நீளிரா: "ஈழம் தொடர்பான கதைகளைச் சொல்லணுங்கிறது என்னுடைய கனவு" - இயக்குநர் கார்த்...
சமையல் சூப்பர் ஸ்டார்: மல்பெரி ஜாம், புடலங்காய் கட்லெட்; சென்னையைக் கலக்கிய போட்டியாளர்கள்!
சமையல் கலையை அங்கீகாரம் கொடுக்க, பிரமாண்ட மேடை அமைத்துக் கொடுக்கும் விதமாக, சக்தி மசாலா வழங்கும் 'அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3 நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம், புதுச்சேரி, சேலம், கோயமுத்தூர், வேலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களைத் தொடர்ந்து தெற்கு சென்னையில் இன்று (மார்ச் 21 - சனிக்கிழமை) போட்டி நடைபெறுகிறது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகிழ் திருமண மண்டபத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. காலை முதலே ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்க வந்திருந்தனர். நிகழ்ச்சியின் நடுவரான செஃப் தீனா, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒரு வாகனத்துக்குச் சரியான நேரத்தில் எரிபொருள் கொடுக்காமல் இருந்தால் அது பழுதாகிவிடும். அதுபோலதான் நம் உடலும். சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். நேரம் தவறி சாப்பிடுவது, இரவு நேரங்களில் தாமதமாகச் சாப்பிடுவது, அதிகமாகச் சாப்பிடுவது, போன்றவ செயல்கள் உடலுக்குச் சுமைதான்.

அதேபோல நாம் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கை அரிசியும், ஒருவரின் உழைப்பின் பலன். அதை வீணாக்குவது உணவை மட்டுமல்ல, உழைப்பையும் மதிக்காததாகும்” என்றார்.
வடபழனி, தாம்பரம், அசோக்நகர், மன்னிவாக்கம், கே.கே நகர், கொளத்தூர், பெருங்களத்தூர், சிட்லப்பாக்கம் எனச் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
தஞ்சாவூர் மட்டன் கோலா உருண்டை, வேப்பம்பூ குழம்பு, முருங்கை கீரை வடை, கேழ்வரகு அடை, கோதுமை ரவை லாப்சி, சக்கரைவள்ளி கிழங்கு லட்டு, கம்பு பணியாரம், தினை பிரியாணி, உளுந்தங்களி, சங்குப்பூ டீ, கறுப்பு கவுனி அரிசி அல்வா, சோற்று கற்றாழை குழம்பு, தூய மல்லி அரிசி முறுக்கு, மல்பெரி ஜாம், புடலங்காய் கட்லெட் எனப் பலவகையான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

உணவுகளைச் சுவைத்துப் பார்த்து, அந்த உணவுகளின் சிறப்புகளை போட்டியாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு மதிப்பெண் வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல் சுற்றில் தேர்வாகும் பத்து பேர், அரங்கில் நடக்கும் நேரடி சமையல் சுற்றில் பங்கேற்பார்கள். அதில் தேர்வு செய்யப்படும் மூன்று பேர், சென்னையில் வரும் மார்ச் 29-ம் தேதி நடைபெறும் மாபெரும் சமையல் சுற்றில் பங்கேற்பார்கள்.



















