா ஜெயக்குமார், அண்மையில் அ.தி.மு.க-வின் எஸ்.பி. வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட, தி.மு.க. ஆதரவாளர்களிடம் இருந்து கடும் எதிர்வினை வந்தது.
இது தொடர்பாக மீனா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், “நான் கொலை குற்றமா செய்தேன்? தீவிரவாதியை பார்த்து வந்தோமோ? இதற்கு இவ்வளவு எதிர்ப்பு? இந்த கட்சி (தி.மு.க) தோற்க காரணமே, சோசியல் மீடியாவில் இப்படி ஒவ்வொருவரை பற்றியும் கமெண்ட் போடுபவர்கள்தான். லீமா ரோஸ் என் கூட பிறந்த அக்கா மாதிரி. 20 வருட குடும்ப நண்பர். முதலில் நாங்கள் நண்பர்கள், அப்புறம்தான் கட்சிக்குள் வந்தோம்.

’ஒரு சாதிக்கு மட்டுமே முக்கியத்துவம்’
அவர் என்ன கெடுதல் செய்தார்? அவரது தொழிலை வைத்து விமர்சிப்பது முறையல்ல. டாஸ்மாக்கும்தான் உயிரை கொல்லும் தொழில். நீங்கள் குடிப்பதால் தான் நிறைய கடைகளை வைத்துள்ளார்கள். அதை மூடினால் பாலக்காடு அல்லது வேறு ஊர்களுக்கு சென்று குடிக்க செல்ல மாட்டார்களா?. லீமா ரோஸ் பல பேருக்கு உதவி செய்துள்ளார். பலரை பணக்காரர்களாக மாற்றியிருக்கிறார். நான் கட்சிக்காக ஓடி ஓடி உழைத்துள்ளேன். தலைவர் காலில் விழுந்து பதவி பெற முடியும். ஆனால் உழைப்பிற்கான அங்கீகாரம் தானாக வர வேண்டும்.

தி.மு.க. சாதி, மதம் பார்க்காத அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி. ஆனால் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதியை தவிர வேறு யாருக்கும் இடமே இருக்காது. ஒரு சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. நான் எந்த சாதிக்கும் எதிரானவள் இல்லை. நான் கட்சி மாறவில்லை. ஆனால் நீங்கள் பேசுவதை பார்க்கும்போது, கட்சி மாறலாம் என தோன்றுகிறது.
நான் கட்சி பணத்தில் 10 பைசா அனுபவிக்கவில்லை. செலவுதான் செய்துள்ளோம். திறமையில்லாதவர்களை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். கைக்கு அடக்கமான வாய் பேசாதவர்களுக்கு தான் பொறுப்பு தருகிறார்கள். ஒரு கம்பெனி வளர வேண்டுமென்றால் திறமையானவர்கள் இருக்க வேண்டும். அதுபோல கட்சி வளரவும் திறமையானவர்கள் இருக்க வேண்டும்.
என்னை ஒதுக்கினால் நான் குறைந்து போக போவதில்லை. எதற்கு நான் பயப்பட வேண்டும்? எனது கட்சி பதவியை எடுக்க வேண்டும் என சொல்கிறார்கள். தலைவரிடம் சொல்லி பதவியை எடுக்க சொல்லுங்கள்” என குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

’ஒற்றுமை இருந்தால் தான் வெல்ல முடியும்’
இதேபோல கோவை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் சாந்தி முருகன் தனது முகநூல் பக்கத்தில், “பொத்தாம் பொதுவாக கவுன்சிலர்கள் தான் தி.மு.க தோல்வி அடைந்தது என்று முகநூலில் பதிவு போடுவதை நிறுத்தி விடுங்கள். கட்சியில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றியிருந்தால். கட்டாயம் வென்று இருக்கலாம். இவங்களுக்கு சீட் குடுத்தா அவங்களுக்கு பொறாமை. அவங்களுக்கு சீட் குடுத்தா இவங்களுக்கு பொறாமை. இவங்களுக்கு எதுக்கு நம்ம வேலை செய்யனும் அப்படிங்கிற எண்ணம் இருக்கும் வரையில் ஒன்றும் செய்ய முடியாது. முதலில் ஒற்றுமையாக இருந்தால் தான் எதையும் வெல்ல முடியும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவுகள் கோவை தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.












